தயாராக வேண்டும்

இந்திய எல்லையில் பாகிஸ்தான் மற்றும் சீனா மீண்டும் வாலாட்ட துவங்கியுள்ளது. எல்லை பகுதிகளில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். அப்போது தான் பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவதை தடுக்க முடியும். சில தினங்களுக்கு முன் சம்பாவில் உள்ள சக்பக்விரா எல்லைப்புறக்காவல் நிலையத்தின் கீழ் பகுதியில் 150 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் தீவிரவாதிகளை ஊடுருவ செய்யும் பாகிஸ்தானின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. எனவே எல்லை பகுதிகளில் தீவிரவாதிகள் நுழைய முடியாதபடி கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். எல்லையில் டிரோன் எதிர்ப்பு சாதனங்களை அமைக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு இறங்க வேண்டும்.இது ஒரு புறம் இருக்க, வடக்கு எல்லையில் சீனாவின் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவுக்கு செக் வைக்கும் வகையில் எல்லைகளில் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய சாலைகளை அமைக்க வேண்டும். பருவ நிலைக்கு ஏற்பவும், ஆயுதங்கள் மற்றும் படை வீரர்களை எளிதாக செல்லும் வகையிலும் இச்சாலை இருக்க வேண்டியது கட்டாயம். எல்லையில் உள்ள மலை பகுதிகளில் அதிநவீன தொழில்நுட்பத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள ேவண்டியது மிக அவசியம்.அனைத்து காலநிலைக்கும் ஏற்றவாறு கட்டுமான பணிகளை செய்ய வேண்டும். குறிப்பாக, குளிர் காலங்களில் ராணுவ வீரர்கள் தங்கும் வகையிலும், ஆயுதங்களை பாதுகாக்கும் வகையிலும் இருக்க வேண்டும். மலை பகுதிகளில் சாலை, கட்டுமான பணிகளை உருவாக்கினால் எல்லையில் பிரச்னை என்றால் உடனே ராணுவ வீரர்கள், ஆயுதங்களை எளிதாக கொண்டு செல்ல முடியும். மலை பகுதிகளில் போரிடுவது எளிதான காரியம் அல்ல. பல ஆண்டுகளாக போர் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்களே போரிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.முக்கியமாக, எல்லையில் சீனா மேற்கொண்டு வரும் கட்டுமான பணிகளை சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. சீனாவின் கட்டுமானங்களை விட அதீத தொழில்நுட்ப வசதியுடன் கூடிய கட்டுமான பணிகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும். லடாக் எல்லையில் சீனாவுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்பட்டது. தொடர்ந்து, எல்லையில் மீண்டும் கட்டுமான பணிகளை செய்து வருகிறது என்றால் சீனாவின் நோக்கம் என்ன? எல்லையில் மீண்டும் மோதல் போக்கை ஏற்படுத்த சீனா முயற்சி செய்து வருகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இவ்விஷயத்தில் அதிரடி நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும். எல்லை பகுதியில் வலுவான கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பை உறுதி செய்ய வேண்டும். எல்லையில் அனைத்து சவால்களையும் எதிர்கொள்ளும் வகையில் ஒன்றிய அரசு தயாராக இருக்க வேண்டும். முக்கியமாக, எல்லையில் என்ன நடந்து வருகிறது என்பதை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய கடமை ஒன்றிய அரசுக்கு உள்ளது….

Related posts

தடை விலகியது

தங்க அம்பாரி

போர் உச்சக்கட்டம்