தர்மபுரியில் மாடியில் இருந்து இரும்பு பீரோவை இறக்கிய போது மின்சாரம் பாய்ந்து 3 பேர் பலி-மேலும் ஒருவருக்கு தீவிர சிகிச்சை

தர்மபுரி : தர்மபுரி டவுன் சந்தைப்பேட்டை ரோடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் இலியாஸ் பாஷா(75). இவர் கோல்டன் தெருவில் சொந்தமாக வீடு கட்டி, நேற்று முன்தினம் குடும்பத்தோடு குடி புகுந்தார். இதையடுத்து, வாடகை வீட்டில் இருந்த பொருட்களை, புதிய வீட்டிற்கு கொண்டு செல்ல முடிவு செய்தார். அதன்படி, மினிலாரியை வாடகைக்கு பேசி, நேற்று காலை பொருட்களை அப்புறப்படுத்தினார். 2வது மாடியில் இருந்து இலியாஸ் பாஷா, தர்மபுரி ஆத்துமேட்டைச் சேர்ந்த மினிலாரி டிரைவர் கோபி(23), கிளீனர் குமார்(20) மற்றும் கட்டிட உரிமையாளரான அன்னசாகரத்தைச் சேர்ந்த பச்சியப்பன்(50) ஆகியோர் பொருட்களை இறக்கி, மினிலாரியில் ஏற்றிக்கொண்டிருந்தனர். குறுகலான மாடிப்படி வழியாக இரும்பு பீரோவை இறக்க முடியாததால், வீட்டின் பால்கனி வழியாக கயிறு கட்டி, 4 பேரும் பீரோவை கீழே இறக்கியுள்ளனர்.  அப்போது, அவ்வழியாக சென்ற மின்கம்பியில் பீரோ உரசியது. இதில், பீரோவில் மின்சாரம் பாய்ந்து, அதனை பிடித்துக்கொண்டிருந்தவர்களையும் தாக்கியது. இதனால், இலியாஸ் பாஷா, டிரைவர் கோபி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். பச்சியப்பன், குமார் ஆகியோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தால் ஏற்பட்ட மின் அதிர்ச்சியில், மின்சாரம் தன்னிச்சையாக துண்டிக்கப்பட்டது. காயமடைந்தவர்களை அக்கம்- பக்கத்தினர் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே பச்சியப்பனும் உயிரிழந்தார். குமார் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இதுகுறித்து தகவலறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், மின்வாரிய ஊழியர்கள் வந்து மின்சாரத்தை முழுமையாக துண்டித்தனர். பலியான 2 பேரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து ஏராளமானோர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  பீரோவை தூக்கியபோது அருகில் மின்கம்பி செல்வதை கவனிக்காமல்  அலட்சியமாக செயல்பட்டதால், மின்சாரம் தாக்கி 3 பேர் பலியான சம்பவம் தர்மபுரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.எம்எல்ஏ ஆய்வு: சம்பவ இடத்தில் தர்மபுரி வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ நேரில் ஆய்வு செய்தார். அப்போது, தாழ்வாக செல்லும் மின் பாதைகளை சரிசெய்ய வேண்டும். குடியிருப்பு பகுதியில் உள்ள மின்பாதைகளை பாதுகாப்பாக கொண்டு செல்லும் வகையில், கேபிள் டிவி ஒயர் போல் மாற்றம் செய்ய வேண்டும் என்றார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹10 லட்சம் நிவாரண நிதி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும், காயமடைந்தவருக்கும் நிவாரணம் வழங்கவும் தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்தார்.தலா ₹25 லட்சம் இழப்பீடு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்இச்சம்பவம் தொடர்பாக பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மின்சாரம் தாக்கி, 3 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இலியாஸ், பச்சியப்பன், கோபி ஆகியோரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசு அவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்….

Related posts

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை போட்டு பாமகவினர் வீதி வீதியாக பிரசாரம்: கலாய்க்கும் நெட்டிசன்கள்

கோவை, நெல்லை மேயர்கள் திடீர் ராஜினாமா