தாம்பரம் சானடோரியம் பகுதியில் ₹18 கோடியில் மகளிர் விடுதி கட்டிடம் : முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை, ஜன.5: தாம்பரம் சானடோரியத்தில் ₹18 கோடி மதிப்பீட்டில், பணிபுரியும் மகளிர் விடுதி கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் ஏராளமான பெண்கள் பல்வேறு கிராமங்கள், சிறு நகரங்களிலிருந்து பெருநகரங்களுக்கு பணி நிமித்தம் இடம்பெயர்ந்து வருகின்றனர். அவ்வாறு பணி நிமித்தமாக பெண்கள் தங்களது வீட்டைவிட்டு, வெளியில் தங்க வேண்டிய சூழ்நிலையில், அவர்களுக்கு குறைந்த வாடகையில், பணிபுரியும் இடத்திற்கு அருகில் தரமான மற்றும் பாதுகாப்பான தங்கும் விடுதிகள் அவசிய தேவையாக உள்ளது. எனவே, பணிபுரியும் பெண்களுக்கான விடுதி தேவையை உணர்ந்த தமிழ்நாடு அரசு, பொருளாதார ரீதியாக நலிவுற்ற மற்றும் குறைந்த வருவாய் பிரிவினர்களுக்கான, பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதிகளை தமிழக அரசு, பல்வேறு மாவட்டங்களில் அமைத்து வருகிறது.

பணிபுரியும் மகளிருக்கான புதிய விடுதிகளை உருவாக்கிட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் ‘தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்’ தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டு, புதிய விடுதிகளை கட்டுதல், பழைய விடுதிகளை புதுப்பித்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பணிபுரியும் மகளிர் பயன்பெறும் வகையில், தாம்பரம் சானடோரியம், ஜட்ஜ் காலனி பகுதியில் ₹18 கோடி செலவில் 66,830 சதுர அடியில் 461 படுக்கைகள் வசதிகளுடன் பணிபுரியும் மகளிர் விடுதி கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்றது. இந்த பணிகள் நிறைவடைந்த நிலையில், நேற்று காலை தலைமை செயலகத்தில் இருந்தபடி முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக இந்த மகளிர் விடுதியை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, சமூக நலத்துறை ஆணையர் வே.அமுதவல்லி ஆகியோர் உடனிருந்தனர். இதையடுத்து, மகளிர் விடுதி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, துணை மேயர் கோ.காமராஜ், மண்டல குழு தலைவர் ஜெயபிரதீப் சந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் சிட்லபாக்கம் சுரேஷ், ஜெகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, காணொலி காட்சி மூலம் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மகளிர் விடுதி அமைத்து தந்ததற்கு நன்றி தெரிவித்தார். பின்னர், விடுதி வளாகத்தில் குத்து விளக்கு ஏற்றிய மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி மற்றும் அதிகாரிகள் விடுதியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தர்மபுரி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் இருந்து அங்கு வந்து தங்கியுள்ள 2 பெண்களிடம் விடுதியில் வசதிகள் குறித்து கேட்டறிந்தனர். அதற்கு அந்த பெண்கள், விடுதியில் பல்வேறு நவீன வசதிகள் உள்ளதாகவும், குறைந்த கட்டணத்தில் பல வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற பெண்களுக்கு என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தங்களது நன்றிகளை தெரிவித்தனர். இந்த விடுதியில் பெண்களின் வசதிக்காக தங்கும் அறைகள், நவீன சமையலறை, யோகா உள்ளிட்ட பல பயன்பாடு அரங்கு, இணையதளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியான கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

திட்டத்திற்கு வரவேற்பு
தமிழகத்தில் பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் சார்பில், செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி, திருச்சி ஆகிய இடங்களில் 226 மகளிர் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ள 2 புதிய விடுதி கட்டிடங்கள், சென்னை அடையாறு, விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், வேலூர், திருநெல்வேலி மற்றும் பெரம்பலூர் ஆகிய இடங்களில் 458 மகளிர் தங்கும் வகையில் புதுப்பிக்கப்பட்ட 7 விடுதி கட்டிடங்கள் ஆகியவை கடந்த ஜூலை மாதம் திறக்கப்பட்டு, செயல்படுகிறது. இந்த திட்டம் பணிபுரியும் மகளிரிடம் வரவேற்பை பெற்றதால், தற்போது, சானடோரியம் பகுதியில் பணிபுரியும் மகளிர் விடுதி கட்டிடம் புதிதாக திறக்கப்பட்டுள்ளது.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை