தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஏடிஎம்மில் பல லட்சம் மோசடி; வடமாநில ஆசாமிகள் சிக்கினர் பகீர் தகவல்கள் அம்பலம்

பெரம்பூர்: வியாசர்பாடியில் நூதன முறையில் முதியவரை ஏமாற்றி அவரது ஏடிஎம் கார்டில் இருந்து ரூ.1.5 லட்சத்தை திருடிய வட மாநிலத்தவர் 3 பேர் சிக்கியது எப்படி என்பது குறித்து பகீர் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை வியாசர்பாடி பி.வி. காலனி 1வது தெருவை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி (54). இவர் திருவொற்றியூர்  இந்திரா நகரில் உள்ள ரேஷன் கடையில் எடையாளராக பணி செய்து வருகிறார். இவரது பி.எப் பணத்திலிருந்து ரூ.1.5 லட்சத்தை தனது வங்கி கணக்கில் பெற்றுள்ளார். அந்த பணத்தை எடுப்பதற்காக கடந்த 26ம் தேதி காலை 7 மணிக்கு அம்பேத்கர் கல்லூரி எதிரே உள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்றார். அப்போது பணம் எடுக்கும் போது பணம் வரவில்லை. பின்னால் இருந்த நபர், தான் பணத்தை எடுத்து தருவதாக கூறி அவரது ஏடிஎம் கார்டை வாங்கி பாஸ்வேர்ட் நம்பரையும் வாங்கியுள்ளார். சிறிது நேரத்தில் பணம் வரவில்லை, என்று கூறி அவரது ஏடிஎம் கார்டுக்கு பதிலாக வேறு ஒரு ஏடிஎம் கார்டை கொடுத்து விட்டு சென்று விட்டார். புண்ணியமூர்த்தி பணம் வரவில்லை என்று நினைத்து வேலைக்கு சென்று விட்டார். அன்று மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1.15 லட்சம் எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி  வந்துள்ளது.இதை  பார்த்து அதிர்ச்சி அடைந்த புண்ணியமூர்த்தி, எம்கேபி நகர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த எம்கேபி நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வர்கீஸ், ஏடிஎம் மையத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். அதில், வட மாநிலத்தை சேர்ந்த நபர், முதியவருக்கு உதவி செய்வது போன்றும் வெளியே 2 நபர்கள் காத்து இருப்பது போன்றும் இருந்தது. இதையடுத்து புண்ணியமூர்த்திக்கு வந்த குறுஞ்செய்திகளை பார்த்தபோது ரூ.40 ஆயிரம் ஏடிஎம்மில் எடுத்து உள்ளது போன்றும், மீதி பணத்திற்கு தி.நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் நகை வாங்கியது போன்றும் இருந்தன. அதை வைத்து தி.நகரில் உள்ள நகை கடைக்கு சென்று விசாரித்தபோது  வட மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் நகை வாங்கியது சிசிடிவில் பதிவாகி இருந்தது. தொடர்ந்து, போலீசார் கடையில் இருந்த நகை வாங்கிய சீட்டை பார்த்தபோது அதில் ஒரு தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த தொலைபேசி எண்ணை ஆய்வு செய்தபோது, அது ஒடிசா மாநிலத்தை சேர்ந்த எண் என்பதும்,  கடந்த வருடம் முதல் அந்த எண் இயங்காமல் இருந்து வந்துள்ளதும், அந்த நம்பரை வைத்து புதிதாக இன்னொரு தொலைபேசி எண் பெற்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அவ்வாறு தொடர்ச்சியாக 3 தொலைபேசி எண்களை மாற்றி கடைசியாக ஒரு தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் திருடர்கள் சென்னையில் இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர், நேற்று காலை எம்.கே.வி நகர் குற்ற பிரிவு இன்ஸ்பெக்டர் வர்கீஸ் தலைமையிலான போலீசார் அவர்களை மீஞ்சூரில் வைத்து கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதினர். அதில், பீகார் மாநிலம், கிழக்கு சம்காரன் பகுதியை சேர்ந்த பகாளி குமார் (29), மனோஜ் குமார் ஷானி (28) அஜய் குமார் (26) என்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 22 கிராம் தங்கம், ரூ.10,000 மற்றும் 60 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஏடிஎம் கார்டுகள் திருவனந்தபுரம், ஐதராபாத், பெங்களூரு போன்ற இடங்களில் இருந்து வியாசர்பாடியில் செய்தது போன்றே முதியவர்களை குறி வைத்து ஏமாற்றி அவர்களது ஏடிஎம் கார்டுகளை பெற்று பணம் பறித்தது தெரியவந்துள்ளது. மேலும் இவர்களிடம் 500 ரூபாய் நோட்டு போன்று அதே வடிவில் பேப்பர் பண்டல் செய்து வைத்துள்ளனர். யாராவது ஏடிஎம்மில் இருந்து மொத்தமாக பணம் எடுத்து வந்தால் அந்த பண்டலை கீழே போட்டுவிட்டு பணம் உள்ளது என்று கூறி அவர்களது பணத்தை திருடி செல்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர் என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. திருவனந்தபுரம், ஐதராபாத், பெங்களூரு என எங்கேயும் சிக்காத திருடர்கள் கடைசியாக எம்.கே.பி நகர் போலீசாரிடம் சிக்கியது குறிப்பிடத்தக்கது….

Related posts

சொகுசு கார் மோசடி: தவெக நிர்வாகி கைது

உரிய ஆவணம் இல்லாத பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது