தமிழகம் முழுவதும் விரைவில் மனித-விலங்கு மோதல்களை தடுக்க ஒலி எழுப்பும் கருவிகள் பொருத்தப்படும்: அமைச்சர் தகவல்

ஊட்டி: மனித- விலங்கு மோதலை தடுக்க கூடலூர் பகுதியில் முன் எச்சரிக்கை கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. இது பயன் அளித்தால் தமிழகம் முழுவதும் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என  வனத்துறை அமைச்சர் தெரிவித்தார். ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் விலங்கியல் துறை சார்பில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு  புகைப்பட கண்காட்சி நடந்தது.இதனை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அதன்பின், மனித விலங்கு மோதல் ஏற்படாமல் இருக்கவும், விலங்குகள் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வந்தால், அதனை தெரிந்துக் கொள்ளும் வகையில் மாணவர்கள் உருவாக்கப்பட்ட பல்வேறு கருவிகளையும் பார்வையிட்டார். தொடர்ந்து வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் கூறியதாவது:ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதில், பல்வேறு வகையான விலங்குகள், பறவைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மனித-வன விலங்கு மோதல்கள் குறித்தும் புகைப்படங்களும் வைக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் கூடலூரில் மனித விலங்கு மோதலை தடுக்கும் வகையில் யானைகள் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வந்தால், அதனை அறிந்துக் கொள்ளும் வகையில் முன் எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவி பயன் அளித்தால் தமிழகத்தில் மனித விலங்கு மோதல் ஏற்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள அனைத்து பகுதிகளிலும் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கூடலூர் மட்டுமின்றி தமிழகத்தில் மனித விலங்கு மோதலை தவிர்க்க வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்ைககள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.இவ்விழாவில், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ், ஊட்டி அரசு கலைக்கல்லூரி முதல்வர் எபினேசர், விலங்கியில் துறை பேராசிரியர் ராமகிருஷ்ணன் உட்பட பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்துக் கொண்டனர். மார்ச்சுக்குள் 2.80 கோடி மரக்கன்றுகள்:தமிழகத்தில் 33 சதவீதம் பரப்பளவு காடுகளை அதிகரிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வரும் 2030 ஆண்டிற்குள் இந்த பரப்பளவை எட்டுவதற்காக பசுமை தமிழகம் என்ற திட்டத்தினை உருவாக்கியுள்ளது. தற்போது இத்திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் வனத்துறை, உள்ளாட்சிகள், கல்வித்துறை உட்பட பல்வேறு துறைகளை ஒன்றிணைத்து மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் துவக்கப்பட்டு நடந்து வருகிறது. இத்திட்டத்தை சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வண்டலூர் உயிரியல் பூங்காவில் துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து, தற்போது தமிழகம் முழுவதும் இந்த மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் வனத்துறை மற்றும் இதர துறை சார்பில் நடந்து வருகிறது.  வரும் மார்ச் மாதத்திற்குள் தமிழகம் முழுவதும் 2 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என ஊட்டியில் வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்;  தமிழகத்தில் பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் அரசு துறைகளுடன் இணைந்து தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகம் முழுவதும் 1 கோடியே 30 லட்சம் மரக்கன்றுகள் பல்வேறு பகுதிகளிலும் நடவு செய்யப்பட்டுள்ளன. மேலும், வரும் மார்ச் மாதத்திற்குள் தமிழகம் முழுவதும் 2 கோடியே 80 லட்சம் மலர் கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை பெய்தால், வனப்பகுதிகளில் ட்ரோன் மூலம் விதைகளை தூவும் பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளது’’ என்றார்….

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

சென்னை மத்திய கோட்டம் அஞ்சல் அலுவலகத்தில் ஆயுள் காப்பீடு விற்பனை முகவர் பணிக்கு நாளை நேர்காணல்

வயிற்றுப்போக்கு தடுப்பு மற்றும் வைட்டமின் ‘ஏ’ வழங்க ஆகஸ்ட் 31ம் தேதி சிறப்பு முகாம்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்