தாமரைப்பாக்கம் அணைக்கட்டில் இருந்து சோழவரம் ஏரிக்கு 15 மதகுகளில் 1,000 கன அடி தண்ணீர் திறப்பு

ஊத்துக்கோட்டை,செப். 30: தாமரைப்பாக்கம் அணைக்கட்டில் இருந்து, சோழவரம் ஏரிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பெரிய அளவிலான தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையில் மழை காலத்தில் தண்ணீர் நிரம்பினால் ஒருபுறம் சோழவரம் ஏரிக்கும், மற்றொருபுறம் கடலுக்கும் செல்லும். இந்நிலையில் தாமரைப்பாக்கம், செம்பேடு, வெள்ளியூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் பூண்டியிலிருந்து திறக்கப்பட்ட 2,500 கன அடி நீரும் கொசஸ்தலை ஆற்றில் செல்கிறது. இந்த தண்ணீர் தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் சேமிக்கப்பட்டு, தற்போது நேற்று காலை வினாடிக்கு 1,000 கன அடி வீதம் 15 மதகுகள் வழியாக சோழவரம் ஏரிக்கு திறக்கப்பட்டது. தண்ணீர் திறக்கப்பட்டதால் தாமரைபாக்கம் முதல் சோழவரம் வரை கால்வாய் ஓரங்களில் உள்ள விவசாயிகள் பயன்பெறுவார்கள் என கூறப்படுகிறது.

திருத்தணியில் 16 ஏரிகள் நிரம்பின
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் திருத்தணியில் மொத்தம் 40 ஏரிகளும், திருவாலங்காட்டில் மொத்தம் 34 ஏரிகளும் பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது. தொடர் மழை காரணமாக திருத்தணி பகுதியில் வேலஞ்சேரி, எஸ்.ஜெ புரம், பொன்பாடி, அலமேலு மங்காபுரம், சந்தான கோபாலபுரம் உள்ளிட்ட 9 ஏரிகள் 100% நிரம்பின. மேலும், 76 முதல் 99 சதவீதம் வரை 1 ஏரியும், 51 முதல் 75 சதவீதம் வரை 1 ஏரியும், 26 முதல் 50 சதவீதம் வரை 27 ஏரிகளும், 1 முதல் 25 சதவீதம் வரை 2 ஏரிகளும் நிரம்பியுள்ளன.

இதேபோன்று, திருவாலங்காட்டில் மொத்தம் 34 ஏரிகள் உள்ளன. இதில் பழையனூர், அத்திப்பட்டு, பனப்பாக்கம் பெரிய ஏரி மற்றும் சித்தேரி, ராமாபுரம் சித்தேரி என மொத்தம் 7 ஏரிகள் 100% நிரம்பின. 76 முதல் 99 சதவீதம் வரை 2 ஏரிகளும், 51 முதல் 75 சதவீதம் வரை 4 ஏரிகளும், 26 முதல் 50 சதவீதம் வரை 21 ஏரிகளும் நிரம்பியுள்ளன. இதில், 74 ஏரிகளில் 16 ஏரிகள் நிரம்பியது குறிப்பிடதக்கது. இந்த ஏரிகள் நிரம்பி வருவதால், விவசாயிகளும் அப்பகுதி மக்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஏரிகளை திருத்தணி பொதுப்பணித்துறை எஸ்.டி.ஓ சிவசுப்பிரமணியம், உதவி பொறியாளர் காந்தாரி ஆகியோர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை