தாமரைப்பாக்கம் அணைக்கட்டிற்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்ற வாலிபர் மாயம்: உறவினர்கள் சாலை மறியல்

 

பெரியபாளையம், ஜன. 28: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை பகுதியில் வசித்து வரும் சுடலைமணி என்பவரது மகன் அருள்ராஜ்(23). இவர் பழைய இரும்பு கடையில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அருள்ராஜ் தனது நண்பர்களுடன் சேர்ந்து தாமரைப்பாக்கம் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டில் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற அருள்ராஜ் நீரில் மூழ்கி மாயமானதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவரது நண்பர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெங்கல் போலீசார் மற்றும் தேர்வாய் சிப்காட் தீயணைப்பு துறையினர் மாயமான அருள்ராஜை இரவு வரை தீவிரமாக தேடி வந்தனர். தொடர்ந்து நேற்று காலை முதல் தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் கும்மிடிப்பூண்டி தீயணைப்புத் துறையினர் பைபர் படகுமூலம் காணாமல் போன அருள்ராஜை தேடிவந்தனர்.

இந்நிலையில் இரண்டு நாட்களாக தேடும் பணியில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று கூறி காணாமல் போனவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தாமரைப்பாக்கம் – பெரியபாளையம் நெடுஞ்சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெங்கல் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்