தமிழக அரசு பணியில் புதிதாக சேரும் பணியாளர்களுக்கு அண்ணா மேலாண்மை நிலையத்தில் அடிப்படை பயிற்சி வகுப்புகள் தொடங்கியது: தலைமை செயலாளர் இறையன்பு தகவல்

சென்னை: தமிழக அரசு பணியில் புதிதாக சேரும் பணியாளர்களுக்கு சென்னையில் உள்ள அண்ணா மேலாண்மை நிலையத்தில் நேற்று முதல் அடிப்படை பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாக தலைமை செயலாளர் இறையன்பு கூறியுள்ளார். இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் இறையன்பு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கடந்த 3ம் தேதி வழங்கப்பட்ட அனுமதியின்படி 11 துறைகளைச சார்ந்த 100 `ஆ’ பிரிவு அலுவலர்களுக்கு அடிப்படை பயிற்சி அண்ணா மேலாண்மை நிலையத்தில் உள்ள அண்ணா கலையரங்கில் நேற்று (12ம் தேதி) முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கும் அலுவலர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு அரசு வழிகாட்டுதல்களின்படி சமூக இடைவெளி பின்பற்றப்படுவதுடன்,  நாள்தோறும் உடல் வெப்பநிலை மற்றும் ஆக்சிஜன் அளவு ஆகியவை பரிசோதிக்கப்பட்டு, அதன் பின்னரே வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். பயிற்சியின் முடிவில் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வுகள் முடிந்த 10 நாட்களுக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் அன்றே சான்றிதழ்கள் டிஜிட்டல் முறையில் உரிய பாதுகாப்புக் குறியீட்டுடன் இணைய தளத்தில் பதிவேற்றப்படும். விரைவில் `அ’ பிரிவு அலுவலர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. பவானிசாகர் குடிமைப்பணி பயிற்சி நிலையத்தில் தற்போது ஈரோடு, தேனி, விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த 440 பணியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி நிகழ்நிலை மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் அரசால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை பின்பற்றி 350 பணியாளர்களுக்கு உறைவிட பயிற்சி விரைவில் தொடங்க உள்ளது. அண்ணா மேலாண்மை நிலையத்தில் புத்தாக்க பயிற்சி வகுப்புகள் அரசு அலுவலர்களுக்கு பல்வேறு தலைப்புகளில் உரிய அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி நேற்று முதல் தொடங்கப்பட்டது. மேலும், அண்ணா மேலாண்மை நிலையத்தின் சேலம், திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் இயங்கிவரும் மூன்று மண்டல பயிற்சி மையங்களிலும் நேற்று முதல் பயிற்சிகள் தொடங்கப்பட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்