தாம்பரம் பகுதிகளில் அனுமதியின்றி பேனர்கள் வைத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை ₹25 ஆயிரம் அபராதம்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

தாம்பரம், ஜூலை 2: தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி விளம்பர பதாதைகள், பிளக்ஸ் பேனர்கள் வைத்தால், 3 ஆண்டு சிறை தண்டனையும், ₹25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா எச்சரிக்கை விடுத்துள்ளார். தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விளம்பரப் பதாதைகள், பிளக்ஸ் பேனர்கள் மற்றும் தட்டிகள் வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998 (சட்டம் எண் 35/2022-60 அமல்படுத்தப்பட்டது) பிரிவு 117K முதல் 117U வரையிலான சரத்துகளின்படி விளம்பரப் பலகைகள், பிளக்ஸ் பேனர்கள் மற்றும் தட்டிகள் மாநகராட்சியில் உரிய அனுமதி பெற்று அமைக்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் விதிகள் 2023 விதி எண்.320 முதல் 349களின்படி தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி சமர்ப்பிக்கப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து, ஆணையாளரால் உரிமம் வழங்கப்படும். இதுநாள் வரையிலும் அனுமதி பெறாமல் விளம்பரப் பலகைகள், பிளக்ஸ் பேனர்கள் மற்றும் தட்டிகள் வைத்துள்ளோர் மூன்று நாட்களுக்குள் உரிய பாதுகாப்புடன் தாங்களாகவே விளம்பர பதாதைகள், பிளக்ஸ் பேனர்கள் மற்றும் தட்டிகள் அகற்றிக்கொள்ள வேண்டும். தவறினால் மாநகராட்சி மூலம் அகற்றப்படுவதுடன், உரிய செலவுத்தொகை உரிமையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும். மேலும், சட்டப் பிரிவு 117Uன்படி குற்ற வழக்கு தொடரப்பட்டு, 3 வருட சிறைத்தண்டனை மற்றும் ₹25 ஆயிரம் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்று மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை