தரமற்ற முறையில் இயங்கிய சூப் தயாரிக்கும் தொழில் கூடத்திற்கு அபராதம் : உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடி டுபாஷ் தெருவில் தனியாருக்கு சொந்தமான சூப் தயாரிக்கும் தொழிற்கூடம் உள்ளது. பூந்தமல்லி, ஆவடி சுற்று வட்டாரப்பகுதிகளில் இந்நிறுவனம் நேரடியாக சூப் கடைகளை நடத்தி வருகிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சூப் தயார் செய்து வழங்கி வருகிறது. இந்நிலையில், இந்த நிறுவனத்தின் கடையில் விற்பனை செய்யப்படும் சூப் தரமற்ற முறையில் இருப்பதாகவும் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துவதாகவும் ஆன்லைனில் புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் திருவள்ளுர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ஜெகதீஸ் சந்திரபோஸ், பூந்தமல்லி உணவு பாதுகாப்பு அலுவலர் வேலவன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று கரையான்சாவடியில் உள்ள சூப் தொழிற்கூடத்தில் சோதனை நடத்தினர். அதில் முறையாக அனுமதி பெறாமல் குடியிருப்புகளுக்கு மத்தியில் தொழிற்கூடம் இயங்கி வந்தது தெரியவந்தது. சூப் தயாரிக்கும் இடத்தில் எலி, கரப்பான் பூச்சிகள் அதிகம் இருந்தது.  தொழிற்கூடத்தை பூட்டிய உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சூப் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதித்துள்ளனர். சூப்களை, பிளாஸ்டிக் கவரில் கடைகளுக்கு அனுப்புவதால் ₹2 ஆயிரம் அபாரதமும் விதித்தனர். மேலும் மாநில உணவு பாதுகாப்பு துறையிடம் அனுமதிபெற்று தொழிற்கூடத்திற்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்….

Related posts

3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ இயக்கப்படுவதாக அறிவிப்பு

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்