தமிழக அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க எம்எல்ஏ வலியுறுத்தல்

காரைக்குடி, ஆக. 31: அரசின் நலத்திட்டங்கள் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என தமிழக அரசிற்கு எம்எல்ஏ மாங்குடி கோரிக்கை விடுத்துள்ளார். காரைக்குடி மு.வி.அரசு மேல்நிலைப்பள்ளியில் அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. பள்ளிதலைமையாசிரியர் திருநாவுக்கரசு வரவேற்றார். எம்எல்ஏ மாங்குடி தலைமைவகித்து பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற காலத்தில் இருந்து பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தி வருகிறார்கள். சரியான நேரத்துக்கு பள்ளிக்கு வந்து செல்ல விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு சார்பில் 13 வகையாக பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத திட்டங்கள் தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது. கோரிக்கை வைத்தவுடன் நிறைவேற்றி தருபவராக நமது முதல்வர் உள்ளார். எனவே தான் அரசுபள்ளி மாணவர்களுக்கு வழங்கும் நலத்திட்ட உதவிகள் போல் அரசுஉதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். என்றார்.

இதனை தொடர்ந்து விழாவை துவக்கிவைத்து நகராட்சி சேர்மன் முத்துத்துரை பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் திராவிடமாடல் ஆட்சியில் கல்வி, மருத்துவத்துக்கு முக்கியத்தும் அளிக்கப்படுகிறது. இப்பள்ளியின் முன்னாள் மாணவர்க என சொல்லிக் கொள்வதில் பெருமைகொள்கிறேன். நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 14 பள்ளிகளும் தனியார் பள்ளிகளுக்கு இணையான உள்கட்டமைப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. 3000 த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். காலை உணவு திட்டத்தின் மூலம் 1600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இப்பள்ளிக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் மற்றும் எம்எல்ஏ தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நகர்மன்ற உறுப்பினர் சித்திக், அமுதா, மதிமுக மாவட்ட செயலாளர் பசும்பொன்மனோகரன், காங்கிரஸ் நகரதலைவர் பாண்டிமெய்யப்பன், காங்கிரஸ் நிர்வாகிகள் ஜெயபிரகாஷ், பிரவீன், மாஸ்மணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை