தமிழக அரசின் தரமான கல்வியால் இதுவரை இல்லாத அளவில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

கரூர், ஆக. 1: தமிழக அரசின் தரமான கல்வியால் இதுவரை இல்லாத அளவில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது என்று ராயனூர் அரசு பள்ளி விழாவில் மேயர் கவிதா கணேசன் பெருமிதமாக பேசினார். தமிழ்நாடு முழுவதும் முதல்வர் முக.ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு முறையாக பாடநூல் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் அரசு நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி மேயர் கவிதா கணேசன் தலைமையில் நடைபெற்றது. தாசில்தார் குமரேசன், மாமன்ற உறுப்பினர் ராயனூர் ராஜேந்திரன், மாவட்ட கல்வி அதிகாரி ராமநாதன் செட்டி (பொறு ப்பு), வட்டார அலுவலர்கள் கௌரி, சகுந்தலா, உதவி திட்ட கல்வி அலுவலர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கரூர் மாவட்ட வருவாய் அதிகாரி கண்ணன், மேயர் கவிதா கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சீருடை வழங்கி பேசினர். மேயர் கவிதா கணேசன் பேசுகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் அனைத்து துறையை விட கல்வித்துறைக்கு தனி முக்கியத்துவம் கொடுத்து அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டு, அரசு பள்ளிக்கு தமிழகம் முழுதும் மாணவ, மாணவிகளின் சேர்க்கை கணிசமான அளவு இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் தமிழக அரசின் தரமான கல்வி இதனை மாணவ செல்வங்கள் நன்கு பயன்படுத்தி வாழ்க்கை நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்றார்.

மாவட்ட வருவாய் அதிகாரி கண்ணன் பேசுகையில், கரூர் மாவட்டம் கல்வித்துறையில் இன்று சாதனை படைத்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கரூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் சேர்ந்து படித்த ஏராளமான மாணவ, மாணவிகள், டாக்டர்கள், பொறியாளர்கள், விஞ்ஞானிகள் புகழ்பெற்று விளங்குகின்றனர். இதேபோல நீங்களும் கடினமாக உழைத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றார். ஏராளமான பெற்றோர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.முடிவில் பள்ளி தலைமை ஆசிரியை ஞான ஒளி நன்றி கூறினார்

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி