Thursday, June 27, 2024
Home » தர்மம் தலைகாக்கும் என்பதன் விளக்கம் என்ன?

தர்மம் தலைகாக்கும் என்பதன் விளக்கம் என்ன?

by kannappan
Published: Last Updated on

தெளிவு பெறுஓம்- அயன்புரம் த. சத்தியநாராயணன்.தர்மம் நம் தலைமுறையைக் காக்கும் என்பதே இதன் விளக்கம். இந்தச் சொற்றொடரை நாம் இரண்டு விதமாக அணுகலாம். முதலாவது பிறருக்கு இலவசமாகப் பொருளுதவி செய்வதை தானதருமம் செய்வது என்று சொல்கிறார்கள். இரண்டாவது தர்மநெறிப்படி வாழ்வது. இரண்டையும் ஒவ்வொன்றாகக் காண்போம். தானம் என்பது வேறு, தர்மம் என்பது வேறு. தானம் என்பது ஏதேனும் பலன் வேண்டிச் செய்வது. தர்மம் என்பது எந்தவித எதிர்பார்ப்புமின்றி இல்லாதோருக்கு உதவி செய்வது. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாது சுயநலமின்றி செய்யும் உதவி நமக்கு புண்ணியத்தைச் சேர்க்கும். ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்றார் பேரறிஞர். அடுத்தவர்களுக்கு செய்யும் உதவியானது ஏதேனும் ஒருவகையில் நமக்கே திரும்ப வந்து சேரும். அந்தப் புண்ணியமானது நமது தலைமுறையை வாழ வைக்கும். “ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்” என்ற பழமொழியும் இதனை அடிப்படையாகக் கொண்டதுதான். இவ்வாறு எதைப்பற்றியும் யோசிக்காது நாம் செய்யும் உதவியானது நமது தலைமுறையைச் சேர்ந்தவர்களைக் காக்கும் என்பதால் தர்மம் தலைகாக்கும் என்று சொன்னார்கள். தர்மம் என்ற சொல்லிற்கு முறையான நெறி என்றும் பொருள் உண்டு. இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நியதியின்படி மாறாமல் வாழ்பவனை தர்மசிந்தனை உடையவன் என்று போற்றுவார்கள். அவ்வாறு தர்மநெறி மாறாமல் வாழ்பவனை எந்தவித பிரச்னையும் அண்டாது. விதிப்பயன் காரணமாக துன்பங்களை சந்திக்க நேர்ந்தாலும் அவன் கடைபிடித்து வரும் தர்மநெறி அவனைக் காத்து நிற்கும். இதிலிருந்து தர்மம் தலைகாக்கும் என்பதைப் புரிந்துகொள்ளலாம். இதுபோக ஜோதிட ரீதியாக நாம் இந்த சொற்றொடருக்கான விளக்கத்தையும் காண இயலும். ஜனன ஜாதகத்தில் தலை என்பது லக்ன பாவத்தைக் குறிக்கும். ஒன்பதாம் பாவகத்தை தர்மஸ்தானம் என்று சொல்வார்கள். ஒருவனுடைய ஜாதகத்தில் லக்ன பாவகமோ அல்லது லக்னாதிபதியோ பலவீனமாக இருக்கும் பட்சத்தில் ஒன்பதாம் பாவகம் ஆகிய தர்ம ஸ்தானம் வலுப்பெற்றிருந்தாலும், தர்ம ஸ்தான அதிபதி நல்ல நிலையில் இருந்தாலும் அது அந்த ஜாதகரைக் காக்கும். தலையெழுத்து நன்றாக இல்லாவிட்டாலும் அவன் தர்மநெறிப்படி வாழும் பட்சத்தில் அந்த தர்மமானது அவனைக் காத்து நிற்கும் என்பதே இதற்கான விளக்கம்.?வீட்டில் திருமணம் நிச்சயம் செய்து கைத்தாம்பூலம் மாற்றிய நிலையில் திருமணத்திற்கு முன்னதாக சிராத்தம் வந்தால் செய்யலாமா?