தாம்பரம் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை புதுப்பிக்க வேண்டும்: பேரவையில் இ.கருணாநிதி எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 27: தாம்பரம் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை புதுப்பிக்க வேண்டும் என பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ இ.கருணாநிதி வலியுறுத்தினார். சட்டப்பேரவையில் திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பொதுத்துறை, நிதித்துறை, எரிசக்தித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. இதில், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி (திமுக) பேசியதாவது: பல்லாவரம், அனகாபுத்தூர் சாலையை விரிவுபடுத்திட வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கை. தாம்பரம் மாநகராட்சி பகுதிகளிலுள்ள பாதாள சாக்கடை திட்டங்கள் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. அதை புதுப்பிக்க வேண்டும். அதற்காக 86 கோடி ரூபாய் அனுப்பியுள்ளது. அதையும் நிறைவேற்றித் தர வேண்டும். பல்லாவரம் தொகுதியில் உள்ள 135 ஏக்கர் உள்ள திருநீர்மலை ஏரி மிக பெரிய ஏரி. சென்னை சேத்துப்பட்டில் படகு குழாம் இருக்கிறது. சென்னை புறநகர் பகுதியில் படகு குழாம் எதுவும் இல்லை. அது அமைப்பதற்காக பலமுறை சட்டமன்றத்தில் பேசியிருக்கிறேன். ஆக, அதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

திருநீர்மலை ரங்கநாதர் பெருமாள் கோயில் பகுதியில் உள்ள ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தி பொதுமக்கள் நடைபயிற்சி செய்யும் வகையில் மற்றும் மின்விளக்கு அமைத்து, படகு குழாம் அமைத்து சுற்றுலாத்தலமாக அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி தர வேண்டும். பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் சாலையை அகலப்படுத்தும் பணியை உடனடியாக தொடங்க ஆவன செய்ய வேண்டும். தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் – குரோம்பேட்டை பகுதியில் பழுதடைந்த பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தி, புதிதாக குழாய்கள் அமைத்து தர வேண்டும். பல்லாவரம், குரோம்பேட்டை, திருநீர்மலை, பம்மல், அனகாபுத்தூர், அஸ்தினாபுரம் ஆகிய பகுதிகளில் ஒருங்கிணைந்த மழைநீர் கால்வாய்கள் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி தர வேண்டும். தாம்பரம் மாநகராட்சிக்கு குப்பை கொட்டுவதற்கு ஒரு இடம் வருவாய்த்துறை மூலம் தேர்வு செய்து தர வேண்டும்.

குரோம்பேட்டை குமரன்குன்றம் பிரசன்ன யோக ஆஞ்சநேயர் கோயிலுக்கும் பெருமாள் கோயிலுக்கும் கும்பாபிஷேகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் பகுதியில் மேம்பாலத்திற்கு, மறைந்த தமிழ் தென்றல் மறைமலை அடிகளார் பெயரை சூட்டி செயல்படுத்தி தர வேண்டும். பல்லாவரம் கீழ்க்கட்டளை பகுதியில் வீட்டுவசதி வாரியத்திற்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேல்முறையீடு செய்து உரிமையாளர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வழிவகை செய்து தர வேண்டும். திரிசூலம் ஊராட்சிக்கு ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். மீனம்பாக்கம் முதல் இரும்புலியூர் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு