Monday, July 8, 2024
Home » தாமரையின் சர்ச்சை தலைவருக்கு எதிராக நடக்கும் உள்குத்து பற்றிய ரகசியத்தை சொல்கிறார்: wiki யானந்தா

தாமரையின் சர்ச்சை தலைவருக்கு எதிராக நடக்கும் உள்குத்து பற்றிய ரகசியத்தை சொல்கிறார்: wiki யானந்தா

by kannappan

‘‘பதவி இருந்தால் போதுமா கட்சிக்கு செலவு செய்த பணம் திரும்ப வருமா என்று இலையின் இரண்டு குரூப்பும் காத்திருக்குதாமே, ஏனாம்…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலைகட்சியில் தேனிக்காரர், சேலத்துக்காரர் இரண்டு அணியாக தனித்தனியாக செயல்பட்டு வந்ததால் கடலோர மாவட்டத்தில் சேலத்துக்காரர் அணி மட்டுமே இலை கட்சி தொடர்பான விழாக்களை நடத்தி வந்ததாம். மாவட்ட பதவியில் இருந்ததால் சேலத்துக்காரர் அணியை சேர்ந்தவர் சின்ன விஷயத்தை கூட பணம் செலவு செய்து பிரமாண்டம் காட்டினாராம். ஆனால், தேனி அணியை சேர்ந்தவர் அமைதி காத்து வந்தாங்க. காரணம் கையில ‘டப்பு லேதுன்னு’ பேசிக்கிறாங்க. இந்த நிலையில், தேனிக்காரரும் கரன்சி இறைக்க ஆரம்பித்துள்ளராம். இதுவே பிரச்னைக்கு காரணமாக போனதா பேசிக்கிறாங்க. இலை கட்சியின் 51வது ஆண்டு தொடக்க விழா கடலோர மாவட்டத்தில் நடந்தது. இதில் தேனிக்காரர் அணி  திடீரென சேலத்துக்காரர் அணிக்கு எதிரா களம் இறங்கி அடிச்சாங்க. தேனிக்காரர் அணியை சேர்ந்த மாவட்ட அமைப்பு செயலாளர் ‘மூன்’ என் பெயர் கொண்டவர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்ததோடு தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினாராம். அவரை விட பிரமாண்டம் காட்டுவதற்காக சேலத்துக்காரர் அணியை சேர்ந்த ‘கோல்ட்’ பெயர் கொண்டவர் கடலோர மாவட்ட கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இலை கட்சி மாவட்ட அலுவலகத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி கரன்சிகளை இறைத்தாராம். இதை பார்த்த சேலமும், தேனியும் கரன்சியை இதுவரை கண்ணுல காட்டல, அது வரும்னு இவங்களும் தண்ணீ மாதிரி இறைக்கிறாங்க… அது திரும்ப வரவில்லை என்றால் இவங்க கதை அவ்வளவுதான்…’’ என்று பேசி கொண்டார் என்றார் விக்கியானந்தா.‘‘பிரச்னைக்கு பஞ்சமே வைக்காத தாமரை கட்சியின் மூத்த தலைவரை இளைஞர்கள் கூட தோற்கடிக்க ரெடியாக இருக்காங்களாமே, அப்படியா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘வடமாநில நதி பெயரில் முடியும் மாவட்ட மக்களவைத் தொகுதியை குறிவைத்து தாமரைக்கட்சி வேலை செய்து வருது. மாநில நிர்வாகிகள் முதல் ஒன்றிய மந்திரிகள் வரை கலந்துகொள்ளும் ஏதாவதொரு கூட்டம் தொடர்ந்து நடத்தப்படுகிறது. இங்கு இம்முறையும் சீட் வாங்கிவிட வேண்டும் என தாமரைக்கட்சியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசும் முன்னாள் தேசிய நிர்வாகி காய் நகர்த்தி வருகிறாராம். ஆனால் இவர் சமீபத்தில் போட்டியிட்ட சட்டமன்ற தேர்தல், முந்தைய மக்களவை தேர்தல், சாரணர் தேர்தல் என போட்டியிட்ட தேர்தல் வரலாறு, ராசி சொல்லிக்கொள்ளும்படி இல்லாத நிலையில், இந்த தொகுதிக்கு இவர் சரிப்பட்டு வரமாட்டார் என இவரது எதிர்க்கோஷ்டியினர் மேலிடத்திற்கு புகார்களை தட்ட ஆரம்பித்து விட்டனராம். மேலும், இளைஞர்களுக்கு வாய்ப்பு தந்தால் வெற்றி வாய்ப்பும், போட்டியும் ஏற்படுத்தலாம். இல்லை புது முகத்துக்கு சீட் தரணும்னு பல கோஷ்டிகளாக பிரிந்து சீட் கேட்டாலும், விமர்சனத்துக்கு உள்ளாக்கும் தாமரை கட்சியின் மூத்த தலைவருக்கு எதிராக மட்டும் ஒன்றாக இருக்காங்களாம். போதாதக்குறைக்கு பொது இடங்களில் இவரது செயல்பாடும் தலைமையிடத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வரும் மக்களவை தேர்தலில் இவருக்கு சீட் கொடுக்காமல் கல்தா கொடுப்பது என தலைமை முடிவெடுத்துள்ளது. ஒரு வேளை இவர்தான் என அறிவிப்பு வந்தாலும் எதிர்த்து உள்ளடி வேலை பார்க்க தாமரை கட்சிக்குள்ளேயே ஒரு இளைஞர்கள், தீவிர தொண்டர்கள் தயாராக இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘ரிசைனிங் லெட்டரை கொடுத்துட்டு, புலம்பி வரும் கவுன்சிலர் பற்றி சொல்லுங்களேன்…’’ என்றார் பீட்டர் மாமா.மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல ‘மா’ என்ற எழுத்தில் தொடங்கும் ஒன்றியத்துல, கைலாசத்தை பெயரில் கொண்ட ஊர் ஆட்சி இருக்குது. இந்த ஊர் ஆட்சியில பெண் ஒருவர் தலைவராக இருக்குறாங்க. இவரு பதவியேற்ற நாள்ல இருந்து, அதே ஊர் ஆட்சியில இருக்குற இலைகட்சி கவுன்சிலருங்க அவருக்கு எதிராக செயல்படுறாங்களாம். மாதந்தோறும், சம்திங் தரனும்னு வற்புறுத்துறாங்களாம். இதுல, இலைகட்சியை சேர்ந்த ஒருத்தரு, தலைவராக இருக்குறாராம். அவரு, எனக்கு மாசத்துக்கு ஒன், சி தரவேண்டும். அதை கொடுத்தால்தான் எந்த பிரச்னையும் இல்லாம நான் பார்த்துக்குவேன். இல்லைன்னா கஷ்டம் தான்னு, சொல்லியிருக்காராம். இதனால, அதிர்ச்சியடைந்த பெண் ஊர் ஆட்சி தலைவரு, இதுகுறித்து மாவட்ட உயரதிகாரிகளுக்கு புகார் தெரிவிச்சிருக்காங்க போல. அந்த புகார்ல, டெண்டர் பணிகளை எடுத்து செஞ்சதுக்கு, அதிக பில் போட்டிருக்குறதையும் ஆதரமாக காட்டியிருக்காங்களாம். இதனால டெபுடி தலைவரு பயந்துபோய் இருக்குறாராம். கவுன்சிலர்கள் ரிசைனிங் லெட்டரை கொடுத்திருக்காங்களாம். இதனால பிடி அதிகாரிகளை அழைச்சு விசாரிச்சாங்களாம். எங்க, இதுதொடர்பாக நமக்கும் விசாரணை வந்துடுமோன்னு, புலம்பி வர்றாங்களாம் ரிசைனிங் கவுன்சிலர்ஸ், இந்த டாக்… தான் மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல பரபரப்பாக ஓடிக்கிட்டிருக்குது…’’ என்றார் விக்கியானந்தா.‘‘அல்வா மாவட்டத்து ஸ்பெஷல் விஷயம் ஒன்று சொல்லுங்க கேட்போம்…’’ என்றார்  பீட்டர் மாமா.‘‘சென்னையில் அனுமதியின்றி உண்ணாவிரதம் இருக்க முயன்ற சேலம்காரர் கைது செய்யப்பட்டதை அடுத்து அல்வா நகரத்தில் இலை கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதால் அவர்களை போலீசார் கைது செய்து ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். வழக்கமாக இதுபோன்று மறியல், போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு மதிய உணவாக போலீசார் தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றை ஆர்டர் செய்து வழங்குவது வழக்கம். அல்வா நகரத்திலும் மறியலில் ஈடுபட்டவர்களுக்கு போலீசார் சாதம் ஆர்டர் செய்து விநியோகிக்க ஏற்பாடு செய்தனர். ஆனால் இலை கட்சியினரோ, நாங்கள் பிரியாணி தான் சாப்பிடுவோம், நாங்களே பிரபல நிறுவனத்தின் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து கொண்டு வந்துள்ளோம். அந்த வாகனத்தை அனுமதிக்க வேண்டும் எனக்கூறி மண்டபத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியில் போலீசாரும் பிரியாணி வாகனத்திற்கு அனுமதி வழங்கினர். உண்ணாவிரதத்திற்கு அனுமதியில்லை என மறியல் நடத்தி விட்டு, பிரியாணி போட்டு அமர்க்களப்படுத்திட்டாங்கப்பா என்று பிரியாணியை ஒரு பிடி பிடித்தனர் இலை கட்சியினர்…’’ என்றார் விக்கியானந்தா. …

You may also like

Leave a Comment

five + seventeen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi