தலைமுறை வாழ்த்தும்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக ஆட்சியின் அலங்கோலங்களால் தமிழ்நாடு தவித்துப்போய் நின்றது. குறிப்பாக இளைஞர்கள் எதிர்காலம் தெரியாது திகைத்தனர். அவர்கள் அரசு பணி பெறும், பயிற்சி பெறக்கூடிய இடங்கள் எல்லாம் பிறமாநிலத்தவர்கள் பங்கெடுக்கும் வகையில் சட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. அதனால் தமிழ்நாட்டில் உருவாகும் அரசு பணியில் கூட வடமாநில இளைஞர்கள் வந்து ஆக்கிரமித்தனர். தமிழர்களுக்கு இடங்கள் மறுக்கப்பட்டன. வேதனை தீயில் இருந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு அமைந்த பிறகு நடக்கும் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தமிழில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்ற முத்தான அறிவிப்பு வந்து இருக்கிறது. இல்லை என்றால் தமிழில் தேர்வு எழுதி பெற வேண்டிய அஞ்சல் துறையில் தமிழக இளைஞர்களை விட, தமிழ் தெரியாத, புரியாத வடமாநில இளைஞர்கள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற முடியுமா? அப்படியும் ஒரு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது இந்த தமிழ்நாட்டில் தான். அதுவும் அதிமுக ஆட்சியின் தான். தெற்கு ரயில்வே அறிவிக்கும் அத்தனை வேலைவாய்ப்பு பணியிடங்களிலும் 90 சதவீதம் வடமாநிலத்தவர்கள் ஆக்கிரமிப்பு. இனி அப்படி நடக்க இயலுமா?. அதற்குத்தான் இடம் கொடுக்குமா திமுக தலைமையிலான தமிழக அரசு. வாய்ப்பில்லை என்பதால்தான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெற்கு ரயில்வே பணிமனை பயிற்சிக்கு கூட தமிழக இளைஞர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதான் காலம், இனி எல்லாம் மாறும். திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் 600 இடங்களில் 550 வடமாநில இளைஞர்கள் அரசு பணி பெற்றது போல் இனிமேல் பெற முடியுமா? ஏன் தமிழ்நாடு மின்வாரியத்தில் கூட உதவி செயற்பொறியாளர்கள் வாய்ப்பு வடமாநிலத்தவர்களுக்கு வழங்கப்பட்டதே. இங்கேயே பொறியியல் படித்த லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை தேடி அரசின் கதவை தட்டிக்கொண்டு இருக்கும் போது வடமாநில இளைஞர்களுக்கு லட்சங்களில் புரளும் சம்பளம் கொண்ட பணிகளை ஒதுக்கியதே அதிமுக அரசு. இன்று எல்லாம் தலைகீழ். இனியாரும் அத்துமீற முடியாது. அதற்கு தெற்கு ரயில்வேயின் ஒரு அறிவிப்பே சான்று. கூடங்குளம், நெய்வேலி உள்பட தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு துறைகளிலும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கே இனிமேல் முன்னுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. மற்ற மாநிலங்கள் எல்லாம், அந்த மாநிலங்களில் உள்ள அரசு வேலைகள் உள்ளூர் இளைஞர்களுக்கே வழங்கப்படும் என்று அறிவித்த போது அதிமுக அரசு வேடிக்கை பார்த்தது. இனி தமிழக அரசின் செயல்பாடுகளை பார்த்து மற்ற மாநிலங்கள் வியக்கப்போகிறது. அதற்கு முன்னுதாரணமான அறிவிப்பு தான் தமிழில் படித்தால் அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்ற அறிவிப்பு. தமிழ்நாட்டின் இளம் தலைமுறை நிச்சயம் வாழ்வாங்கு வாழ்த்தும்….

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

அடுத்த அசத்தல்

‘மூன்றில் ஒரு பங்கு’