- கேசவபெருமாள், பண்ருட்டி.கண்டிப்பாக சிராத்தம் செய்ய வேண்டும். எந்தச் சூழலிலும் சிராத்தத்தை நிறுத்தக்கூடாது. பங்காளிகள் எவரேனும் இறந்து பத்து நாட்களுக்குள் சிராத்தம் வரும்போது மட்டுமே தடைபடும். அதிலும் பத்து நாட்கள் கழித்து அடுத்து வரும் ஏகாதசி அல்லது அமாவாசை நாட்களில் விடுபட்ட சிராத்தத்தை செய்துவிட வேண்டும். திருமணத்திற்காக நிச்சயம் செய்து கைத்தாம்பூலம் மாற்றியபின் சிராத்தம் வரும் பட்சத்தில் கண்டிப்பாக சிராத்தம் செய்ய வேண்டும். திருமணத்திற்காக வீட்டு வாயிலில் பந்தல்கால் நடுவதற்கு முன் சிராத்தம் வரும் பட்சத்தில் கண்டிப்பாக சிராத்தம் செய்ய வேண்டும். திருமணத்திற்கு நாள் குறிக்கும்போதே வீட்டில் சிராத்தம் வரும் நாளை மனதில் கொண்டு சிராத்தத்திற்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படாத வண்ணம் நாள் பார்க்க வேண்டும். முன்னோர்களுக்கு உரிய கடமையை சரிவரச் செய்து வந்தால் மட்டுமே வம்சம் நல்லபடியாக தழைத்து வாழும். சிராத்தம் என்பது ஏதோ ஒரு பெரிய அபசகுன வார்த்தையாக எண்ணக்கூடாது. சிரத்தையுடன் செய்வதே சிராத்தம் என்றழைக்கப்படுகிறது. முன்னோர்களுக்கு எந்த அளவிற்கு சிரத்தையுடன் செய்கின்றோமோ அந்த அளவிற்கு நற்பலனையும் வாழ்வினில் காண இயலும். திருமணம் என்பதே முன்னோர்களின் ஆசியுடன் நடக்கின்ற சுபநிகழ்வுதான் என்பதை சாஸ்திரம் அறுதியிட்டுச் சொல்லும். இதைத்தான் ‘திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன’ என்று சொல்கிறார்கள். திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தாலும் திருமணத்திற்கு முன்னதாக சிராத்தம் வரும் பட்சத்தில் கண்டிப்பாக அதனைச் செய்ய வேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை.?கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்கிறார்கள். அப்படியானால் கடமையை மட்டும் செய்தால் போதுமா, கடவுளை வழிபட வேண்டாமா?- அருந்தாச்செல்வி, திருமங்கலம்.கடமையைச் செய், பலனை எதிர்பாராதே என்கிறது பகவத் கீதை. கடமையைச் சரிவர செய்பவனிடம் இறையருள் நிறைந்திருக்கும் என்பதை எல்லா மதங்களின் மறைகளும் வலியுறுத்துகின்றன. ஆனால், தனக்குரிய கடமையைச் சரியாக உணர்ந்து செய்ய வேண்டும். வயதான பெற்றோர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டியது பிள்ளைகளின் கடமை. பெற்ற பிள்ளைகளுக்குத் தேவையானதை சரியான நேரத்தில் நிறைவேற்றி வைக்க வேண்டியது பெற்றவர்களின் கடமை. பணத்தை பிரதானமாக எண்ணாமல் மாணவர்களுக்கு கல்வி போதிக்க வேண்டியது ஆசிரியரின் கடமை. குருவினை மதித்து நடக்க வேண்டியது சீடனின் கடமை. கலப்படம் இல்லாத சுத்தமான பொருட்களை வாடிக்கையாளருக்குத் தர வேண்டியது கடைக்காரனின் கடமை. அவரவருக்கு உரிய கடமையினை சரிவர தெரிந்து கொள்ளாததன் விளைவாக துன்பத்தை அனுபவிக்கிறோம். நமக்குள் உய்யும் இறைவனைத் தெரிந்து கொள்ளாமல் ஆண்டவனை வெளியில் தேடுகிறோம். அவஸ்தைக்கு உள்ளாகிறோம். கிருஷ்ண பரமாத்மா தனது நித்திய பூஜையில் தினசரி ஆறு பேரை நமஸ்கரிக்கிறான் என்கிறது ஸ்மிருதி வாக்கியம். நித்திய கர்மானுஷ்டானங்களைச் சரிவர செய்து வருகின்ற வேத பிராமணர், கணவனின் குறிப்பறிந்து நடக்கும் பதிவிரதை, பெற்றோருக்கு பணிவிடை செய்யும் பிள்ளை, தன் வாழ்நாளில் தான் பெற்ற பிள்ளைகளை சரியான முறையில் பாதுகாத்து வளர்த்து 80வது வயதில் சதாபிஷேகம் செய்துகொண்டவன், பசுக்களை காப்பவன், ஏழை மக்களின் பசியைப் போக்கும் வகையில் நித்தியம் அன்னதானம் செய்பவன் என கடமையைச் செய்பவனை கடவுளே வணங்குகிறான் எனும்போது கடமையைச் செய்வதன் மூலம் கடவுளின் அருள் தானாகவே வந்து சேரும் என்பது மறுக்கமுடியாத உண்மை.?விதியை நம்புவது, விதியை மதியால் வெல்வது இவை ஆன்மிகத்தில் அடக்கமா?- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.விதியை மதியால் வெல்லலாம் என்பது பழமொழி. அவ்வாறு மதியால் வெல்ல இயலும் என்பதற்கு கூட விதி சரியாக அமைந்திருக்க வேண்டும். புரியும்படியாகச் சொல்ல வேண்டும் என்றால் விதி, மதி, கதி இவை மூன்றும் ஜோதிட சாஸ்திரம் சம்பந்தப்பட்ட வார்த்தைகள். விதி என்பது ஜென்ம லக்னத்தையும், மதி என்பது பிறக்கும்போது சந்திரனின் அமைவிடமான ஜென்ம ராசியையும், கதி என்பது கதிரவன் எனப்படுகின்ற சூரியன் அமர்ந்துள்ள ராசியையும் குறிக்கும். லக்ன பாவக ரீதியாக நேரம் சரியில்லை எனும்போது ஜென்ம ராசியினைக் கொண்டு நல்ல நேரம் உள்ளதா என்று ஆராய்வர். இதனை கோச்சாரம் என்றும் சொல்வார்கள். அதுவும் சரியில்லை என்றால் சூரியனின் இருப்பிடத்தைக் கொண்டு பலனுரைப்பர். மேற்கத்திய நாடுகளில் சூரியன் அமர்ந்துள்ள ராசியைத்தான் ஜென்ம ராசியாகக் கருதுவர். அதாவது மேற்கத்திய ஜோதிடத்தில் விதி, மதியை விட கதிக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பர். இது தவிர, ஒரு மனிதனின் வாழ்க்கையில் முதல் 30 வருடங்களை விதியாகிய ஜென்ம லக்னமும், அடுத்த 30 வருடங்களை மதியாகிய ஜென்ம ராசியும், அதற்கு அடுத்த 30 வருடங்களை கதி என்று அழைக்கப்படும் சூரியன் அமர்ந்துள்ள ராசியும் தீர்மானிக்கின்றன என்று ஒரு சில ஜோதிட நூல்கள் பலன் உரைக்கின்றன.முதல் 30 வருடங்கள் வாழ்க்கையில் சிரமப்படுபவன், அடுத்த 30 வருடங்களில் வளமாய் இருப்பான் என்ற பொருளில் இந்த பழமொழியானது தோன்றி இருக்கலாம். ஆனால் பெரும்பாலான ஜோதிடர்கள் தங்கள் அனுபவத்தில் கண்டது விதி என்ற லக்னமே வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்பதே ஆகும். ஆகவே மதியை விட விதியின் வலிமையே பெரியது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.?லக்னத்திற்கு 12ம் வீட்டில் கேது இருந்தால் மறுஜென்மம் கிடையாது என்கிறார்களே, இது சரியா?- ப.த. தங்கவேலு, பண்ருட்டி.நிச்சயமாக இல்லை. 12ம் வீட்டில் கேது அமர்ந்திருப்பதை நாம் பெரும்பாலானோரின் ஜாதகத்தில் காணமுடியும். இவர்கள் எல்லோருக்கும் மறுபிறவி கிடையாது என்று சொல்ல முடியாது. சிறு வயதிலியே சந்யாச ஆஸ்ரமத்திற்குள் நுழைந்து தன்னலம் கருதாது இறைசேவையில் ஈடுபட்டவர்களுக்கு மட்டுமே வீடுபேறு எனும் மோட்சம் கிட்டும். அவர்களுக்கு மட்டுமே மறுபிறவி என்பது கிடையாது. மற்றபடி தனக்கென சம்பாதித்து வைத்துக்கொள்பவன் யாராயிருந்தாலும் மறுபிறவியை அனுபவித்தே ஆகவேண்டும் என்பதே சாஸ்திரம் சொல்லும் விதி. ?என் உடன்பிறந்த சகோதரர் இறந்தபோது நான் வெளிநாட்டில் இருந்தேன். என்னால் எதிலும் கலந்துகொள்ள முடியவில்லை. 16 வயது முதல் நான் அவரிடமிருந்து பிரிந்தே வாழ்கிறேன். பேச்சுவார்த்தையும் கிடையாது. எனக்கு தீட்டு உண்டா? நான் தற்போது தமிழ்நாடு வந்துள்ளேன். நான் என்ன செய்ய வேண்டும்?-அன்புச்செல்வன், விழுப்புரம்.உடன்பிறந்த சகோதரன் இறந்தால் கண்டிப்பாக பங்காளிகளுக்கு உரிய பத்து நாட்கள் தீட்டு என்பது உண்டு. அதோடு வீட்டினில் ஒரு வருடத்திற்கு தீபாவளி, பொங்கல் முதலான பண்டிகைகள் எதுவும் கொண்டாடக்கூடாது. பேச்சுவார்த்தை இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி ஒருதாய்மக்கள் எனும்போது நிச்சயமாக மேற்சொன்ன விதிகள் உங்களுக்குப் பொருந்தும். அவர் இறந்தபோது நீங்கள் வெளிநாட்டில் இருந்ததாகவும், உங்களால் எந்த ஒரு நிகழ்விலும் கலந்துகொள்ள இயலவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள். கருமகாரிய தினத்தன்று பங்காளி என்ற முறையில் நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாததை தற்போது செய்து முடித்துவிட வேண்டும். உங்களுக்கு தகப்பனார் இருந்தால் நீங்கள் தனியாக எதையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தகப்பனார் இல்லாத பட்சத்தில் உங்கள் வீட்டு புரோஹிதரை அழைத்து விவரத்தைச் சொல்லி அதற்குரிய சடங்குகளை அவசியம் செய்ய வேண்டும். காலதாமதம் செய்யாமல் உடனடியாகச் செய்து முடித்துவிடுங்கள். தலைதிவசம் முடிந்த பிறகு வருடந்தோறும் வருகின்ற மஹாளய அமாவாசை நாளில் அவரது பெயரையும் சேர்த்து தர்ப்பணம் செய்தால் போதுமானது.திருக்கோவிலூர் K.B. ஹரிபிரசாத் சர்மா…

You may also like

Leave a Comment

9 + 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi