Sunday, June 30, 2024
Home » தரமான கல்வியை தருவதில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..!

தரமான கல்வியை தருவதில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..!

by kannappan

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் ‘நம்ம ஸ்கூல்’ என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் உரையாற்றிய முதல்வர்; தமிழ்நாட்டின் கல்வித் துறை அமைச்சராக இருந்து எண்ணற்ற பல சாதனைகளை அந்தத் துறையில் நிகழ்த்தியிருக்கக்கூடியவர்தான் இனமானப் பேராசிரியர் அன்பழகன் அவர்கள். அவருடைய நூற்றாண்டை நாம் இன்றைக்கு அரசின் சார்பிலே மட்டுமல்ல, தமிழருடைய உள்ளங்களிலும், இல்லங்களிலும் அந்த விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டு அரசின் சார்பில் பல நிகழ்ச்சிகளை நாம் நடத்தியிருக்கிறோம், நடத்திக் கொண்டிருக்கிறோம். இன்று காலை அவருடைய நூற்றாண்டு நிறைவையொட்டி, நுங்கம்பாக்கத்தில் இருக்கக்கூடிய பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு பேராசிரியருடைய பெயரைச் சூட்டி மகிழ்ந்திருக்கிறோம். பேராசிரியருடைய பெயரால் ஏற்கனவே 7500 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பேராசிரியர் அன்பழகனார் பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டத்தையும் செயல்படுத்தத் தொடங்கியிருக்கிறோம். அதன் தொடர்ச்சியாகத்தான் இன்று அவருடைய பிறந்த நாளில், அரசுப் பள்ளிகளை தனியார் பங்களிப்போடு மேம்படுத்தும் மற்றுமொரு முன்னோடித் திட்டம் இங்கு தொடங்கப்படுகிறது. உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத காலம் எது என்று யாரைக் கேட்டாலும், ‘அது என்னுடைய பள்ளிக் காலம்தான்’ என்று பலரும் சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். பள்ளிப் பருவத்தில் துள்ளித் திரிந்த அந்தக் காலத்தைத்தான் யாராலும் மறக்க முடியாது. அதேபோல் உங்களுக்கு நெருக்கமான நண்பர் யார் என்று கேட்டால், பெரும்பாலும் பள்ளிக்காலத் தோழர்களைத்தான் நாம் சொல்வதுண்டு. நேற்றுப் பார்த்தவரைக் கூட மறந்துவிடுவோம். ஆனால் நாம் குழந்தைகளாக இருந்தபோது, கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் பெயரை நிச்சயமாக நாம் மறக்க மாட்டோம். அவர்கள் முகங்கள் நமக்கு அடிக்கடி வந்து நிழலாடும். அந்தளவுக்கு ஒவ்வொருவருடைய வாழ்விலும் வசந்தகாலம் என்பது பள்ளிக் காலம்தான். நாம் இந்தளவிற்கு உயர்வதற்கு, இந்த உயரத்தை அடைவதற்கு உதவியாக இருந்தது அந்தப் பள்ளிக் கூடம் தான். அந்தப் பள்ளிக் கூடங்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டாமா? என்ற உன்னதமான நோக்கத்தோடு ‘நம்ம ஸ்கூல் பவுண்டேசன்’ நம்ம ஊர் பள்ளி என்ற பெயரில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டிருக்கிறது. எல்லாவற்றையுமே அரசாங்கம் செய்து விட முடியாது. மக்களும் கைகோர்க்க வேண்டும் பயன்பெற்றவர்கள் தங்களது நன்றியின் அடையாளத்தைத் தெரிவிக்கலாம். அதற்கான வாசற்படிதான் இந்த நம்ம ஊர் பள்ளி திட்டம். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்து, அனைத்துத் துறைகளிலுமே மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கிச் நாம் சென்று கொண்டிருக்கிறோம். நம்முடைய மதிப்பிற்குரிய திரு. வேணு சீனிவாசன் அவர்கள், இந்தியா டுடே-ல் இந்த வாரம் வெளி வந்திருக்கக்கூடிய ஒரு கருத்துக் கணிப்பை சுட்டிக்காட்டி, அதிலே தமிழகம் முன்னோடி மாநிலமாக இந்தியாவில் வந்திருப்பதை எடுத்துச் சொல்லி எனக்கு வாழ்த்து சொன்னார், பெருமைதான் எனக்கு நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள், நாம், திமுக ஆட்சிக்கு வந்து முதல் ஆண்டு இதே இந்தியா டுடே ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டது. அப்படி வெளியிட்டபோது, நம்பர் ஒன் முதலமைச்சர் இந்தியாவிலேயே தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர்தான் என்று ஒரு கருத்துக் கணிப்பை முதல் ஆண்டு வெளியிட்டார்கள். அப்போது பத்திரிகை நிருபர்களெல்லாம் இதை எப்படி பார்க்கிறீர்கள் என்று என்னிடத்தில் வந்து கேட்டார்கள், உள்ளபடியே பெருமைப்படுகிறேன், ஆனால் இதைவிட எனக்கு என்ன பெருமை வந்து சேர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றால், நம்பர் ஒன் முதலமைச்சர் என்பதைவிட நம்பர் ஒன் தமிழ்நாடு என்று வர வேண்டும் என்று நான் முதல் ஆண்டே தெரிவித்தேன். அது, இந்த இரண்டாம் ஆண்டு நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், அந்த சூழ்நிலை இன்றைக்கு உருவாகியிருக்கிறது. அதிலே எனக்கு உள்ளபடியே பெருமை, அதற்காகத்தான் நம்முடைய திரு. வேணு சீனிவாசன் அவர்கள் எனக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறார்கள். அதேபோல் நீங்களும் இங்கே சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். இன்றைக்கு பள்ளிக் கல்வித் துறையின் பணி மிக முக்கியமானதாக இருக்கிறது. தரமான கல்வி வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு இன்றைக்கு இரண்டாவது இடத்தில் இருந்து கொண்டிருக்கிறது. முதலிடத்திற்கு முந்துவதற்கான அனைத்துப் பணிகளையும் பள்ளிக் கல்வித் துறை இன்றைக்கு சிறப்பாக செய்து கொண்டிருக்கிகிறது.* அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படை இலக்கை மையமாகக் கொண்டு நம்முடைய அரசு செயல்பட்டு வருகிறது. இல்லம் தேடிக் கல்வித் திட்டம் முழு வெற்றியை நமக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.* செயலி மூலமாக பள்ளி செல்லாத பிள்ளைகளை பள்ளிக் கூடங்களுக்குள் மீண்டும் அழைத்துக் கொண்டு வரக்கூடிய ஒரு சூழலை ஏற்படுத்தியிருக்கிறோம்.* எண்ணும் எழுத்தும் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.* மாதிரி பள்ளிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.* 9 முதல் 12 வரையிலான மாணவர்களுக்கு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் படி பயிற்சி அளிக்க இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சையும், தேவையான பொருள்களும் கல்வியோடு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.நம் பள்ளி – நம் பெருமை’ என்ற திட்டத்தை நான் இங்கே தொடங்கி வைத்திருக்கிறேன். பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள், தலைமையாசிரியர், ஆசிரியர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்கள் போன்றோரைக் கொண்டதாக பள்ளி மேலாண்மைக் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த வகையில் பள்ளிப் பிள்ளைகள் எந்தவிதமான தடங்கலும் இல்லாமல் மனநிறைவோடு கற்கக்கூடிய சூழலை திராவிட மாடல் ஆட்சி உருவாக்கித் தந்து கொண்டு இருக்கிறது. கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து. அந்த அறிவுச்சொத்தை உருவாக்கித் தந்து வருகிறோம். இதன் தொடர்ச்சியாக, நம்ம ஊர் பள்ளித் திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம்.அரசுப் பள்ளிகள் என்பவை அரசின் சொத்துகள் மட்டுமல்ல, அது மக்களுடைய சொத்துக்களுமாகும். இதனை மனதில் வைத்துத்தான் பள்ளி மேலாண்மைக் குழுக்களை அமைத்தோம். 37 ஆயிரத்து 558 பள்ளி மேலாண்மை குழுக்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன. அவை மூலம், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், ஊராட்சிகள் மற்றும் சமூகத்தின் நலம்விரும்பிகள் அனைவரும் ஒரு கட்டமைப்பாக, நிறுவனமாக ஒன்றிணைந்தனர். தங்கள் பள்ளிக்கு எது தேவையோ அதனை அவர்களே உருவாக்கித் தர முன்வந்துள்ளார்கள்.இந்த எண்ணங்களை அரசு மட்டுமே தனியாகச் செய்திட முடியாது. உங்கள் அனைவருடைய உதவியும் ஆதரவும் இதற்கு நிச்சயம் தேவை. இப்போதும் எப்போதும் தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்கு ஆதரவு அளிக்க ஒன்றிணைய விரும்பக்கூடிய உங்கள் எல்லோருடனும் கைகோர்க்க நம்முடைய அரசு விரும்புகிறது. உள்ளூர் மக்களுடன் முன்னாள் மாணவர்களுடன், தொழிற்துறையுடன், உலகமெங்கும் வாழும் தமிழர்களுடன் கைகோப்பதற்காகவும் ‘நம்ம ஊர் பள்ளி’ அடித்தளம் அமைத்திருக்கிறது. நீங்கள் செலுத்தக்கூடிய ஒரு ரூபாய் நன்கொடையும் கூட கூடுதல் வெளிப்படைத்தன்மையுடனும், கடமையுணர்வுடனும், நம் பள்ளிகள், நம் ஆசிரியர்கள், நம் குழந்தைகளின் வளர்ச்சிக்கென அது செலவிடப்படும்.இது அரசுக்கும் உங்களுக்குமான நீடித்த உறவாக இருக்கும் என்று நான் உறுதியோடு கூறுகிறேன். உங்களுடைய சி.எஸ்.ஆர். நிதி பயனுள்ள முறையில் செலவிடப்படுவதை உறுதி செய்யுங்கள். எங்கள் தரப்பிலிருந்து உங்கள் பங்களிப்பை தமிழ்நாட்டுக் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பொறுப்புடன் பயன்படுத்துவோம் என்று நான் உறுதி அளிக்கிறேன். நம்ம ஊர் பள்ளி தொடங்கி வைக்கும் இந்த நேரத்தில், உங்கள் இளமைக் காலத்தில் நீங்கள் பயின்ற பள்ளிக்கும், உங்கள் ஊருக்குமான உறவை, நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள Virtual pavilion வழியாகப் புதுப்பிக்குமாறு உலகெங்கும் வாழும் தமிழ் மக்களை இந்த விழாவின் மூலமாக நான் கேட்டுக்கொள்கிறேன்.நீங்கள் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தமிழ்நாட்டிலும் உங்கள் சொந்த ஊரிலும் உங்கள் வேர்கள் வலுப்படவேண்டும். உங்களை வளர்த்த உங்கள் மண்ணுக்கு நீங்கள் செய்த அதை நீங்கள் திருப்பிச் செய்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பு நம்ம ஸ்கூல் வாயிலாக, நம்ம பள்ளி வாயிலாக நமக்கெல்லாம் கிடைத்திருக்கிறது. நம்முடைய குழந்தைகள் வளர்ந்து உங்கள் நிறுவனங்களையும், பெருநிறுவனங்களையும், தமிழ்நாட்டின் கிராமங்களையும், நகரங்களையும் முன்னேற்றுவார்கள் அவர்கள் நம் வளத்தையும், நம்பிக்கையையும் திட்டங்களையும் வளர்த்தெடுப்பார்கள்.தமிழ்நாட்டில் அதிகம் கொண்டாடப்படும் இருவர் நம்ம ஊர் பள்ளி நடைபோட முன்வந்துள்ளதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். தமிழ்நாட்டின் தொழிற்துறையில் மிகச் சிறப்பான நிலையில், முன்னிலையில் இருக்கக்கூடிய திரு. வேணு சீனிவாசன் அவர்கள், இந்த நம்ம ஸ்கூல் பவுண்டேஷனின் தலைவராக இருப்பதும், பவுண்டேஷனின் தூதுவராக கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் இருப்பதும் நமக்கெல்லாம் கிடைத்திருக்கக்கூடிய பெருமை. அறிவுப்பூர்வமான விளையாட்டான செஸ் விளையாட்டு வீரராக தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் பல்வேறு பெருமைகளை தேடித் தந்த  விஸ்வநாதன் ஆனந்த் அவர்களைவிட சிறந்த தூதுவர் வேறு யாரும் நிச்சயமாக இருக்க முடியாது என்று நாம் நம்புகிறோம்.வேணு சீனிவாசன் அவர்களின் அறிவார்ந்த வழிகாட்டுதலிலும், திரு. விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் போன்ற ஒரு தூதுவரின் துணையோடும் நம் அரசுப்பள்ளிகளை மேலும் வலுப்படுத்துவதற்காகத் தொடங்கப்பட்டுள்ள நம்ம ஸ்கூல், நம்ம பள்ளி பவுண்டேஷனுக்கு நிதியுதவி செய்து, பிறருக்கு எடுத்துக்காட்டாக, ஆதரவளிக்க ஒவ்வொருவரும் முன்வருவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நம்புவது மட்டுமல்ல, அதற்கு தொடக்கமாக நானே முதல் நபராக எனது சொந்த நிதியிலிருந்து ஐந்து இலட்சம் ரூபாயை இந்தத் திட்டத்திற்காக நான் அளிக்கிறேன். நம்முடைய குழந்தைகளுடைய கல்விக்காக, பள்ளிகளின் வளர்ச்சிக்காகத்தான் இந்தத் திட்டம் ஆகவே என்னுடைய அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள், தொழிலதிபர்கள், வணிகர்கள், திரைக்கலைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பரந்த உள்ளத்தோடு தன்னுடைய பங்களிப்பினை வழங்குமாறு இந்த நிகழ்ச்சியின் மூலமாக அன்போடும், உரிமையோடும் கேட்டுக்கொள்ள நான் கடமைப்பட்டிருக்கிறேன்.உங்கள் ஒவ்வொரு ரூபாயும் அரசுப் பள்ளிகளுக்கே செலவிடப்படும் என உறுதி கூறுகிறேன். நம் பிள்ளைகளின் கல்விக்கென உங்களிடம் நிதியுதவி வேண்டி நிற்கும் இந்தக் கோரிக்கையை ஏற்று நம் பள்ளிக்கூடங்களை மேம்படுத்துவதற்காக வாரி, வாரி வழங்கிடவேண்டும். அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்துவோம், நாம் காண விரும்பிய கனவுப் பள்ளியை நாம் உருவாக்குவோம் இவ்வாறு கூறினார். …

You may also like

Leave a Comment

6 + three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi