தமிழக முதல்வரின் துரித நடவடிக்கையால் இந்தியாவில் முதல்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி: ஏஐசிஎப் நிர்வாகிகள் புகழாரம்

சென்னை: இந்தியாவில் முதல்முறையாக  சர்வதேச அளவிலான  ‘உலக செஸ் ஒலிம்பியாட்’ போட்டியை நடத்துவதற்கு முக்கிய காரணம்  இந்தியாவின் சிறந்த முதல்வரான மு.க.ஸ்டாலினின் செயல் வேகம்தான்  என்று அகில இந்திய செஸ் கூட்டமைப்பு (ஏஐசிஎப்) நிர்வாகிகள் புகழாரம்  சூட்டியுள்ளனர். இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில்   ‘44வது உலக செஸ் ஒலிம்பியாட்’ போட்டியை நடத்த உள்ளதாக தமிழக அரசு,  அகில இந்திய செஸ் கூட்டமைப்பு  இணைந்து நேற்று முறைப்படி அறிவித்தன. இதற்கான நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய செஸ் ஒலிம்பியாட் இயக்குனர் பரத் சிங் சவுகான் கூறியதாவது: சர்வதேச அளவிலான  44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி, முதல்முறையாக இந்தியாவில் நடைபெற உள்ளது. மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில், ஜூலை இறுதியில் தொடங்கி ஆகஸ்ட் முதல் வாரம் வரை நடத்த திட்டமிட்டுள்ளோம்.இப்போட்டி இந்தியாவில் நடைபெற முழுக் காரணம் தமிழக முதல்வர்தான். இதற்கான வாய்ப்பு இருப்பது குறித்து தெரிவித்த 5 நிமிடங்களில் ஒப்புதல் தந்தார். அடுத்த சில மணி நேரங்களில்  பல்வேறு துறைகளின் அனுமதியுடன் போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கின. கூடவே ஐந்தாறு ஐஏஎஸ் அதிகாரிகள் உடன் வந்து மாமல்லபுரத்தில்  போட்டி நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்தததுடன், போட்டியாளர்கள் தங்குவதற்கான 1200 அறைகளை உடனடியாகப் பதிவு செய்துவிட்டனர். இப்போது அது 3000 அறைகளாக அதிகரித்துள்ளது. தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.சஞ்ஜெய் கபூர் (தலைவர், ஏஐசிஎப்): இந்தியாவில் செஸ் விளையாட்டின் தலைமையகம் சென்னை. உலகின் சிறந்த செஸ் வீரர்களை கொண்ட நகரம். அத்தகைய சிறப்பு மிக்க சென்னையில், 44வது உலக செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவது மிகப் பொருத்தமானது. இதனால் இந்தியாவுக்கே பெருமை. இப்போட்டி ரஷ்யாவில் நடைபெறுவதாக 4 ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. தற்போதைய போர் சூழல் காரணமாக வேறு நாட்டில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த விவரத்தை தமிழக முதல்வருக்கு தெரிவித்த 48 மணி நேரத்தில்   போட்டி நடத்துவதற்காக விண்ணப்பித்ததுடன்,  உத்தரவாத தொகையும் செலுத்தப்பட்டுவிட்டது. முதல்வரின் அந்த வேகம்தான் நமக்கு அனுமதி கிடைக்க காரணம். வழக்கமாக  இந்தியாவில் இருந்து 2 அணிகள்  உலக செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும். இம்முறை போட்டியை நடத்துவதால், கூடுதலாக ஒரு அணி பங்கேற்க வாய்ப்புள்ளது.  ரஷ்ய வீரர்கள் பங்கேற்பது குறித்து சர்வதேச செஸ் கூட்டமைப்பு வழிகாட்டுதல் நடைமுறைகள் கடைபிடிக்கப்படும். போட்டியை நடத்த ₹100 கோடி செலவாகும். ரஷ்யாவுக்கு 4 ஆண்டு அவகாசம் இருந்தது. ஆனால், நமக்கு வெறும் 4 மாதங்கள்தான் இருக்கிறது. போட்டி அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும்.தலைமைச் செயலாளர் இறையன்பு: மிகப்பெரிய விளையாட்டு திருவிழா மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. 10 நாட்களில் விண்ணப்பிக்க வேண்டும் என்ற நெருக்கடியான நிலையில் விரைவாக விண்ணப்பித்து, போட்டி நடத்தும் வாய்ப்பையும் பெற தமிழக முதல்வர் தான் காரணம். அந்த போட்டியை வரலாற்று சிறப்பு மிக்க மாமல்லபுரத்தில் நடத்துவது மிகவும் பொருத்தமானது. பண்டைய காலங்களில் போருக்கு முன்பாக மன்னர்கள் சதுரங்க விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர். சதுரங்க விளையாட்டுக்கும் நமக்கும் நீண்ட பாரம்பரிய தொடர்பு உள்ளது. 1927 முதல் நடந்துவரும் இப்போட்டியை இந்தியாவில் முதல்முறையாக நடத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது.சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த 2000 வீரர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். போட்டியை நடத்துவதற்கு தமிழகம் மிகவும் பொருத்தமானது. இங்குதான் விஸ்வநாதன் ஆனந்த் முதல் பிரக்ஞானந்தா வரை ஏராளமான கிராண்ட் மாஸ்டர்கள், சர்வதேச  மாஸ்டர்கள் உள்ளனர். அதுமட்டுமல்ல, பள்ளி அளவிலேயே  செஸ் போட்டிகளை நடத்துவதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தி தந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. செஸ் வீரர்களை ஊக்குவிப்பதிலும் முன்னோடியாக விளங்குகிறோம். சமீபத்தில் கூட சர்வதே போட்டிகளில் சாதித்த வீரர், வீராங்கனைகளுக்கு ₹1 கோடியே 98 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் எஸ்டிஏடி உறுப்பினர் செயலாளர் டாக்டர் ஆர்.அனந்தகுமார் நன்றி தெரிவித்து பேசினார்.காணொலியில் முதல்வர் வாழ்த்து: அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாடு உலக அரங்கில்  ஒரு மைல் கல்லாக நிலைத்து நிற்கப்போகும் ஒரு நிகழ்வை பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அந்த செய்தி என்னவென்றால் 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தும் வாய்ப்பை தமிழ்நாடு பெற்று இருக்கிறது. இது தமிழர்கள் அனைவருக்கும் பெருமிதம். விளையாட்டு போட்டிகள் என்றாலே ஆற்றல், திறமை, அழகு என நிறைய இருக்கும். அதிலும் செஸ் என்றால் விளையாடறவங்க நிதானத்தோடும், பார்ப்பவர்கள் பரபரப்போடும் பங்கேற்கும் அற்புதமான விளையாட்டு. இப்படிப்பட்ட அற்புதமான விளையாட்டுக்கும், தமிழ்நாட்டுக்கும் நிறைய தொடர்பு இருக்கு. உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தொடங்கி இன்று பிரக்‌ஞானந்தா வரை  தலைசிறந்த செஸ் வீரர்களை தொடர்ந்து உருவாக்கி வருகிறது  தமிழ்நாடு. இந்நிலையில், 150க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் இந்த செஸ் விளையாட்டு போட்டி, இதுவரை இந்தியாவில் நடந்த எல்லாவிதமான  பன்னாட்டு விளையாட்டு போட்டிகளை விட  மிகப் பெரியதாக அமையப் போகிறது.இந்த வரலாற்று சிறப்பு மிக்க வாய்ப்பை வழங்கிய பன்னாட்டு செஸ் அமைப்புக்கும், இந்திய செஸ் அமைப்புக்கும் நெஞ்சார்ந்த  நன்றியை சொல்லிக் கொள்கிறேன். விருந்தோம்பலுக்கும், பண்பாட்டுக்கும் பெயர் பெற்ற தமிழரின் பெருமையை உலகறியச் செய்கிற ஒரு நிகழ்வாக இது நிச்சயம் அமையும். உலக செஸ் போட்டியை தமிழ்நாடு அரசு மிகச்சிறப்பாக நடத்தும். உலக  விளையாட்டு வீரர்களை இருகரம் கூப்பி வரவேற்க காத்திருக்கிறோம். நன்றி, வணக்கம்….

Related posts

சொத்து தகராறில் பெண் தற்கொலை

சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு