தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டங்களை மாணவர்களுக்கு துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் எடுத்து கூற வேண்டும் கலெக்டர் அழகு மீனா உத்தரவு

நாகர்கோவில், ஜூலை 24: கன்னியாகுமரி மாவட்ட மகளிர் திட்டம் மற்றும் சத்துணவு துறையின் கீழ் தொடக்கப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு வழங்கப்படுவது குறித்து, மாவட்ட கலெக்டர் அழகுமீனா, நேற்று நுள்ளிவிளை ஊராட்சிக்குட்பட்ட பேயன்குழி அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் கல்குறிச்சி அரசு உதவி பெறும் பள்ளியான புனித ஜோசப் நடுநிலைப்பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அரசுப்பள்ளிகளில் பயிலும் சிறார்களுக்கு காலை உணவு வழங்குவது குறித்த தொலைநோக்கு பார்வையுடன் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினை அறிவித்து, அத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். மேலும் இத்திட்டத்தினை விரிவுப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான கடந்த 15ம்தேதி அன்று தமிழ்நாட்டின் ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்தார். அதனடிப்படையில் நுள்ளிவிளை ஊராட்சிக்குட்பட்ட பேயன்குழி அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் கல்குறிச்சி அரசு உதவி பெறும் பள்ளியான புனித ஜோசப் நடுநிலைப்பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு வழங்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் ஆரோக்கியமான வருங்கால சந்ததியினரை உருவாக்கிடவும், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டினை நீக்கி, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் பள்ளி வருகையை அதிகரித்திடும் விதமாகவும் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் ஊரக பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் அனைத்து பணி நாட்களிலும் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினை மாணவ மாணவியர்கள் நன்கு பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்துடன் கல்வி பயின்று வாழ்வில் ஏற்றம் பெற வேண்டுமென கேட்டுக்கொள்வதோடு, துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் தமிழ்நாடு முதலமைச்சரால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து சிறப்பு திட்டங்களையும் பொதுமக்கள், மாணவ மாணவியர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் எடுத்துக்கூற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக கலெக்டர் அழகுமீனா, மாணவ மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கி, உணவின் தரம் குறித்து கேட்டறிந்து, மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவினை உண்டு மகிழ்ந்தார். மேலும் காலை உணவு தயாரிக்கும் சமையல் அறையினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, இப்பகுதிகளை சுத்தமாகவும், சுகாதாரத்துடன் வைத்திட தலைமையாசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர் பீபீஜான், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) கருணாவதி, தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி