தரமான அரிசியே வழங்கப்படுகிறது ஒன்றிய அமைச்சர் கோயல் கூறுவது தவறான தகவல்: அமைச்சர் சக்கரபாணி பதிலடி

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் தரமான அரிசியே பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை கூறுகிறார் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து சென்னை எழிலகத்தில் அமைச்சர் சக்கரபாணி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஆட்சி செய்யும் அரசு மக்களுக்கு தரமற்ற அரிசியை வழங்குவதாக ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார். ஒன்றிய அரசு தரக்கூடிய அரிசி தரமற்றது என கூறுகின்றனர். அது எப்படி தரமில்லாமல் போகும் என கேள்வி எழுப்பினார். ஞாயிற்றுகிழமை விடுமுறை என்பதால் அங்காடிகளுக்கும் நேரில் சென்று பார்க்காமல் பாஜவினர் கூறியதை கேட்டு உண்மைக்கு புறம்பாக ஒன்றிய அமைச்சர் பேசியுள்ளார். குறிப்பாக, தமிழகத்தில் 712 ஆலைகள் மூலம் மக்களுக்கு தரமான அரிசி வழங்கி வருகிறோம். மேலும், இந்திய உணவு கழகத்தின் விகிதாச்சார அடிப்படையில் தமிழக அரசின் ரேசன் கடைகளிலும், அரிசி கிடங்குகளிலும், அரவை ஆலைகளுக்கு சென்று அதிகாரிகள் பார்வையிடுகின்றனர். அப்படி இருக்கும்பொழுது எப்படி தரமில்லாத அரிசியை பொதுமக்களுக்கு வழங்க முடியும். அரிசியை தமிழகத்தில் உள்ள 2 கோடியே 23 லட்சம் மக்களுக்கு தமிழக அரசு முறையாகவும் தரமாகவும் வழங்கி வருகிறது. இந்தியாவிலேயே சிறப்பு பொதுவிநியோக திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்தி கொண்டு இருக்கிறோம். இந்நிலையில் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் கூறிய கருத்து வருத்தமளிக்கிறது. தி.நகரில் 4 நியாய விலை கடைகளை ஒன்றிய இணை அமைச்சர் அஸ்வினி குமார் பார்வையிட்டு தரமான பொருட்கள் வழங்கப்படுகிறது என பாராட்டி சென்றார். நியாய விலை கடைகளுக்கு செல்லும் பொருட்களை ஆய்வு செய்ய 4 அதிகாரிகளை முதல்வர் நியமித்துள்ளார்.தமிழகத்தில் 38 ஆயிரம் நியாய விலை கடைகள் செயல்பட்டு வருகிறது. நிறம் பிரித்து தரமற்ற கருப்பு அரிசியை நீக்கிவிட்டு தரமான அரிசியே விநியோகிக்கப்படுகிறது. ஆனால் எந்த ஒரு கடைக்கும் நேரில் சென்று பார்க்காமல் குறை கூறியுள்ளார். தமிழகத்தில் மாதம்தோறும் 3 லட்சத்து 24 ஆயிரம் மெட்ரிக் டன் தேவைப்படுகிறது. அதனை அரசு வழங்கி வருகிறது. குறிப்பிட்டு குறை கூறுவதற்கு காரணமே அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே. மேலும் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வருகிறது அதை வைத்து அரசியல் செய்யவே ஒன்றிய அமைச்சர் அப்படி பேசியுள்ளார். பிரதமர் மோடியின் புகைப்படம் நியாய விலை கடைகளில் கடந்த ஆண்டுகளிலும், இதற்கு முன்னர் இருந்த ஆட்சிகளிலும் வைக்கப்பட்டது. அவரது புகைப்படம் பயன்படுத்தப்பட வேண்டிய இடத்தில் தமிழக அரசின் சார்பில் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

பால் குடித்துவிட்டு உறங்கியபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு கைக்குழந்தை உயிரிழப்பு: போலீசார் விசாரணை

பிள்ளைகள் வளந்துவிட்டார்கள் என தொடர்பை துண்டித்ததால் பெண்ணை தீவைத்து கொளுத்திய கள்ளக்காதலன்: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை, காதலன், மருமகனுக்கும் தீக்காயம்

சாலையில் திரியும் மாடுகளால் விபத்து, காயம் ஏற்பட்டால் உரிமையாளர் மீது வழக்கு: ஆலோசனை கூட்டத்தில் முடிவு