தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உயர்வான மரியாதை கொடுக்க வேண்டும்: சகிப்புத்தன்மையை நீர்த்து போக செய்துவிட கூடாது: ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உயர்வான மரியாதை கொடுக்க வேண்டும். அதேநேரம் சகிப்புத்தன்மையை நீர்த்து போகச் செய்யக் கூடாது என ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. சென்னை மியூசிக் அகாடமியில் 24.1.2018ல் நடந்த நிகழ்ச்சியில் தமிழ் – சமஸ்கிருத அகராதியை அப்போதைய ஆளுநர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதில் காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திரர் அமர்ந்திருந்தார். இதை கண்டித்து ராமேஸ்வரம் காஞ்சி மடத்தின் முன் 26.1.2018ல் ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமேஸ்வரம் கோயில் போலீசார் பலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி கண்.இளங்கோ என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார்.மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: தமிழ்நாடு அரசுத் தரப்பில் நடக்கும் நிகழ்ச்சியின் துவக்கத்தில் மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய நீராருங் கடலுடுத்த என்ற தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாட வேண்டுமென 17.6.1970ல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து இறைவணக்க வழிபாட்டு பாடலைப் ேபான்றது. தேசிய கீதத்தைப் போன்றதல்ல. தேசிய கீதம் இசைக்கப்படும்போது இடையூறு ஏற்படுத்தினால், சட்டப்படி 3 ஆண்டு வரை சிறை தண்டனையோ, அபராதமோ விதிக்க முடியும். ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்தின் போது எழுந்து நிற்க வேண்டுமென எந்தவித நிர்வாக உத்தரவும் இல்லை. தமிழ்த்தாய் வாழ்த்திற்கு உயர்வான மரியாதை கொடுக்க வேண்டும். அதேநேரம் எழுந்து நிற்பது மட்டுமே மரியாதை அல்ல. நமது பாரம்பரியம் சகிப்புத்தன்மையை கற்பிக்கிறது. நமது தத்துவம், சகிப்புத்தன்மையை போதிக்கிறது. அரசியலமைப்பு சட்டமும் சகிப்புத் தன்மையையே கடைபிடிக்க சொல்கிறது. இதை நாம் நீர்த்து போகச் செய்யக் கூடாது. கலாச்சாரத்தை மதிக்கும் நாம், இப்படித் தான் மரியாதை செய்ய வேண்டுமென எப்படி கூறமுடியும்?  ஆன்மிகவாதிகள் பிரார்த்தனையின்போது தியான நிலையில் அமர்ந்திருப்பார்கள். தமிழ்த்தாய் வாழ்த்து இறைவணக்க பாடல் என்பதால், பாடல் இசைக்கும்போது ஆன்மிகவாதிகள் தியான நிலையில் இருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது தான். விஜயேந்திரர் தியான நிலையில் கண்களை மூடிய நிலையில் இருந்துள்ளார். தாய்மொழி தமிழுக்கு அவரது வழியில் உரிய மரியாதை செலுத்தியுள்ளார். இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் மற்றும் புகார்தாரர் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது. இதனால் வழக்கை தொடர்ந்து நடத்துவதால் பலனில்லை. வழக்கு ரத்து செய்யப்படுகிறது. இந்த உத்தரவு வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பொருந்தும். இவ்வாறு  தீர்ப்பில் கூறியுள்ளார்….

Related posts

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி விஷசாராய மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள்: அரசிதழில் வெளியீடு