தலைமறைவான ஐஎப்எஸ் நிதி நிறுவன இயக்குனர் திடீர் வீடியோ வெளியீடு ‘இந்தாண்டுக்குள் பிரச்னைகள் தீர்க்கப்படும்’ என உறுதி காட்பாடியில் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக புகார்

வேலூர், ஜன.4: ஐஎப்எஸ் நிதி நிறுவனம் என்ற பெயரில் கோடிக்கணக்கில் மோசடி நடந்ததாக வந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தலைமறைவாக உள்ள நிதி நிறுவன இயக்குனர் வெளியிட்டுள்ள வீடியோவில் இந்தாண்டுக்குள் அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும் என உறுதி தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியை தலைமையிடமாக கொண்டு ஐ.எப்.எஸ். என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதில் ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் மாதம் 8 ஆயிரம் ரூபாய் வட்டி கொடுப்பதாக அறிவித்தனர். இதை நம்பி வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் டெபாசிட் செய்தனர். கடந்தாண்டு அந்த நிதி நிறுவனம் திடீரென மூடப்பட்டு நிர்வாகிகள் தலைமறைவானார்கள்.

இந்த நிதி நிறுவனம் சுமார் 1 லட்சம் வாடிக்கையாளர்களிடம் இருந்து ₹6 ஆயிரம் கோடிக்கு மோசடி நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளான லட்சுமிநாராயணன், ஜனார்த்தனன், ஜெகன்நாதன், குப்புராஜ், சரவணகுமார் உள்ளிட்ட 13 பேர் மீதான புகாரின்பேரில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனால் அவர்கள் தலைமறைவாகி வெளிநாடு தப்பி சென்றனர். காட்பாடி வி.ஜி.ராவ் நகரில் உள்ள லட்சுமிநாராயணன் வீடு பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்த வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காட்பாடி வி.ஜி. ராவ் நகரில் உள்ள லட்சுமிநாராயணன் வீட்டில், நீதிமன்ற உத்தரவுபடி ‘சீல்’ அகற்றப்பட்டு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். வீட்டில் இருந்த விலை உயர்ந்த கார்கள், பைக், ஏராளமான ஆவணங்கள், சொத்து பத்திரங்கள், டெபாசிட் செய்தவர்கள் குறித்த விவரங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ஐ.எப்.எஸ். நிதி நிறுவன ஏஜெண்ட்டுகள், ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் தலைமறைவாக உள்ள நிதி நிறுவன இயக்குனர் லட்சுமிநாராயணன் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைலராக பரவி வருகிறது. அந்த வீடியோவில் பேசும் லட்சுமி நாராயணன், ‘இந்த ஆண்டுக்குள் அனைவரின் பிரச்னைகள் தீர்க்கப்படும். பிரச்னையை தீர்க்க கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கடினமாக முயற்சி செய்து வருகிறேன். அனைவரின் பிரச்னையையும் சரி செய்ய ஒரு ஐடியா கிடைத்துள்ளது. நான் உங்களுடன் இருக்கிறேன். என்னை இமெயில் ஐடி மூலம் தொடர்பு கொள்ளுங்கள்’ என தெரிவித்து இறுதியில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் இவர்கள் எங்கு உள்ளார்கள்? இந்த வீடியோ உண்மையானதா, வீடியோ வெளியிட்ட நபர்கள் யார் என்பது குறித்தும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்