தமிழ்நாடு திருக்கோயில் சார்பில் சபரிமலை பக்தர்களுக்கு 4 லாரிகளில் ₹40 லட்சத்தில் பிஸ்கட் பாக்கெட்: அமைச்சர் சேகர்பாபு அனுப்பி வைத்தார்

சென்னை, ஜன.6: சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க காத்திருக்கும் ஏராளமான பக்தர்களின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை, திருக்கோயில்கள் மற்றும் பக்தர்கள் இணைந்து, நேற்று காலை மதுரவாயல் அருகே வானகரத்தில் உள்ள மிகப் பழமையான கைலாசநாதர் கோயிலில் இருந்து லாரிகள் மூலம் ₹40 லட்சம் மதிப்பிலான உணவுபொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்று, சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு ₹40 லட்சம் மதிப்பிலான உணவுபொருட்கள் மற்றும் குடிநீர் பாட்டில்கள் ஏற்றி செல்லும் லாரிகளை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். இந்த உணவு பொருட்கள் அனைத்தும் வரும் ஞாயிற்றுக்கிழமை சபரிமலை தேவஸ்தான அலுவலர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், ‘‘தமிழ்நாட்டு திருக்கோயில்களின் சார்பில் 4 கன்டெய்னர் லாரிகள் மூலம் ₹40 லட்சம் மதிப்பிலான 10 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் அனுப்பப்பட்டு உள்ளது.

சபரிமலையில் நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் வருகையினால் ஐயப்பனை தரிசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இருப்பினும், ஐயப்ப பக்தர்கள் விரைவாக தரிசிப்பதற்கு கேரள அரசு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கிடைத்த அனுபவத்தை வைத்து, குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூடுதல் சிறப்பு வசதிகளை செய்து முடித்து, இந்த ஆண்டு இறுதிக்குள் அப்பணிகளை விரைந்து மேற்கொள்வோம்,’’ என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் சங்கர், திருமகள், இணை ஆணையர்கள் லட்சுமணன், ஜெயராமன், மங்கையர்க்கரசி, ரேணுகாதேவி, உதவி ஆணையர்கள் முத்து, ரத்தினவேல், அரவிந்தன், வானகரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்‌‌.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி