தமிழக அரசு பள்ளிகளில் 50 லட்சம் மாணவர்களுக்கு சத்துணவு: கல்வி ஆணையர் உத்தரவு.

சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் 50 லட்சம் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்  சுமார் 1 கோடியே 20 லட்சம் மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே படித்து வருகின்றனர். அவர்களுக்கு 2021-22ம் கல்வி ஆண்டில், எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.  எனவே மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பள்ளிகள் ஆய்வின் போது கவனத்தில் கொண்டு சத்துணவு வழங்குவது தடையில்லாமல் வழங்கப்படுகிறதா என்று  ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் படிக்கும் சுமார் 50 லட்சம் மாணவர்கள் மதிய உணவு திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றனர். தற்போது கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் தங்கள் மதிய உணவை  பள்ளிகளில் பெற்றுக் கொள்ள முடியாத நிலை உள்ளது. இதனால், சில பின்தங்கிய மாணவர்கள் தங்கள் தேவைகளை  பூர்த்தி செய்ய முடியாமல் குழந்தைத் தொழிலாளர்களாக மாறும் சாத்தியங்கள் உள்ளது. சில பெற்றோர் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் நிலை ஏற்படுகிறது. இந்த நிலையால் பள்ளிகளில் இடை நிற்றல் கணிசமாக அதிகரிப்பதால் அவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது.  இதை தவிர்க்கும் வகையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம், அரசின் சார்பில் அந்த மாவணர்களுக்கு ரொட்டி மற்றும் முட்டையும் சேர்த்து வழங்க பரிசீலித்து வருகிறது. மேலும், பள்ளிக் குழந்தைகள் யாராவது குழந்தைத் தொழிலாளர்களாக இருக்கிறார்களா என்பதை கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்து, குறைகள் இருந்தால் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியரின் மூலம் அவற்றை நிவர்த்தி செய்யவும், பள்ளி மாணவர்கள் பயன்பெறவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவித்துள்ளார்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்