தர்மபுரி ஓட்டலில் பாஸ்ட் புட் சாப்பிட்ட பெண்ணுக்கு மயக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

தர்மபுரி, செப். 29: தர்மபுரியில் குழந்தைகளுடன் ஓட்டலில் பாஸ்ட் புட் சாப்பிட்ட பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே ஈச்சம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(39). தனியார் கல்லூரி பேராசிரியரான இவரது மனைவி ரேவதி(37). இவர்கள் நேற்று தங்களது 2 மகள்களுடன், தர்மபுரியில் உள்ள கடைக்கு சென்று நகைகள் வாங்கி கொண்டு, ஈச்சம்பட்டிக்கு காரில் சென்றனர். வழியில் செந்தில் நகர் பஸ் ஸ்டாப்பில் உள்ள ஏ.சி.ரெஸ்டாரெண்டில் குடும்பத்துடன் சாப்பிட்டுள்ளனர். அப்ேபாது பட்டர் நான், கோபி பிரைடு ரைஸ், வெஜ் பிரைடு ரைஸ், பன்னீர் பட்டர் மசாலா, கோபி மஞ்சூரியன் மற்றும் தயிர் சாதம் ஆகியவற்றை வாங்கி குழந்தைகளுடன் சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்டு முடித்ததும், காரில் ஏறி சென்ற சிறிது தூரத்திலேயே, ரேவதிக்கு உடல் முழுவதுமாக அரிப்பு ஏற்பட்டு மயங்கினார்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது கணவர் செந்தில்குமார், அரசு கலைக்கல்லூரி எதிரே உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு ரேவதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குமணன், நந்தகோபால் ஆகியோர், சம்பந்தப்பட்ட ரெஸ்டாரெண்டுக்கு சென்று, செந்தில்குமார் குடும்பத்தினர் சாப்பிட்ட உணவின் மாதிரியை எடுத்து ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், ‘சம்மந்தப்பட்ட ஓட்டலில் ஆய்வு செய்துள்ளோம். அவர்கள் சாப்பிட்ட உணவின் மாதிரியை ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம்.
அதன் முடிவுகள் கிடைத்த பின்னரே, ரேவதிக்கு அரிப்பு மற்றும் மயக்கம் ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து தெரியவரும்,’ என்றனர். ஏற்கனவே நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்ட சிறுமி பலியான நிலையில், தர்மபுரியில் பாஸ்ட்புட் சாப்பிட்ட பெண் மயக்கமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை