தமிழ்நாடு முழுவதும் வருகிற 21ம் தேதி 10வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் 9வது கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாமினை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். தமிழ்நாட்டில் 9வது கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று நடைபெற்று வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், மயிலாப்பூர், காரணீஸ்வரர் பகோடா தெருவில் உள்ள மாநகராட்சி சமுதாயக் கூடத்தில் கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாமினை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தமிழ்நாடு முழுவதும் கோவிட் தடுப்பூசி முகாம், டெங்கு விழிப்புணர்வு சிறப்பு முகாம், மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் என பல்வேறு முகாம்கள் நடைபெற்று வருகிறது. கோவிட் தடுப்பூசியை பொறுத்தவரை, 9வது கோவிட் மெகா தடுப்பூசியாகவும், தொடர்ந்து 23 மாவட்டங்களில் மழைப்பொழிவு இருக்கின்ற காரணத்தினால், மழைப்பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்டெடுக்கும் வகையில் கோவிட் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்களிலேயே மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களும் நடைபெற தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே 1500 வாகனங்கள் மூலம் நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளதன் அடிப்படையில் நேற்று இந்திய மருத்துவமான சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி போன்ற பல்வேறு மருத்துவ முறைகளும் மழைக்கால சிறப்பு நிவாரணம் என்கின்ற அடிப்படையில் 1560 இடங்களில் தொடர்ந்து 10 நாட்களுக்கு நடமாடும் முகாம்களும், ஏற்கனவே மருத்துவமனைகளில் இருக்கிற முகாம்களும் நடைபெற தொடங்கி உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை நேற்று 50 வாகனங்களில் மூலம் 150 சித்த மருத்துவர்கள் ஒவ்வொரு வாகனத்திற்கும் 60 லிட்டர் அளவிற்கு கபசுரக் குடிநீர், நிலவேம்பு குடிநீர் மற்றும் பல்வேறு சித்த மருந்துகளை வாகனங்களின் மூலம் வழங்கி வருகின்றனர்.  இந்தப் பணி 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் டெங்கு பாதிப்பு, மழைக்காலப் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் பொதுமக்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், இந்தத் தடுப்பூசி முகாம்களோடு, மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினையும் இணைத்து நடத்த உத்தரவிட்டுள்ளார்கள், அதனடிப்படையில் இந்தத் தடுப்பூசி முகாம்களோடு மழைக்கால மருத்துவ முகாமும் இன்று நடைபெற்று வருகிறது. வயிற்றுப்போக்கு, சேற்றுப்புண், காய்ச்சல், சளி மற்றும் இருமல் போன்ற மழைக்கால நோய்களுக்கான அனைத்து மருந்துகளும் இந்த மருத்துவ முகாம்களின் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 75 லட்சம் நபர்கள் இரண்டாம் தவணை கோவிட் தடுப்பூசி போடாமல் உள்ளனர். அவர்களைக் கண்டறிந்து தடுப்பூசி செலுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  அதில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய 72 லட்சம் நபர்கள் கண்டறியப்பட்டு,  அவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 26000 இடங்களில் 9வது கோவிட் மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்று வருகிறது. 26000 இடங்கள் என்பது முதல் 4 முதல் 5 மணி நேரத்திற்கு ஒரு இடத்திலும், பிற்பகல் முதல் வேறு இடங்கள் என ஒரே நாளில் மொத்தம் 50,000 இடங்களில் இந்த முகாம்கள் நடைபெற உள்ளது. மேலும், 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று மழைப்பொழிவு இருப்பதால், பாதுகாப்பான இடங்களில் முகாம்களை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று காலை வரை முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 74% நபர்கள் எனவும்,  இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 36% நபர்கள் எனவும் உயர்ந்துள்ளது. தற்பொழுது 1 கோடியே 31 இலட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதால்,  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தடுப்பூசிகளை விரைந்து செலுத்திட வேண்டும் என்கின்ற நல்லெண்ணத்துடன் வாரத்திற்கு இரண்டு மெகா தடுப்பூசிகள் முகாம்களை நடத்த அறிவுறுத்தியுள்ளார்கள். அதனடிப்படையில் வாரந்தோறும் வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்கள் இந்தத் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும்.  அந்த வகையில் 9வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்று வருகிறது. வருகிற 21.11.2021  அன்று 10வது மெகா தடுப்பூசி முகாம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இந்தக் கோவிட் மெகா  தடுப்பூசி  முகாம்களில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள், முதல் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் தவறாமல் கலந்து கொண்டு தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.த.வேலு, மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., துணை ஆணையாளர் டாக்டர் எஸ்.மனிஷ், இ.ஆ.ப., மாநகர நல அலுவலர் டாக்டர் எம்.ஜெகதீசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்….

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி