Monday, July 8, 2024
Home » தமிழகத்தை தமிழ்நாட்டு தலைமை ஆள வேண்டுமா? டெல்லி தலைமை ஆள வேண்டுமா? பிரதமர் மோடி முன்பு இபிஎஸ்சும், ஓபிஎஸ்சும் தலைகுனிந்து நிற்கிறார்கள்: அதிமுகவின் பணபலம் தேர்தலில் எடுபடாது; கே.எஸ்.அழகிரி ஆவேச பேட்டி

தமிழகத்தை தமிழ்நாட்டு தலைமை ஆள வேண்டுமா? டெல்லி தலைமை ஆள வேண்டுமா? பிரதமர் மோடி முன்பு இபிஎஸ்சும், ஓபிஎஸ்சும் தலைகுனிந்து நிற்கிறார்கள்: அதிமுகவின் பணபலம் தேர்தலில் எடுபடாது; கே.எஸ்.அழகிரி ஆவேச பேட்டி

by kannappan

தமிழகத்தை தமிழ்நாட்டு தலைமை ஆள வேண்டுமா? டெல்லி தலைமை ஆள வேண்டுமா? என்று கேள்வி எழுப்பிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பிரதமர் மோடி முன்பு ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் தலைகுனிந்து நின்று கொண்டு பேசுகிறார்கள் என்றும் அதிமுகவின் பண பலம் இந்த தேர்தலில் எடுபடாது என்றும் ஆவேசமாக கூறினார். அவரது பேட்டி: * சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எந்த அளவுக்கு உள்ளது?திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது. காரணம், திமுக கூட்டணி கட்சிகளின் ஓட்டு சதவீதம் என்பது அதிமுகவின் ஓட்டு சதவீதத்தை விட அதிகம். இரண்டாவது திமுக கூட்டணி ஒரு கொள்கையின் அடிப்படையில் இருக்கிறது. இதை மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள். மூன்றாவது கூட்டணி கட்சிகள் எல்லாம் நாடாளுமன்ற தேர்தலின் போதே தெளிவாக சொல்லியிருக்கிறார்கள், ‘எங்களது கூட்டணி வெற்றி பெற்றால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் முதல்வர்’ என்று, ஆனால் அதிமுக கூட்டணியில் 20 நாட்களுக்கு முன்பு கூட பாமகவும், பாஜவும் எடப்பாடி தான் முதல்வர் என்று சொல்லவில்லை. டெல்லி தான் முடிவு செய்யும் என்று பாஜவும், நாங்கள் யோசித்து சொல்வோம் என்று பாமகவும் கூறியது. எனவே அவர்களிடம் ஸ்திரமற்ற தன்மை இருக்கிறது. எங்களிடம் ஸ்திரமான தன்மை இருக்கிறது. மக்கள் இவைகளை எல்லாம் கூர்ந்து பார்ப்பார்கள். அதுமட்டுமல்லாமல் திமுக தேர்தல் அறிக்கை என்பது வளர்ச்சியை, வேலைவாய்ப்பை மையமாக கொண்டது. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழகத்தை யார் ஆள்வது என்பதை பற்றிய கேள்வி அதில் இருக்கிறது. தமிழகத்தை தமிழ்நாட்டு தலைமை ஆள வேண்டுமா? அல்லது டெல்லியில் இருந்து கட்டளைகளை பெற்று இங்கிருப்பவர்கள் ஆள வேண்டுமா? என்பது தான் கேள்வி.  இன்றைக்கு அதிமுக நிலை எப்படி இருக்கிறது என்று சொன்னால், பிரதர் மோடி முன்பு முதல்வரும், துணை முதல்வரும் தலைகுனிந்து நிற்கிறார்கள். அதை மக்கள் விரும்ப மாட்டார்கள். * அதிமுகவை பாஜ அடிமையாக நடத்துகிறது என்ற பரவலான குற்றச்சாட்டு பற்றி என்ன சொல்கிறீர்கள்?அதிமுக கூட்டணியில் பாஜ ஒரு பிரதான கட்சி. இவர்களால் பேரிடர் இழப்பு ஏற்பட்ட போதும் சரி, கொரோனா காலத்திலும் சரி, ஒரு சிறப்பு நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற முடியவில்லை. ஏனென்றால் அதற்கான செல்வாக்கு இவர்களுக்கு இல்லை. நீட் தேர்வுக்கு சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினார்கள். மத்திய அரசு நினைத்தால் மாநில அரசுகளுக்கு அந்த உரிமையை கொடுக்கலாம். விரும்புகிறவர்களுக்கு நீட் தேர்வை நடத்துவதற்கான சட்டம் இருக்கிறது. ஆனால் இவர்கள் அனுப்பி அதை கேட்டு பெற முடியவில்லை. அவர்கள் ஆளுமையின் கீழ் தான் இவர்கள் இருக்கிறார்கள். * சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு அதிமுக பணத்தை வாரி இறைக்க வாய்ப்புள்ளது என்ற பேச்சு மக்கள் மத்தியில் பரவலாக உள்ளதே?இந்த முறை வெற்றி பெற முடியாது என்று அதிமுகவுக்கு நன்றாக தெரியும். அவர்களிடம் இருக்கிற இடைநிலை, கடைநிலை தோழர்களோடு நான் பேசுகிறபோது, அவர்கள் அதை சொல்கிறார்கள். இறுதியாக என்ன சொல்கிறார்கள் என்றால், பணத்தை கொடுத்து பார்த்துக் கொள்வோம் என்கிறார்கள். அப்படி ஒரு எண்ணம் அவர்களிடம் இருக்கிறது. எனக்கு தெரிந்தவரை எனது 50 ஆண்டு கால அரசியலில் பணம் என்பது ஓரளவு வேலை செய்யும். அதை இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அதுவே ஒரு வெற்றியை தீர்மானிக்கும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. கடந்த நாடாளுமன்ற தேர்லில் கூட அதிக அளவில் பணம் செலவு செய்தார்கள். வெற்றிக்கு அருகில் கூட அவர்களால் வர முடியவில்லை. * வருமான வரித் துறையை கொண்டு திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை பாஜ மிரட்ட வாய்ப்புள்ளது என்ற விவாதம் எழுந்துள்ளதே?  பாஜ ஒரு ஜனநாயக கட்சி அல்ல. அவர்கள் ஒற்றை ஆட்சியிலும், ஒற்றை கொள்கையிலும் நம்பிக்கை உடையவர்கள். ஒன்றில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சாம பேத சான தண்டம் என எல்லா வகையிலும் செயல்படுவார்கள். ஒவ்வொரு தனிமனிதனின் சொந்த விஷயத்திலும் அவர்கள் தலையிடுகிறார்கள். தங்களது கட்சியில் இருப்பவர்களையும் ஒரு கண்காணிப்பில் வைத்திருக்கிறார்கள். எதிர்கட்சியில் உள்ளவர்களையும் துன்பத்துக்கு ஆளாக்க, சிரமங்கள் கொடுக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் இதெல்லாம் வெற்றி பெறாது, உலக, இந்திய வரலாற்றில் எல்லாம் இதுபோன்று ஏராளம் நடந்திருக்கிறது. இவ்வளவு நாள் ரெய்டுக்கு வராமல் இப்போது ஏன் வருகிறார்கள் என்ற எண்ணம் மக்களுக்கு வரும். எனவே அது பாஜவை பலப்படுத்திடவோ, எங்களை பலவீனப்படுத்திவிடவோ முடியாது.* அதிமுக அமைச்சர் வேட்பாளர்கள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளதே?எனது 50 ஆண்டு கால அரசியல் அனுபவத்தில் இவர்களை போன்று அத்துமீறியவர்கள் கிடையாது. இயற்கை வளங்களை கொள்ளை அடித்தனர். மணல் வியாபாரத்தில் ஒரு வெளிப்படையான கொள்கை என்பதே கிடையாது. வேண்டியவர்களுக்கு மண்ணை அள்ளிக் கொடுக்கிறார்கள். அதில் மட்டும் ஆண்டொன்றுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் விரயமாகிறது. இவ்வளவு பெரிய அரசால் அந்த மணல் விற்பனையை ஒழுங்குபடுத்தி எந்த குறைபாடும் இல்லாமல் செய்ய முடியாதா? ஆனால் அவர்களுக்கு பெரிய வருமானமே அதில் தான் வருகிறது. டெண்டர் விடுகிற விஷயத்தில் ஆன்லைன் டெண்டர் என்று சொல்கிறார்களே தவிர, இறுதியாக அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே அந்த டெண்டர் போகிறது. அதுமாதிரி சந்து பொந்துகளை வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் மக்களுக்கு நன்றாக தெரிகிறது. கிராம சாலைகளில் இருந்து ஒன்றிய, மாவட்ட, நகர சாலைகள் எல்லாம் பயணம் செய்ய முடியாத அளவுக்கு தரமில்லாமல் உள்ளது. இவை எல்லாம் இந்த அரசாங்கத்தின் தோல்விகள்.* அதிமுக வெளியிட்டுள்ள சட்டமன்ற தேர்தல் அறிக்கை நடைமுறைக்கு சாத்தியமான ஒன்றா?ஒவ்வொரு குடும்பத்துக்கு ஒரு அரசு வேலை என்று தேர்தல் வாக்குறுதியில் கூறுகிறார்கள். அது சாத்தியமே இல்லை. அரசாங்கத்தில் வேலையே இல்லை. இந்த அரசு 7 லட்சம் கோடி கடனில் இருக்கிறது. மேலும் அரசு வேலை தருவதற்கோ, வாஷிங் மெஷின் கொடுப்பதற்கோ இவர்களிடம் பணமே இல்லை. முன்னாடி, பெண்களுக்கு ஒரு ஸ்கூட்டர் தருவதாக சொன்னார்கள். அவர்கள் கட்சிக்காரர்களுக்கு மட்டும் கொடுத்து விட்டு விட்டுவிட்டார்கள். அதன் பின்பு கொடுக்கவில்லை. ஏனென்றால் அரசிடம் பணம் இல்லை. எனவே இவர்களால் அரசு வேலை எல்லாம் கொடுக்க முடியாது. அனைத்து வேலைகளும் தனியாருக்கு ேபாய் விட்டது. ஏறக்குறைய மூன்றரை லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பட்டதாரிகள் இருக்கிறார்கள். கடந்த 5 ஆண்டு காலத்தில் எவ்வளவு அரசு வேலை வழங்கினார்கள். முதலில் அந்த புள்ளி விவரங்களை கொடுக்கட்டும். அவர்கள் வழங்கவில்லை. மக்களை கவர்வதற்காக அல்லது ஏமாற்றுவதற்காக சொல்லப்பட்ட தேர்தல் அறிக்கை.  * அதிருப்தியில் இருக்கக்கூடிய மாற்று கட்சியினரை பாஜவுக்கு இழுத்து சீட் வழங்கி வருவது பற்றி?பாஜ தோல்வியே அது தான். பாஜ கட்சியில் இருப்பவர்களுக்கு சீட் கொடுக்க முடியவில்லை. ஏனென்றால் சீட் பெறும் அளவுக்கு பாஜவில் ஆள் இல்லை. பாஜ கட்சியின் நிலமை அப்படி தான் இருக்கிறது. எனவே கட்சி மாறுகிறவர்களை பாஜ ஆதரிக்கிறது. இப்படி கட்சி மாறுகிறவர்களை பற்றி மக்கள் மனதில் என்ன அபிப்ராயம் இருக்கும். தமிழ்நாட்டில் காமராஜருக்கும், கலைஞருக்கும் உள்ள பெருமை என்னவென்றால், பிறந்ததில் இருந்து இறப்பு வரை ஒரே கட்சியில் இருந்தார்கள் என்பது தான். மக்கள் யாரை விரும்புகிறார்கள் என்றால், சரியா, தவறோ யார் ஒரே கட்சியில் இருக்கிறார்களோ அவர்களை தான் விரும்புகிறார்கள். ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு மாறுபவர்களுக்கு பாஜ சீட் வழங்குகிறது என்றால் பாஜவில் தகுதியான வேட்பாளர்களே இல்லை என்பது தெரிகிறது. பாஜவின் இதுபோன்ற நடவடிக்கைகள் மக்களை முகம் சுழிக்க வைக்கிறது.  * கமல்ஹாசன், டிடிவி.தினகரன் ஆகியோரது கூட்டணி கட்சிகளால் திமுக வேட்பாளர்களின் ஓட்டுகளை பிரிக்க வாய்ப்புள்ளதா? அப்படி வாய்ப்பு இல்லை. காரணம், தமிழக மக்களுக்கு ஒன்று தெளிவாக தெரியும். தங்களது வாக்குகள் சிதறிவிடக்கூடாது என்று கருதுவார்கள். வெற்றி பெற வாய்ப்புள்ள தாங்கள் விரும்புகிற கட்சிக்கு தான் அவர்கள் வாய்ப்பளிப்பார்களே தவிர கமல்ஹாசனை அவர்கள் விரும்பினாலும், நேசித்தாலும், ரசித்தாலும் அவர்கள் கொள்கை சரியென்று கருதினாலும், இதை எல்லாம் செயல்படுத்துவதற்கு இந்த தேர்தலில் அவருக்கு வாய்ப்பில்லை. கமல்ஹாசன் அணி, வாக்குகளை பிரிக்கத்தான் வந்து நிற்கிறார் என்பது மக்களுக்கு புரியும். டிடிவி.தினகரன் நிலமையும் அது தான். எப்போது சசிகலா அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று சொன்னாரோ அதன் பிறகு அவர்களை விரும்புகிறவர்கள் இவர்களை நம்பி என்ன பிரயோஜனம் இருக்கிறது என்று தான் நினைப்பார்கள். வேண்டியவர்கள் கொஞ்சம் இருப்பார்கள் மற்றவர்கள் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள்….

You may also like

Leave a Comment

one × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi