தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் கலைஞர் பழநியில் நடந்த நூற்றாண்டு விழா கருத்தரங்கில் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ பேச்சு

 

பழநி, டிச. 9: பழநி அருகே சின்னக்கலையம்புத்தூர் பழனியாண்டவர் மகளிர் கல்லூரியில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் சட்டமன்றத்தின் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நேற்று நடந்தது. தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் தலைவர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார். விழாவில் பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில் குமார் பேசியதாவது: தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர். தமிழினத்தின் வளர்ச்சிக்கு அடையாளமாக விளங்கியவர் கலைஞர்.

சமூகநீதிக்கு முக்கியத்துவம் அளித்தவர் கலைஞர். பெண்ணுரிமைக்கு குரல் கொடுத்தவர் ஆவார். சொத்தில் பெண்களுக்கு சம உரிமை உண்டு என்பதை சட்டமாக இயற்றி இந்திய நாட்டுக்கே முன்னோடியாக விளங்கியவர் ஆவார். கலைஞரின் ஆட்சி காலத்தில் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் அசுர வளர்ச்சி பெற்றது. தொலைநோக்கு சிந்தனையுடன் அவர் கொண்டு வந்த திட்டங்கள் தமிழகத்தை இன்று வரை முன்னோடி மாநிலங்களில் ஒன்றாக விளங்கசெய்து வருகிறது. தற்போது அவரது வழியில் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

இவ்வாறு பேசினார். தொடர்ந்து கலைஞர் சாதனைகள் தொடர்பான பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற பேரவை கூடுதல் செயலாளர் நாகராஜன், முன்னாள் சட்டமன்ற பேரவை செயலாளர் செல்வராஜ், பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, துணை தலைவர் கந்தசாமி, யூனியன் தலைவர் ஈஸ்வரி கருப்புசாமி, துணை தலைவர் கோபாலகிருஷ்ணன், கல்லூரியின் முதல்வர் புவனேஸ்வரி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை