தலைமையின் ரகசிய கூட்டணி அறிந்து கொதித்து போய் இருக்கும் இலை கட்சி நிர்வாகிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘இலை கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் ஏன் இந்த ரத்த கொதிப்பு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் 2021 மே மாதம் நடைபெற்றது. இதில், டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் தாமரையுடன் இலைகட்சி கூட்டணி வைத்து போட்டியிட்டது. முருங்கை விளைச்சலான தொகுதியில் தாமரை வேட்பாளராக அக்கட்சியின் மாநில தலைவர் போட்டியிட்டார். மற்ற 3 தொகுதிகளில் இலைகட்சி போட்டியிட்டது. இதில் 4 தொகுதிகளிலும் இலைகட்சியும், தாமரையும் படுதோல்வியை சந்தித்து எல்லோருக்கும் தெரிந்த கதை. இதனைத்தொடர்ந்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 246 வார்டுகளுக்கான தேர்தலில் இலை கட்சி வெறும் 12 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றதாம். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி இல்லை என்று இலை தலைமை அறிவித்தது வெறும் கீழ் நிலை தொண்டர்களுக்கு தானாம். ஆனால், மாநகராட்சி, நகராட்சி அளவில் இலை தலைமையுடன், தாமரை தலைமை ரகசிய கூட்டணியை தான் வைத்திருந்ததாம். ஆனால், அதை மாற்றி நாங்கள் தேசிய அளவில் கூட்டணி, உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி இல்லை என்று கூறி இலையின் அடிமட்ட தொண்டர்களை இலை தலைமை கூறியதாம். ஆனால், இவர்களின் கதைகளை நன்றாக அறிந்த வாக்காளர்கள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுக்களை மாற்றி போட்டு, இலைக்கும், தாமரைக்கும் வேட்டு வைத்துவிட்டார்களாம். இந்த ரகசிய கூட்டணி தான் டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தில் இலையின் தொடர் தோல்விகளுக்கு காரணமாக இருந்ததாம். தாமரையுடன் வைத்திருந்த ரகசிய கூட்டணியே உள்ளாட்சி தேர்தலில் இலை கட்சி அதிக வார்டுகளில் வெற்றி பெற்றி பெற முடியாமல் போனதற்கு காரணமாம். ஆனால், தாமரையுடன் கூட்டணியால் தான் இலை தொடர் தோல்விகளை சந்திக்கிறது என இலைகட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கடும் கோபத்தில் இருக்கிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலை நிர்வாகியின் அதிரடியால் செம கோபத்தில் உள்ள மக்களைப் பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கிரிவலம் மாவட்டத்துல ஆறு அணி நகர் ஆட்சி தேர்தல்ல இலை கட்சியை சேர்ந்த ஒருத்தர் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டாராம். தேர்தல் பிரசாரத்துல ஓட்டர்ஸ்க்கு, பணம் பரிசு பொருட்கள்னு வாரி, வாரி வழங்குனதா ஜனங்க சொல்லிக்குறாங்க. ஆனா, தேர்தல்ல அந்த இலைகட்சி நிர்வாகி தோல்வியடைஞ்சுட்டாராம். இதனால அந்த நிர்வாகியோட, குடும்பத்தினர், வார்டுகள்ல இருக்குற ஒவ்வொருத்தரு வீடு, வீடாக, நைட் டைம்ல போய்ட்டு, நாங்க கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்கணும்னு மிரட்டினாங்களாம். இதனால, பொதுமக்களுக்கும், வேட்பாளரோட குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கு. அப்போ வேட்பாளரோட, தரப்புல இருந்து ஓட்டர்ஸ்ச, ஒருமையில் திட்டினாங்களாம். அதோட, வீடு, வீடாக போய்ட்டு, ஒரு தட்டுல பால் ஊத்தி, விளக்கு ஏத்தி வெச்சு, இலைக்கு தான் ஓட்டு போட்டேன்னு சத்தியம் செய்யுங்கன்னு கட்டாயப்படுத்துறாங்களாம். சத்தியம் செய்யாதவங்களை இலை கட்சிக்காரங்க ஆபாச அர்ச்சனை செஞ்சி மிரட்டினாங்களாம். இதனால் அந்த வார்டுல ஓட்டர்ஸ் பணத்தை, பரிசு பொருட்களையும் திரும்ப கொடுத்திருக்காங்க. ஆனால், பணத்த செலவழிச்சுட்ட ஓட்டர்ஸ்கிட்ட, பாண்டு பத்திரம் எழுதி கொடுக்கும்படி மிரட்டல் விடுறதா ஓட்டர்ஸ் புலம்புறாங்க. இதனால, அந்த வேட்பாளர் குடும்பத்து மேலே அந்த வார்டு மக்கள் செம கோபமா இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘தூங்க நகரத்தில் நடக்கும் அரசியல் கூத்து என்னவாம்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தூங்கா நகர மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இதில் 15 வார்டுகள்,  இலை கட்சியை சேர்ந்த மாஜி முன்னாள் தெர்மோகோல் மாஜி அமைச்சரின் மேற்கு தொகுதியில் வருதாம். இதில் 13 வார்டுகளில் இலைகட்சி வெற்றி பெற்றது.  அதேநேரம், முன்னாள் மேயரும், தற்போதைய கிழக்கு மாவட்ட செயலாளருமான ‘கிங் சுவீட்’ கட்டுப்பாட்டில் 24 வார்டுகள் வருகின்றன. இதில் 2 இடத்தில் மட்டுமே இலை வெற்றி பெற முடிந்ததாம். இதனை குறிப்பிட்டு, கட்சி தலைமைக்கு தெர்மோகோல்காரர் புகாரை தட்டிவிட்டாராம். அதில், ‘கிங் சுவீட்’ ஒரு நகராட்சி, 2 பேரூராட்சிகளையும் பறிகொடுத்துவிட்டார். அதேபோல், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சரும் 2 நகராட்சிகளையும், 7  பேரூராட்சிகளிலும் தோல்வி அடைந்துவிட்டார். சரியான முறையில் கட்சி தொண்டர்கள் வேலை செய்யவில்லை. கட்சித் தலைமையும் சரியில்லை. தாமரையுடன் கூட்டணி தொடரக்கூடாது. நமக்கு நிரந்தரமான தலைமை தேவை. அதனை முடிவு செய்தால்தான் அடுத்த தேர்தலில் கட்சி தொண்டர்கள் பணி தீவிரமாக இருக்கும். இதே நிலை நீடித்தால், கட்சியில் தொய்வு ஏற்படும். தேர்தலை கடுமையாக பாதிக்கும் என கட்சி தலைமைக்கு தெரிவித்துள்ளாராம். இதனை மைய கருவாக  வைத்து, தற்போது அதிமுகவினரிடம் பேசியும், ஆலோசனை நடத்தி வருகிறார். அதாவது, ஒற்றை தலைமையா… சின்ன மம்மியை சேர்த்து அவரின் கீழ் செயல்படுவதா என்று தன் ஆதரவாளர்களிடம் தெர்மோகோல் பேசி வருகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா. …

Related posts

நமுத்துப்போன போராட்டங்கள் நடத்தும் மாஜி மந்திரிகள் மீது கடுப்பில் இருக்கும் கட்சியினரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

நேரடியாக களத்தில் இறங்க சின்ன மம்மி எடுத்திருக்கும் முடிவு பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

பிரிந்தவர்களை இணைக்கும் முயற்சியில் துவண்டு போன மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா