தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தர்மபுரி, செப்.22: தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் உள்ள தற்காலிக பணியிடங்களுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ், மாவட்ட திட்ட மேலாண்மை அலகு மற்றும் தகவல் கல்வி தொடர்பு மையம் அமைக்க, 6 தற்காலிக பணியிடங்கள் வெளிச்சந்தை நிறுவனத்தின் மூலம் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடங்கள் கலெக்டர் தலைமையிலான 5 அலுவலர்கள் கொண்ட தேர்வு குழுவால் தேர்வு செய்யப்படும்.

திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதார நிபுணர் பணிக்கு, 2 தற்காலிக பணியிடங்கள், திரவக்கழிவு மேலாண்மை நிபுணர் பணிக்கு, ஒரு தற்காலிக பணியிடம் ஆகியவற்றுக்கு மாத ஊதியம் ₹35 ஆயிரம் வழங்கப்படும். இப்பணிக்கு கல்வித்தகுதியாக சுற்றுச்சூழல் பொறியியல் அல்லது கட்டிட பொறியியலில் பட்டப்படிப்பு முடித்திருத்தல் வேண்டும். ஒன்று அல்லது இரண்டு வருடம் முன்அனுபவம் இருத்தல் வேண்டும். திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் கண்காணித்தல் நிபுணர், ஒரு தற்காலிக பணிக்கு கல்வித்தகுதி பிடெக், எம்எஸ்சி, எம்.பிஏ. அல்லது அதற்கு நிகரான பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

மாதாந்திர ஊதியம் ₹35 ஆயிரம் வழங்கப்படும். தகவல் மற்றும் கல்வி தொடர்பு ஆலோசகர் பணிக்கு இரண்டு தற்காலிக பணியிடங்கள் மாதாந்திர ஊதியம் ₹25 ஆயிரம் வழங்கப்படும். முதுநிலை பட்டப்படிப்பு முடித்திருத்தல் வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்கள், வரும் 30ம்தேதி மாலை 5.45 மணிக்குள் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கலெக்டர் வளாகம், தர்மபுரி- 636705 என்ற முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related posts

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

மணல் சிற்பத்தில் புதுவை; ஆயி மண்டபம், முதல்வர் முகம்

பெண்ணிடம் கந்துவட்டி கொடுமை வீட்டை பூட்டி வெளியேற்றிய அவலம்