தமிழக அரசின் அதிரடி முன்னெடுப்பால் புதிய ரயில்வே ஸ்டேஷன் பணிகள் ‘படு ஸ்பீடு’

*போடி பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சிபோடி : தமிழக அரசின் அதிரடி முன்னெடுப்பு பணிகளால், போடியில் சுப்புராஜ் நகர் பகுதியில் புதிய ரயில்வே ஸ்டேஷன் கட்டுமான பணிகள் வேகம் எடுத்துள்ளது. இதனால், விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் தென்னக ரயில்வேயில் மலையடிவாரத்தின் கீழ் போடிநாயக்கனூர் ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் போடி மெட்டு, குரங்கணி, கொட்டகுடி மற்றும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட பகுதிகளில் விளைவித்து எடுக்கப்படும் பண பயிர்களான தேயிலை, ஏலம், மிளகு, காப்பி, ஆரஞ்சு, கொய்யா, மா உள்ளிட்ட பல வாசனை திரவியங்களை, அவர்களது இங்கிலாந்து நாட்டிற்கு எடுத்துச் செல்ல போக்குவரத்து இல்லாமல் மிகுந்த சிரமம் அடைந்தனர். அதற்கு முன்னால் மலைப்பகுதியில் விளையும் அனைத்து விளைபயிர்களையும் குரங்கணி மையப் பகுதிக்கு கொண்டு வருவதற்கு தொழிலாளர்கள் தலைச்சுமையாகவும் குதிரை மற்றும் கழுதைகளையும் பயன்படுத்தினர். அதற்கு மேலாக ஆங்கிலேயர்கள் குரங்கணி முட்டம் சாலையில் மையமாக கொண்டு அடித்தளம் அமைத்து ரோப் எனப்படும் வின்ச் அமைத்து அதன் மூலமாக பொருட்களை குரங்கணிக்கு கொண்டு வந்து, அதன்பின்னர் மதுரை கொண்டு சென்றனர்.இந்நிலையில் போக்குவரத்திற்கு பெரும் சிரமம் ஏற்பட்டதால் கடந்த 1924ம் ஆண்டு போடி சுப்புராஜ் நகர் பகுதியில் இருந்து தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி ,செக்கானூரணி வழியாக மதுரை வரை ரயில்வே சாலை அமைத்து 1928ம் ஆண்டு துவக்கப்பட்டு தொடர்ந்து பயன்படுத்தி, அங்கிருந்து தொடர் ரயிலில் சென்னை சென்றடைந்து இங்கிலாந்து நாட்டிற்கு விமானம் கொண்டு சென்றனர்.தொடர்ந்து விவசாய பொருட்கள் மட்டும் கொண்டு சென்ற நிலையில், அடுத்து இந்திய சுதந்திரத்திற்கு பின்பு படிப்படியாக பயணிகள் ரயில்வே சேவையாக மாற்றப்பட்டு 2010ம் ஆண்டு வரையில் சிறப்பாக இயங்கியது. இந்த குறுகிய ரயில்வே சாலை வேகம் எடுத்து ஒரு மணி நேரம் 20 நிமிடத்திற்குள் பயண நேரத்தை குறைத்து மதுரை சென்றடையும் வகையில் அகல ரயில் பாதை அமைப்பதற்கு 2010ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி ரயில்வே சேவை நிறுத்தப்பட்டது.25 % நிதி தர மறுத்த அதிமுக அரசுபின்னர் ஒன்றிய அரசு, மாநில அரசிடம் 25 சதவீத நிதி ஒதுக்கீடு செய்து, போடியிலிருந்து மதுரை வரை ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தது. ஆனால் அதிமுக அரசு அதற்கான 25 சதவீத நிதியை தர முடியாது என்று மறுத்ததால் சுமார் 6 ஆண்டுகளுக்கு மேலாக ரயில்வே பணிகள் எதுவும் நடைபெறாமல் முடக்கப்பட்டது . ரயில்வே பணிகள் முற்றிலும் முடங்கியதால் தேனி மாவட்ட பகுதியில் விளைவித்து எடுக்கப்படுகின்ற அத்தனை விவசாய விளைபொருட்களும் ஒட்டு மொத்தமாக தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அனுப்ப முடியாமல் விவசாயிகள், வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதேபோல் ரயில் பயணம் செய்பவர்களில் அதிக எண்ணிக்கையில் மதுரை மற்றும் திண்டுக்கல் சென்றே அடித்து பிடித்து டிக்கெட் எடுத்து ரயிலில் பயணிக்க வேண்டிய நிலை இருந்தது. விவசாயிகளும், வியாபாரிகளும் விளைவிக்கும் பொருட்களுக்கு அதிக வாடகை கொடுத்து லாரி, டெம்போ வேன்களில், மினி லாரிகளிலும் ஏற்றி சென்னை மற்றும் பல பகுதிகளுக்கு கொண்டு செல்ல நிலையிருந்தது.ரூ.170 கோடி நிதி ஒதுக்கீடுதேனி மாவட்ட விவசாயிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உட்பட போராட்டக் குழுவினர் பல்வேறு போராட்டங்களுடன் மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று ரயில்வே பணிகள் விரைந்து தொடங்கிட கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் பயனாக 2017ம் ஆண்டு ரூ.170 கோடி நிதி ஒதுக்கப்பட்டு திட்டம் தயாரிக்கப்பட்டு, ரயில்வே பாதை பணிகள் துவங்கியது. இதற்கிடையில் மதுரையில் இருந்து தேனி வரை பணிகள் நிறைவு பெற்று அண்மையில் சென்னையில் நடந்த விழாவில் முதல்வர் மு.கஸ்டாலின் தலைமையில் பிரதமர் மோடி கொடி அசைத்து துவக்கி வைத்ததால் ரயில்வே சேவை தேனி வரை இயங்கி வருகிறது. இதற்கிடையில் தேனியிலிருந்து போடி வரை 16 கிலோ மீட்டர் தூரத்தில் தற்போது கொட்டக்குடி ஆற்றுக்கு இடையில் உள்ள பூதிபுரம், கோடாங்கிபட்டி, துரைராஜ புரம் காலனி தங்கப்பாலம், அணைக்கரைப்பட்டி, சன்னாசிபுரம் செட், போடி மயானச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் பாலம் மற்றும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.தொடர்ந்து அகன்ற ரயில்வே பாதை அமைக்கும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக போடி சுப்புராஜ் நகரில் உள்ள பழைய ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் அனைத்து கட்டிடங்களும் இடித்து அகற்றப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு ரயில்வே சாலையில் உயர்ந்த கான்கிரீட் தடுப்புகளும், வராண்டாவில் இரும்பு கம்பிகளால் மேற்கூரையும் அமைக்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது.மேலும், போடி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து இன்ஜினை திருப்பும் வகையில் சுப்புராஜ் நகர் புதுக்காலனி வரை ரயில்வே ட்ராக் பகுதி மற்றும் கான்கிரீட் தடுப்பு சுவர்கள் கட்டுமான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால், விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என மகிழ்ச்சி அடைந்துள்ளனர்….

Related posts

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் எம்.ஆர்.சேகர் மீண்டும் சிறையில் அடைப்பு

கூடலூர் நகர் பகுதியில் இரவு நேரத்தில் காட்டு யானை உலா: பொதுமக்கள் அச்சம்

தோடர் பழங்குடியின மக்கள் விற்பனை நிலைய கட்டுமான பணி தீவிரம்