தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் மீண்டும் தலைதூக்கிய பைக், ஆட்டோ ரேஸ்: பீதியில் வாகன ஓட்டிகள்

பூந்தமல்லி: சென்னை தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் நேற்று மீண்டும் பைக், ஆட்டோ ரேஸ் துவங்கியிருக்கிறது. இதனால் அவ்வழியே சென்று வரும் வாகன ஓட்டிகள் பீதியில் உள்ளனர். இவர்களின்மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்துகின்றனர். சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை முற்றிலும் குறைக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். எனினும், சென்னை மெரீனா கடற்கரை, காமராஜர் சாலை, இசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலை, மதுரவாயல்-தாம்பரம் பைபாஸ் சாலை, 400 அடி வெளிவட்ட சாலை ஆகிய பகுதிகளில் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் பைக், ஆட்டோ ரேஸ்கள் நடைபெற்று வருகின்றன. இதன்மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பைக், ஆட்டோ ரேஸ் கலாசாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இதனால் அவ்வழியே சென்று வரும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பீதியில் உள்ளனர். இதுபோன்ற ஆட்டோ, பைக் ரேஸ் பந்தயங்களில் வெற்றி பெற்றால், குறிப்பிட்ட தொகை பரிசு, புகழ் கிடைக்கிறது. இதற்கென தனியே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் தகவல் பரிமாற்றம் நடைபெறுகிறது. இதில் போட்டியிடுபவர்கள் விவரம், போட்டி நடைபெறும் இடங்கள் தெரிவிக்கப்படுகின்றன. இதேபோல், கடந்த 2019-ம் ஆண்டு மதுரவாயல்-தாம்பரம் பைபாஸ் சாலையில் நடைபெற்ற ஒரு ஆட்டோ ரேஸில் மெக்கானிக் பிரபாகரன் பரிதாபமாக பலியானார். பிறகு இதுபோன்ற ரேஸ்களை போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். தற்போது கொரோனா ஊரடங்கினால் பைக், ஆட்டோ ரேஸ்கள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று அதிகாலை தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் மீண்டும் சட்டவிரோதமாக பைக், ஆட்டோ ரேஸ் நடைபெற்றது. இதில் சட்டவிரோதமாக 10-க்கும் மேற்பட்ட ஆட்டோ, 30-க்கும் மேற்பட்ட பைக்குகள் பங்கேற்றன. இதுதொடர்பான வீடியோக்கள் பல்வேறு சமூகவலை தளங்களிலும் வெளியாகி மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியது.இதுகுறித்து தகவலறிந்ததும் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பைபாஸ் சாலை பகுதியில் ஆட்டோ, பைக் ரேஸ் நடத்தியவர்கள் யார் என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்