தமிழகம் முழுவதும் 17312 சத்துணவு மையங்களுக்கு சமையல் உபகரணங்கள் வழங்க நடவடிக்கை

வேலூர், டிச.27: தமிழகம் முழுவதும் பழுதடைந்த சமையல் உபகரணங்களுடன் இயங்கி வரும் சத்துணவு மையங்களுக்கு புதிய சமையல் உபகரணங்கள் வழங்கும் நடவடிக்கையில், முதல்கட்டமாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளுக்கு சமையல் உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் காமராஜர் முதல்வராக இருந்த போது தொடங்கப்பட்ட மதிய உணவுத்திட்டம், கடந்த 1982ம் ஆண்டு முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் சத்துணவு திட்டமாக மேம்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சத்துணவு மையங்களில், 1 முதல் 10ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் சத்துணவை பெற்று வருகின்றனர். சமீபத்தில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்ட சத்துணவு மையங்கள் அனைத்தும் விறகு அடுப்பில்லா நிலைக்கு கொண்டு வரும் வகையில் சமையல் காஸ் இணைப்புகள் வழங்கப்பட்டன.

அதேபோல் சத்துணவு மானியமும் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அனைத்து சத்துணவு மையங்களுக்கும் புதிய சமையல் உபகரணங்கள் வழங்கப்படும் என்றும், முதலில் பழுதடைந்த சமையல் உபகரணங்களுடன் இயங்கும் சத்துணவு மையங்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவித்தார். அதன்படி, மொத்தமுள்ள 43 ஆயிரத்து 94 மையங்களில் 17 ஆயிரத்து 312 மையங்களுக்கு 10 லிட்டர் குக்கர், அன்னக்கூடை, கடாய், 10 கிலோ மற்றும் 25 கிலோ கொண்ட டிரம்கள், அட்டை அவிக்கும் பாத்திரம் என மொத்தம் ₹25.70 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படுகிறது. இதில் முதல்கட்டமாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களுக்கு மேற்கண்ட சமையல் உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை 7 ஊராட்சி ஒன்றியங்களில் 1 முதல் 5ம் வகுப்புவரை கொண்ட 124 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சத்துணவு மையங்களுக்கு சமையல் பாத்திரங்கள் வழங்குவதற்காக அந்தந்த பிடிஓ அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவை நாளை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்: 5 பேர் மீது வழக்கு

சவுக்கை செடிகளை பிடுங்கிய 4 பேர் மீது வழக்கு பதிவு

கணவன் மாயம்: மனைவி புகார்