Sunday, October 6, 2024
Home » தமிழ்நாட்டில் 10ம் தேதி முதல் வடகிழக்கு பருவ மழை தீவிரம் மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார்: வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல்

தமிழ்நாட்டில் 10ம் தேதி முதல் வடகிழக்கு பருவ மழை தீவிரம் மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார்: வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல்

by kannappan

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. 10ம் தேதி முதல் தொடர்ந்து பெய்யும் மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயாராக உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறினார். வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இன்று சென்னை, எழிலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 37 மாவட்டங்களில் சராசரியாக 14.2 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. சென்னையில் அதிகமாக 67.08 மி.மீட்டர் பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை 1ம் தேதியில் இருந்து இதுவரை 346.1 மி.மீ பெய்துள்ளது. இது, இயல்பை விட 43 சதவீதம் கூடுதல். அரியலூர், கோவை, கடலூர், ஈரோடு, கரூர், நாமக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, திருநெல்வேலி, திருவாரூர், திருச்சி, விழுப்புரம், ஆகிய 12 மாவட்டங்களில் இயல்பை விட 60 சதவீதத்திற்கும் மேல் மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னை, தேனி, மதுரை மாவட்டங்களில் 4 பேர் உயிரிழந்துள்னர். மேலும், 16 கால்நடை இறந்துள்ளது. 237 குடிசைகள் பகுதியாகவும், 26 குடிசைகள் முழுமையாகவும் ஆக மொத்தம் 263 குடிசைகள் சேதமடைந்துள்ளன. 65 வீடுகள் பகுதியாகவும், 5 வீடுகள் முழுமையாகவும் ஆக மொத்தம் 70 வீடுகள் சேதமடைந்துள்ளன.வங்கக்கடல் பகுதியில், பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் 12ம் தேதி வரை வங்கக்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் இரண்டு குழுக்கள் தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மரம் விழுந்தது, வாகனங்கள் மழை நீரில் சிக்கிக் கொண்டது போன்ற 261 புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீன்வள துறை மூலம் 90 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பேரிடர் காலங்களில் ஹெலிகாப்டர்கள் இறங்குவதற்கு 87 ஹெலிபேட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று புதிய சின்னம் உருவாகும் என்றும், இதனால் 10ம் தேதிக்கு மேல் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை உள்ளிட்ட மாநிலம் முழுவதும் மழையை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு தயார் நிலையில் மீட்பு குழுவினர் உள்ளனர். இதுகுறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார். அப்போது, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் குமார் ஜெயந்த், பேரிடர் மேலாண்மை இயக்குநர் சுப்பையன் ஆகியோர் உடனிருந்தனர்.* சென்னையில் நிவாரணப்பணி தீவிரம்அமைச்சர் ராமசந்திரன் மேலும் கூறுகையில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் தொடர்ந்து  மழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் மொத்தம் 169 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, 48 நிவாரண முகாம்களில் 1,107 பேர் தங்க  வைக்கப்பட்டுள்ளனர். 3,58,500 உணவு பொட்டலங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 290 பகுதிகளுள், 59 பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர், ராட்சத பம்புகள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. மழை நீரால் சூழப்பட்டுள்ள 16 சுரங்க பாதைகளில், 14 சுரங்க பாதைகளில் மழை நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. எஞ்சிய 2 சுரங்க பாதைகளில் மழை நீர் வெளியேற்றும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. சாலைகளில் விழுந்த 75 மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. 15 மண்டலங்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை  அனைத்து துறை அலுவலர்களுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.அணைகளில் நீர் வெளியேற்றப்படும் விபரம்அணை/ நீர்தேக்கம் பெயர்    நீர் இருப்பு (மி.க.அ.)    வெளியேற்றப்படும் உபரி நீர்பூண்டி    2742/231    4069 கன அடிசோழவரம்    878/1081    1215 கன அடிசெங்குன்றம் (புழல்)    2896/3300    2191 கன அடிசெம்பரம்பாக்கம்    2916/3645    2144 கன அடிவீராணம்    903/1465    434 கன அடிதேர்வாய் கண்டிகை    500/500    90 கன அடி* முகாம்களில் உள்ள குடும்பங்கள்தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில், 43 குடும்பங்களை சார்ந்த 128 பேர் 5 நிவாரண முகாம்களிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில், 15 குடும்பங்களை  சார்ந்த 71 பேர் 2 நிவாரண முகாம்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில், 20  குடும்பங்களைச் சார்ந்த 79 பேர் 2 நிவாரண முகாம்களிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் 9 குடும்பங்களை சார்ந்த 36 பேர் 1 நிவாரண முகாமிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதி உள்ளிட்ட  அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது….

You may also like

Leave a Comment

9 + three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi