தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் மீண்டும் அமல்? பரிசீலனையில் உள்ளதாக உயரதிகாரி தகவல்

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து அரசின் பரிசீலனையில் உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில், 1.4.2003 முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதில் 6 லட்சம் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைக்கப்பட்டனர். பங்களிப்பு ஒய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்தே இதை எதிர்த்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராடி வருகின்றனர். பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்திற்கு எதிராக 19 ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர். புதிய ஓய்வூதியத் திட்டத்தில், பணிக்கொடை, ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு முதலிய எந்தப் பலன்களும் பணி ஓய்வுக்குப் பிறகு கிடைக்காது என்பதால் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் புதிய பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில், மேற்குவங்கம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநில அரசுகள் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தன. கேரளா, டெல்லி, ஆந்திர மாநிலங்களின் அரசுகள், வல்லுநர் குழுவின் அறிக்கையைப் பெற்று பழைய பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளன. இதேபோல், தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்தநிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தின் நிலை குறித்து தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. இந்த கடிதத்திற்கு பதிலளித்து நிதித்துறை அரசு சார்பு செயலாளர் கோபால கிருஷ்ணன், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்திற்கு எழுதியுள்ள பதில் கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடிதத்தின் மீது தங்கள் கவனம் ஈர்க்கப்படுவதுடன் தங்களுடைய கோரிக்கையான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மட்டும் இத்துறையை சார்ந்தது என்பதால் அது தொடர்பாக கீழ் கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது. 1.4.2003 அன்றோ, அதன் பின்னரோ முறையான அரசு பணியில் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தினை மீண்டும் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகளை அளிக்க அமைக்கப்பட்ட வல்லுநர் குழு தனது அறிக்கையினை அரசிடம் அளித்துள்ளது. அவற்றை நன்கு பரிசீலித்து உரிய முடிவினை மேற்கொண்டு அதன் அடிப்படையில் அரசாணைகள் வெளியிடப்படும் என்ற விவரம் தங்களுக்கு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்