தாமதம் வேண்டாம்

கொரோனா தொற்றை எதிர்த்து போராடுவதற்கு ஏற்ற வகையில் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.23,123 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது. இது வரவேற்க வேண்டிய விஷயம். நிதி ஒதுக்கியதோடு கடமை முடிந்து விட்டதாக ஒன்றிய அரசு எண்ணக்கூடாது. கொரோனா பரவல் குறைந்தால் ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கையே காரணம்; பரவல் அதிகரித்தால் மாநிலங்களே காரணமென குறை கூறுவதை நிறுத்தி விட்டு, ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்றாம் அலையை எதிர்கொள்ள நாடு முழுவதும் 1,500 ஆக்சிஜன் ஆலை அமைக்கும் பணி நடந்து வருவது வரவேற்கத்தக்கது. 2ம் அலையின்போது ஒரு இடத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்வதில் ஏற்பட்ட பிரச்னைகளை கருத்தில் கொண்டு, தற்போது அவற்றை தீர்க்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். குறிப்பாக, மிக அவசரமாக தேவைப்படும் இடங்களுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்ல முடியும் என்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசுக்கு உள்ளது. தொற்றின் பாதிப்பை பொறுத்து, அந்தந்த மாநிலங்களுக்கு தேவையான ஆக்சிஜனை விரைந்து வழங்க வேண்டும். இதில் பாரபட்சம் காட்ட வேண்டாம்.மக்கள் அதிகம் வசிக்கும் இந்தியாவில் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டியது முக்கியம். சுகாதாரத்துறைக்கு ஒன்றிய அரசு பல கோடிகளை ஒதுக்குகிறது. ஆனாலும், மருத்துவமனைகளின் தரம் சொல்லும்படி உயரவில்லை. 2ம் அலையின்போது, வடமாநிலங்களில் அரசு மருத்துவமனைகளின் அவல நிலையை காண முடிந்தது. முக்கியமாக, தரமற்ற ஆம்புலன்ஸ் இயங்கி வருவது வேதனையை ஏற்படுத்தியது. சுகாதார கட்டமைப்புகளை தரமாக உருவாக்காமல் வளர்ச்சி என்ற இலக்கை அடைய முடியாது. மக்கள் தொகைக்கு ஏற்ப சுகாதார வசதிகள் இல்லை என்பது தான் உண்மை. குறுகிய காலத்தில், மருத்துவ கட்டமைப்புகளை உருவாக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு இறங்க வேண்டும். கொரோனா வைரஸ் முழு கட்டுக்குள் வராத நிலையில், கேரளாவில் ஜிகா வைரஸ் தலைதூக்கியுள்ளது. பரவலின் வேகம் அதிகரிக்க துவங்கியுள்ளது. கேரளாவில் தான் பரவுகிறது என்று மெத்தனமாக இருந்து விட வேண்டாம். ஒன்றிய அரசு அலட்சியமாக இருந்ததன் விளைவாக 2ம் அலையில் சிக்கி மக்கள் கடும் இன்னல்களை சந்தித்தனர். எனவே ஒன்றிய சுகாதார குழுவினர் கேரளாவுக்கு சென்று ஜிகா வைரசின் பரவல் குறித்து ஆய்வு நடத்தி நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சுகாதார கட்டமைப்புகளை நவீனமாக உருவாக்குவதற்கு நிதி தேவை. நிதி அளிப்பதிலும், மருத்துவமனைகளை கட்டுவதிலும் பாரபட்சம் இல்லாமல் ஒன்றிய அரசு செயல்பட வேண்டும். கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்தால் மட்டுமே, கல்வி, அறிவியல், பொருளாதார முன்னேற்றம், விவசாயம் உள்ளிட்டவற்றில் வளர்ச்சி என்ற இலக்கை எட்ட முடியும். முக்கியமாக, சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் தாமதம் வேண்டாம் என்பதே மக்களின் விருப்பம்….

Related posts

ஆருயிர் காப்போம்

இங்கிலாந்தில் இந்தியா

அடுத்த அசத்தல்