தளர்வில்லா முழு ஊரடங்கு எதிரொலி பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர்-கடைவீதிகள் ஸ்தம்பித்தது

ராசிபுரம் : இன்று முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் நேற்று காய்கறி மற்றும் மளிகை உள்பட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக கடைவீதிகளில் மக்கள் குவிந்தனர். தமிழகத்தில் கொரோனா 2வது அலை வேகமெடுத்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும்  வகையில் கடந்த 10ம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. முதலில் காலை முதல் நண்பகல் 12 மணி வரை காய்கறி, மளிகை உள்பட அத்தியாவசிய  பொருட்கள் விற்பனை கடைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டது. பின்னர், காலை 10 மணி வரையில் மட்டுமே கடைகள் திறந்திருக்கும் என மாற்றம் செய்யப்பட்டது. அதே வேளையில், சமூக இடைவெளி காற்றில் பறந்ததால் ஓட்டலில் உட்கார்ந்து சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டது. மக்கள் அதிகம் கூடும் இடமான டீ கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டது.ஆனாலும் தொற்று பாதிப்பு குறையவில்லை. இதற்கிடையே இன்று அதிகாலையுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், தொடர்ந்து தளர்வில்லா முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்தது. அதன்படி, இன்று காலை முதல் ஒரு வாரத்திற்கு மளிகை மற்றும் காய்கறி கடைகளும் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டது. அதேவேளையில், பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு நேற்று முன்தினம் பிற்பகல் முதல் நேற்று(23ம் தேதி) இரவு 9 மணி வரையிலும் அனைத்து கடைகளும் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதனால், பொருட்கள் வாங்குவதற்காக கடைவீதிகளில் மக்கள் குவிந்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில்  தினசரி காய்கறி மார்க்கெட், அண்ணா சாலை பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. அங்கு மொத்த வியாபாரத்துடன், சில்லரை வியாபாரமும் நடைபெற்று வருகிறது. இன்று முதல் தளர்வற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கும் நிலையில், நேற்று தினசரி மார்க்கெட்டில் வழக்கத்தை விட மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. அதன்படி, பெரும்பாலானோர் முகக்கவசங்கள் அணிந்தவாறு சமூக இடைவெளியை கடைபிடித்து, வீட்டிற்கு ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கினர். ஆனால், ஒருசிலர் சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்டவாறு, நெருக்கியடித்துக் கொண்டு  பொருட்களை வாங்கியதால் கொரோனா பரவல் அபாயம் அதிகாரித்தது. இதேபோல், மாவட்டம் முழுவதும் அனைத்து கடை வீதிகளிலும் பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் கூட்டம், கூட்டமாக குவிந்தனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதையொட்டி, காய்கறி வாங்குவதற்காக சந்தையில் ஒரே நேரத்தில் அனைவரும் குவிந்ததால், சமூக இடைவெளி காற்றில் பறந்தது. ஊரடங்கை பயன்படுத்தி பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொள்ளை லாபம் பார்ப்பதை சில வியாபாரிகள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலை தொடரா வண்ணம், வரும் நாட்களில் பொருட்கள் உரிய விலையில் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து, செயற்கை விலை உயர்வினை கட்டுப்படுத்தி மக்களை காப்பாற்ற வேண்டும்,’ என்றனர்.திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில் காய்கறி வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியதால், காய்கறி மற்றும் பழங்களின் விலை அதிகரித்தது. அதனை பொருட்படுத்தாமல் ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகளை மக்கள் மொத்தமாக வாங்கிச் சென்றனர்.இதேபோல், கசாப்பு கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால், இறைச்சி மற்றும் மீன் விலையும் சற்று அதிகரித்தது.மளிகை கடைகளில் கையில் லிஸ்ட்களுடன் காலை முதலே மக்கள் வரிசையில் நின்றனர். ஜவுளிக்கடைகள் திறந்து வைக்கப்பட்டன. சிறிது நேரத்தில் அவற்றை மூடும்படி போலீசார் கூறினர். அதன்படி, அவை மூடப்பட்டன. திருச்செங்கோடு நகரில் வாகன நெரிசலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ்கள் இயங்கினாலும் அவைகளில் கூடடமில்லை.2 மணிக்கு கடைகள் அடைப்புநாமக்கல்: நாமக்கல் நகரில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டிருந்தது. பஸ்களில் இயக்கப்பட்டாலும், குறைந்த அளவிலயே மக்கள் பயணம் செய்தனர். ஆனால், பொருட்கள் வாங்க மளிகை கடைகள், பழக்கடைகள், காய்கறி கடைகளில் மக்கள் குவிந்தனர். இதனால். சமூக இடைவெளி கேள்விக்குறியானது. மோகனூர் சாலை, பரமத்தி ரோடு மற்றும் திருச்சி சாலையில் உள்ள மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் முன்பு, மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பொருட்களை வாங்கிச் சென்றனர். கூட்டத்தை சமாளிக்க முடியாமல் மளிகை கடை உரிமையாளர்கள் மதியம் 2 மணிக்கு கடைகளை அடைத்தனர். பின்னர், மாலை 5 மணிக்கு திறந்து பொருட்களை வினியோகம் செய்தனர். நகரில் சாலையோர கடைகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இறைச்சி கடைகள், மீன் கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. …

Related posts

தெரு நாய்களை கணக்கெடுக்கும் பணி நாளை தொடக்கம்

வெறிச்சோடி காணப்படும் கன்னியாகுமரி கடற்கரை

காங்கேயம் அருகே வீட்டின் மேல் விழும் கற்கள்; குட்டிச்சாத்தான் வீசுவதாக பொதுமக்கள் அச்சம்