தமிழகம் முழுவதும் 510 பதவி இடங்களுக்கு நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு: பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் 510 காலி இடங்களை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்தது. கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி  வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் ஏப்ரல் 30ம் தேதி வரை ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கான இடைத்தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவெடுத்தது. அதன்படி, 498 ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கும், 12 நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கும் என மொத்தம் 510 பதவியிடங்களுக்கு ஜூலை 9ம் தேதி (நேற்று) தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20ம் தேதி துவங்கியது. 28ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடந்தது. பதிவான வாக்குகள் வரும் 12ம் தேதி காலை 8 மணிக்கு எண்ணப்படுகிறது.இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடந்தது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 1022 வாக்குச்சாவடிகளிலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 19 வாக்குச்சாவடிகளிலும் மொத்தம் 1041 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு அனைத்தும் கண்காணிப்பு கேமரா, நுண் பார்வையாளர்கள், இணையதள கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் மாவட்ட அளவில் கண்காணிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிப்பதற்கு வாக்குச்சாவடிகளில் சாய்வு தளம், சக்கர நாற்காலி மற்றும் துணையாள் ஆகியவை ஏற்படுத்தப்பட்டிருந்தது.கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வாக்குப்பதிவு நடந்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச்சீட்டுகளும் வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட்டது. இதேபோன்று, சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் நேற்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. திருவள்ளூர்: பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம் அகரம்மேல் ஊராட்சியில் 3வது வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றவர், உடல்நலக்குறைவால் இறந்ததால் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த வார்டில் 189 ஆண்கள், 154 பெண்கள் என மொத்தம் 343 வாக்காளர்கள். இங்கு, சரத்குமார் (எ) அப்பு திறவுகோல் சின்னத்திலும், ராமச்சந்திரன் (எ) குரு கட்டில் சின்னத்திலும், மணிகண்டன் சீப்பு சின்னத்திலும் போட்டியிட்டனர். அகரம்மேல், சன்னதி தெருவில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு நடந்தது.ஊத்துக்கோட்டை: பூண்டி ஒன்றியம் மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் உடல்நலக்குறைவால் மரணமடைந்ததால் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த பதவிக்கு பிரதீப் அசோக்குமார், மணிமாறன் போட்டியிட்டனர். மொத்தம் 1768 வாக்காளர்கள். வாக்குச்சீட்டு பதிவு, மாம்பாக்கம் அரசு பள்ளியில் துவங்கியது.இதேபோல், பள்ளிப்பட்டு ஒன்றியம், 1வது வார்டில் காலியாக உள்ள ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வாக்குப்பதிவு நடந்தது. 10 வாக்குச்சாவடிகளில் 4817 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வார்டுக்குட்பட்ட சானாகுப்பம் கிராம மக்கள், தேர்தலை புறக்கணித்தனர். இவர்கள், லவா ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் உடைந்ததால் புதிதாக அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றாததால் தேர்தலை புறக்கணித்தனர்.சோழவரம்: சோழவரம் ஒன்றியம், நல்லூர் ஊராட்சியில் 8வது வார்டு உறுப்பினருக்கான வாக்குப்பதிவு நடந்தது. 991 வாக்காளர்கள் உள்ளனர். காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது, 36வது வார்டு அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் மரணமடைந்ததால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக சார்பில் சுதா (எ) சுப்பராயன், பாமக சார்பில் கன்னிவேல், அதிமுக சார்பில் சுயேச்சையாக வேணுகோபால், அமுமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் என 6 பேர் போட்டியிட்டனர். ஆண் வாக்காளர்கள் 2154, பெண் வாக்காளர்கள் 2356 என மொத்த வாக்காளர்கள் 4510 பேர். காஞ்சிபுரம் தியாகி நடுநிலைப்பள்ளியில் நேற்று காலை வாக்குப்பதிவு நடந்தது.  செங்கல்பட்டு: காட்டாங்கொளத்தூர் 10வது வார்டு, மதுராந்தகம் 15வது வார்டு, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் திம்மாவரம் 4வது வார்டு, பொன்பதிர்கூடம் 2வது வார்டு, திரிசூலம் 1வது வார்டு, நன்மங்கலம் 1வது வார்டு ஆகிய பதவிகளுக்கும் வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதற்காக, அந்தந்த பகுதியில் 40 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. வாக்காளர்களின் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு கையுறைகள் வழங்கப்பட்டது. முகக்கவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். கொரோனா தொற்றால் சிகிச்சையில் உள்ள வாக்காளர்கள் வாக்காளிக்க வசதியாக மாலை 5 மணி முதல் 6 மணி வரை சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உள்ளாட்சி காலி இடங்களுக்கு நேற்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிவுற்றதை தொடர்ந்து வாக்குப்பெட்டிகள் பூட்டி சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன்  வைக்கப்பட்டது. வருகிற 12ம் தேதி  காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அன்றைய தினமே முடிவுகள்  அறிவிக்கப்படுகிறது. வருகிற 12ம் தேதி  காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அன்றைய தினமே முடிவுகள்  அறிவிக்கப்படுகிறது….

Related posts

சொத்து தகராறில் பெண் தற்கொலை

சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு