தாமிரபரணியில் வாகனங்களை கழுவுபவர்கள் மீது நடவடிக்கை-கலெக்டர் விஷ்ணு எச்சரிக்கை

நெல்லை : நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அருகன்குளம் காட்டுராமர் கோயில் பகுதியில் இருந்து ஜடாயு தீர்த்தம் நாராணம்மாள்புரம் வரை சுமார் 1.5 கி.மீ. தொலைவுக்கு ஆற்றங்கரையில் அடர்ந்துள்ள முட்புதர்களை அகற்றி புனரமைக்கும் பணி, நெல்லை நீர்வளத்தின் கீழ் உழவாரப்பணி குழுவினர் மூலம் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இயந்திரங்கள் மூலம் பணிகள் நடந்தன. 2ம் நாளாக நேற்று நடந்த பணிகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு பார்வையிட்டார். நாராணம்மாள்புரம் பெரிய படித்துறை, ஜடாயு படித்துறை உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் விஷ்ணு கூறுகையில் ‘‘நெல்லை நீர் வளம் என்ற அமைப்பை ஏற்படுத்தி நீர்நிலைகள் புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதில் ஒரு பகுதியாக தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி நடக்கிறது. இந்நதியில் ரசாயன பொருட்கள் பயன்பாட்டினை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். ஆற்றில் வாகனங்களை கழுவுவது குற்றமாகும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். இதைத்தொடர்ந்து அப்பகுதிகளில் குடியிருப்பவர்களிடம் ஆற்றை தூய்மையாக வைத்திருப்பது தொடர்பாக கலெக்டர் விஷ்ணு கலந்துரையாடினார். ஆய்வின்போது நெல்லை தாசில்தார் சண்முக சுப்பிரமணியன், பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வன், பேரூராட்சி செயல் அலுவலர் உழவார பணி குழு தன்னார்வலர்கள், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தினர், நல்லபெருமாள், வித்யாசேகர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்….

Related posts

தொழில்முனைவோர் – யூடியூப் சேனலை எவ்வாறு உருவாக்குதல், பொருட்களை சந்தைப்படுத்தல் தொடர்பான பயிற்சி

சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தின் மொத்த திட்ட மதிப்பீட்டில் 65% நிதியை ஒன்றிய அரசே ஏற்கும் : ஒன்றிய அரசு திடீர் அறிவிப்பு

மதுராந்தகம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல்