தலையில் ஈட்டி பாய்ந்து உயிரிழந்த மாணவனின் உடல் தகனம்

வடலூர், ஆக. 1: வடலூர் பார்வதிபுரம் தர்மச்சாலையை சேர்ந்தவர் திருமுருகன்(48). இவரது மகன் கிஷோர்(15). இவர் வடலூர் சந்தைத்தோப்பு தனியார் பள்ளியில் படித்து வந்தார். விளையாட்டில் ஆர்வமாக இருந்த கிஷோர் கடந்த 24ம் தேதி பள்ளிக்கு சென்று, மாலை பள்ளி திடலில் விளையாட்டு பயிற்சியில் வட்டு எறிதல் போட்டியில் விளையாடி உள்ளான். அப்போது அதே திடலில் மறுமுனையில் நடந்த ஈட்டி எறிதல் போட்டியில், ஈட்டி எறிந்த போது எதிர்பாராத விதமாக கிஷோரின் தலையில் பாய்ந்து படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தான். அருகில் இருந்த ஆசிரியர்கள் அவனை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் மருத்துவர்கள் மாணவன் மூளைச்சாவு அடைந்ததாக கூறியுள்ளனர். இதையடுத்து மாணவனின் உடல் உறுப்புகள் தானம் பெறுவதற்கான முயற்சிகள் மருத்துவமனையில் நடந்து கொண்டிருந்த போது, நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதைதொடர்ந்து மாணவனின் கண்கள் தானம் செய்யப்பட்டு, உடல் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் மாணவனின் உடலுக்கு குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அசோகன், நெய்வேலி டிஎஸ்பி சபியுல்லா ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டு, தகனம் செய்யப்பட்டது.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி