தமிழ்நாட்டில் 1 கோடி மாணவர்களின் பெற்றோர் செல்போன் எண்கள் சரிபார்ப்பு கல்வி அதிகாரிகளுக்கு அரசு செயலாளர் பாராட்டு கடிதம்

நாகர்கோவில், ஜூன் 7: தமிழ்நாட்டில் ஒரு கோடி மாணவர்களின் செல்போன் எண்கள் சரிபார்க்கப்பட்டதற்கு முதன்மை கல்வி அலுவலர், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அரசு செயலாளர் குமரகுருபரன் பாராட்டு கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பான கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாணவர் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் அனைத்தையும் உரிய நேரத்தில் மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது நமது கடமையாகும். இத்திட்டங்கள் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட விவரத்தினை அவர்தம் பெற்றோர்களுக்கும் தெரிவிக்க வேண்டியது அவசியமாகிறது.

அங்ஙனம் விவரங்களை பெற்றோர்களுக்கு தெரிவிப்பதற்கு ஏதுவாக பெற்றோர்களின் கைபேசி எண்களை சரிபார்க்கும் பணியானது மேற்கொள்ளப்பட்டது. இப்பணியினை முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களின் சீரிய வழிகாட்டுதலின்படி பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முழுவீச்சில் இப்பணியினை மேற்கொண்டமையால் இதுவரை 1,02,13,156 மாணவர்களின் பெற்றோர்களது கைபேசி எண்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன.

மிகக்குறுகிய காலத்தில் இப்பணியினை மேற்கொண்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பணி மகத்தானது. மிகவும் பாராட்டுதலுக்குரியதாகும். இதில் எஞ்சியுள்ள 25,07,777 மாணவர்களின் பெற்றோர்களுடைய கைபேசி எண்கள் சரிபார்க்க வேண்டியுள்ளது. இப்பணியினையும் பள்ளி திறப்பதற்கு முன்பாக விரைந்து முடித்திட பள்ளித் தலையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பு அவசியமானதாகும். இப் பணியினை மேற்கொள்வதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது உளமார்ந்த பாராட்டுகள் மற்றும் நன்றிகள். இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு