தமிழக அரசின் துரித நடவடிக்கையால் ஆவடி மாநகராட்சி பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறைந்தது: பொதுமக்கள் பாராட்டு

ஆவடி: ஆவடி மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் 4 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த மே மாதம் 2வது வாரத்தில் அதிகபட்சமாக தினசரி 550 பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தமிழக பால்வளத்துறை அமைச்சரும் திருவள்ளூர் மாவட்ட கொரோனா தடுப்பு  கண்காணிப்பு தலைவருமான ஆவடி சா.மு.நாசர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா ஆகியோர் நேரடியாக ஆய்வு செய்து தொற்று தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டனர்.  அவர்களுடன் ஆவடி நகராட்சி ஆணையர் நாராயணன், சுகாதார அலுவலர் ஜாபர், உதவி பொறியாளர்கள் சங்கர், சத்தியசீலன் ஆகியோர் மேற்பார்வையில் 48 வார்டுகளிலும் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக கள பணியாற்றி வந்தனர். இங்குள்ள 1.17 லட்சம் வீடுகளில் 350க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மூலம் காய்ச்சலும் கணக்கெடுப்பு பணிகள் முடிக்கப்பட்டது.அத்துடன் தொற்று பாதிக்கப்பட்ட தெருக்களில் தடுப்புகள் ஏற்படுத்தியும் கிருமி நாசினி தெளித்தனர். மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் முகாம்கள் அமைத்து 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. மாநகராட்சி முழுவதும் 55 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆவடி அரசு பொது மருத்துவமனையில் 50 ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் 300 படுக்கைகள் அமைக்கப்பட்டு தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.ஒரு மாதத்துக்கு முன்பு ஆவடி மாநகராட்சி பகுதிகளில் தினசரி 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டனர். தினமும் 18 பேர் வரை உயிரிழந்தனர். அரசு மற்றும் அமைச்சரின் தீவிர நடவடிக்கை காரணமாக கடந்த ஒரு வாரமாக இறப்பு எண்ணிக்கை இல்லை. தற்போது தினமும் 50 பேர்களுக்குத்தான் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். தொற்றால் குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக முதல்வரின் அதிரடி உத்தரவுகளும் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசரின் தீவிர கண்காணிப்பு பணிகளும் மாநகராட்சி அதிகாரிகளின் தடுப்பு நடவடிக்கைகளுமே காரணம் என்று தெரிவித்த மக்கள், முதல்வர், அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்