தமிழகம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை: கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக வடகிழக்கு பருவ மழை அதிக அளவில் சென்னை மாநகராட்சி மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்ததால் சில இடங்களில் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துள்ளது.  அத்தகைய பகுதிகளில் சென்னை மாநகராட்சி மற்றும் இதர மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர் மற்றும் நிவாரண பணியில் சம்மந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகள் எடுக்க வேண்டிய போர்கால நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் குமார் ஜெயந்த் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.  கூட்டம் முடிந்ததும், தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கை:மழை நீர் புகுந்த இடங்கள், மழை நீர் வடிந்த இடங்களில் வரும் நாட்களில் தொற்று நோய்களை தடுக்க பன்முக நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவை உள்ளது. ஏற்கனவே, மக்கள் தங்கும் தற்காலிக நிவாரண முகாம்களில் மருத்துவ முகாம்கள் அமைத்து சிகிச்சை அளித்து வருதோடு மட்டுமல்லாமல் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இன்று (13ம் தேதி) சென்னை மாநகராட்சி உட்பட வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குறைந்தது 5,000 முகாம்கள் அமைக்க அறிவுறுத்தப்பட்டது.  இதில் சென்னை மாநகராட்சியில் 750 முகாம்களும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் இதர மாவட்டங்களில் எஞ்சிய 4,250 முகாம்கள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டது.  இது தவிர, 1,500 நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலம் வெள்ளம் பாதிக்கப்பட்ட வார்டுகளில் மருத்துவ சேவையை வழங்கப்படும். பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாக்கப்பட்ட குடிநீரை மட்டுமே பயன்படுத்துங்கள். தொற்று நோய் வராமல் தடுக்க, சோப்பு போட்டு அடிக்கடி கைகளை நீரினால் கழுவ வேண்டும். சித்த மருத்துவர்கள் மேற்பார்வையில் வழங்கப்படும் நிலவேம்பு, கபசுரக் குடிநீர் அருந்துதல் நலம். எவருக்கேனும் காய்ச்சல் மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ முகாம்கள் அல்லது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். குளங்கள் மற்றும் திறந்த வெளி கிணறுகளில் இருந்து தனியார் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுவதை பொதுமக்கள் பார்க்க நேர்ந்தால் உடனடியாக பொது சுகாதார கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இறந்து போன விலங்குகள் மற்றும் பறவைகளை காண நேர்ந்தால் உடனடியாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிக்கு தெரிவிக்க வேண்டும். அவைகளை ஆழப்பள்ளம் தோண்டி புதைத்து, புதைத்த இடத்தில் பிளீச்சிங்பவுடரை தூவ வேண்டும். பொதுமக்கள் அவசர தேவைக்கு 044-29510400, 044-29510500 மற்றும் 9444340496, 8754448477 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். கட்டணமில்லா ‘104’ அவசரகால மருத்துவ சேவை எண்ணை தொடர்பு கொண்டும் பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்