Monday, July 8, 2024
Home » தமிழகம் அமைதி பூங்காவாக இருப்பதால்தான் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது : 319 போலீஸ் அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழகம் அமைதி பூங்காவாக இருப்பதால்தான் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது : 319 போலீஸ் அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

by kannappan

சென்னை: ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தமிழகத்தை  நோக்கி புதிய புதிய  தொழிற்சாலைகள் வருகின்றன என்றால், தமிழகம்  அமைதிப்பூங்காவாக இருக்கிற  காரணத்தால்தான். புதிய ஒப்பந்தங்கள்  கையெழுத்தாகிறது என்றால், தமிழகத்தில்  சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதால் தான் என்று சிறப்பாக பணியாற்றிய போலீஸ்  அதிகாரிகளுக்கு சென்னையில் நடந்த பதக்கங்கள் வழங்கும் விழாவில் முதல்வர்  மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக காவல்துறையில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும்  கண்காணிப்புத்துறை, தீயணைப்பு மற்றும் மீடபுப்பணிகள் துறை, சிலைகள்  மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, ஊர்காவல் மற்றும் குடிமை பாதுகாப்பு  படை மற்றும் தடய அறிவியல் துறைகளில் உள்ள காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள்  வரை பணியின்போது சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் குடியரசு  தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள், தமிழ்நாடு  முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்திய  குடியரசு தலைவரின் தகைசால் மற்றும் மெச்சத்தக்க பணிக்கான காவல் பதக்கம்  2017 மற்றும் 2019-20, ஒன்றிய உள்துறை அமைச்சரின் சிறந்த பயிற்சிக்கான  காவல் பதக்கம் 2019-20, ஒன்றிய உள்துறை அமைச்சரின் சிறந்த புலனாய்வுக்கான  காவல் பதக்கம் 2020-21, ஒன்றிய உள்துறை அமைச்சரின் அசாதாரண நுண்ணறிவு  திறனுக்கான காவல் பதக்கம் 2020-21, ஒன்றிய உள்துறை அமைச்சரின் சிறந்த  செயலாக்கத்திற்கான காவல் பதக்கம் 2020 என மொத்தம் 319 காவல் அதிகாரிகளுக்கு  அறிவிக்கப்பட்ட பதக்கங்கள் வழங்கும் விழா நேற்று எழும்பூர் ராஜரத்தினம்  மைதானத்தில் நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வாகன மற்றும் குதிரைப்படை  அணிவகுப்பு மரியாதை, சிவப்பு கம்பளம் வரவேற்பு, பேண்டு வாத்தியங்கள் முழங்க   நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது தமிழக  டிஜிபி சைலேந்திரபாபு முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து மேடைக்கு வரவேற்றார். பின்னர் திறந்த ஜீப்பில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின்  காவல்துறை அணிவகுப்பை ஆய்வு செய்தார். பிறகு காவல் குழுவினரின் அணிவகுப்பு  மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் 2020ம்  ஆண்டு குடியரசு தலைவரின் தகைசால் பணிக்கான காவல் பதக்கங்களை கூடுதல்  டிஜிபிக்கள் அபய் குமார் சிங், ஷைலேஷ் குமார் யாதவ், காவல்கண்காணிப்பாளர்  பி.கே.பெத்து விஜயன், 2021ம் ஆண்டு குடியரசு தலைவரின் தகைசால் பணிக்கான  காவல் பதக்கங்கள் கூடுதல் டிஜிபிக்கள் மகேஷ் குமார் அகர்வால்,  எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதம், இன்ஸ்பெக்டர் மணிகண்ட குமார் ஆகியோருக்கு  வழங்கப்பட்டது. மேலும், 2021ம் ஆண்டின் மெச்சத்தக்க பணிக்கான காவல்  பதக்கங்களை சென்னை மாநகர வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அன்பு, சென்னை மாநகர  போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில்குமார் சி.சரத்கர், ஐஜி சந்தோஷ்குமார்,  லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி விமலா, டிஎஸ்பி எஸ்.ஜான்சன் என 59 காவல் துறை  அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பிறகு டிஜிபி  சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், தாம்பரம் கமிஷனர் ரவி  உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீதமுள்ள 260 போலீஸ் அதிகாரிகளுக்கு பதக்கங்களை  அணிவித்து கவுரவித்தனர். நிகழ்ச்சியில் தமிழக உள்துறை செயலாளர் பிரபாகர்,  டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், லஞ்ச  ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி, தீயணைப்புத்துறை டிஜிபி பி.கே.ரவி உள்ளிட்ட  அனைத்து பிரிவு காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மற்றும்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: காவல்துறை என்றாலே தண்டனையை வாங்கித் தரும் துறையாக  மட்டும் அனைவரும் நினைக்கிறார்கள். காவல்துறை என்பது குற்றங்கள் நடக்காத  வகையில் சூழ்நிலைகளை உருவாக்கித் தரும் துறையாக மாறவேண்டும். எந்த ஒரு காவலராக  இருந்தாலும், அவரது செயல் காவல்துறையை தலைநிமிர வைக்க வேண்டுமே தவிர,  தலைக்குனிவை ஏற்படுத்திவிடக் கூடாது. அரசியல் ரீதியாகவோ, மதம்  மற்றும் சாதி காரணமாகவோ வன்முறைகள் உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி திட்டமிட்டு இந்த அரசாங்கத்துக்கு நெருக்கடி ஏற்படுத்த  நினைப்பவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.  ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தமிழகத்தை  நோக்கி புதிய புதிய தொழிற்சாலைகள் வருகின்றன என்றால், தமிழகம்  அமைதிப்பூங்காவாக இருக்கிற காரணத்தால்தான். புதிய ஒப்பந்தங்கள்  கையெழுத்தாகிறது என்றால், தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதால் தான்.  அத்தகைய அமைதிச் சூழலை காக்க வேண்டும்.   காவலர் முதல் தலைமைக் காவலர் வரை ஒருநாள் கட்டாய வார  விடுமுறை அறிவிக்கப்பட்டது. சிறப்பு உதவி ஆய்வாளர், உதவி ஆய்வாளர்களுக்கு  இரு வாரத்துக்கு ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. காவலர்களுக்கு கொரோனா  கால ஊக்கத் தொகையாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. காவலர்களுக்கு இதுவரை  வழங்கப்பட்ட இடர்படியானது 800 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாக  உயர்த்தப்பட்டது. 2,212 காவலர்களுக்கான சிறுதண்டனை குறைக்கப்பட்டது. 1,132  பேருக்கு கருணை அடிப்படையிலான காவல்நிலைய வரவேற்பாளர் பணி வழங்கப்பட்டது. தாம்பரம், ஆவடியில் புதிய காவல் ஆணையரகங்கள் அமைக்கப்பட்டது. காவல்துறையில்  கட்டப்படும் வீடுகளின் பரப்பளவு 750 சதுர அடியாக அதிகரிக்கப்பட்டது.1.20  லட்சம் காவலர்களுக்கு ரூ.10 கோடி செலவில் சென்னை அண்ணா மேலாண்மை மையத்தின்  மூலமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னை காவல் சிறப்பு பிரிவுகளில்  பணிபுரிவோர்க்கு உணவுப்படி வழங்கப்படுகிறது. திட்டமிட்ட குற்ற நுண்ணறிவுப்  பிரிவு ஆளினர்களுக்கு 5 விழுக்காடு சிறப்பு ஊதியம் அளிக்கப்படுகிறது. தீயணைப்புத் துறை மற்றும் சிறைத் துறைப் பணியாளர்களுக்கு காவல் துறை  மருத்துவமனைகளில் மருத்துவ வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இவை  அனைத்துக்கும் மேலாக புதிய காவல் ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆணையத்தின் அறிக்கை கிடைத்த பிறகு காவல் துறையினரது கோரிக்கைகள் அரசால்  பரிசீலனை செய்யப்பட்டு, அவை படிப்படியாக நிறைவேற்றித் தரப்படும் என்ற  உறுதியை இந்த நிகழ்ச்சியின் மூலமாக அறிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.இவ்வாறு முதல்வர் பேசினார்.ஒன்றிய அரசுக்கு இணையாக ஊக்கத்தொகை, சலுகைகள்முதல்வர்  மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘வீர தீர செயல் புரிந்த  காவல் அதிகாரிகள், காவலர்கள் அல்லது வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு  அரசால் வழங்கப்பட்டு வரும்  முதலமைச்சரின் வீர  பதக்கங்களுக்கான ஊக்கத் தொகை மற்றும் சலுகைகள், ஒன்றிய அரசு வழங்கக்கூடிய, குடியரசு தலைவர்  வீரப்பதக்கத்திற்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை மற்றும்  சலுகைகளுக்கு இணையாக வழங்கப்படும். காவலர்களது நலனை அரசு கண்ணும்  கருத்துமாக பேணிக்  காப்பாற்றும். மக்களின் நலனைக் காவலர்களாகிய நீங்கள்  தான் பாதுகாக்க வேண்டும்’’ என்றார்….

You may also like

Leave a Comment

four + 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi