தமிழகத்துக்கு நாளை மறுநாள் வருகை ஓபிஎஸ், இபிஎஸ்சை சந்திக்க பிரதமர் மோடி மறுப்பு?: பரபரப்பு தகவல்கள்

திருச்சி: தமிழகத்துக்கு நாளை மறுநாள் வருகை தரும் பிரதமர் மோடியை நேரில் சந்திக்க ஓபிஎஸ், இபிஎஸ் அனுமதி கேட்டு இருந்தனர். இருவரையும் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையேயான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த செப்.20ம் தேதி டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். ஆனால், பிரதமர் மோடியை சந்திக்க முடியாமல் விரக்தியில் திரும்பினார். இதே போல் ஓ.பன்னீர்செல்வமும் பிரதமர் மோடியை சந்திக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் முடியவில்லை. இந்நிலையில், திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை மறுதினம் தமிழகம் வருகிறார். அப்போது அவரை நேரில் சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தங்களுக்கு வேண்டிய நபர்கள் மூலம் டெல்லியில் பிரதமர் அலுவலகத்தை நாடியுள்ளனர். ஆனால், தற்போது வரை அவர்களுக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து எவ்வித சம்மதமும் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனினும் மோடியை சந்திப்பதற்கான முயற்சியில் இருவரும் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். ஆனால், பிரதமர் மோடி தரப்பில் இருவரையும் சந்திக்க விருப்பம் இல்லை என்று கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.இதுகுறித்து டெல்லி பாஜ நிர்வாகி ஒருவர் கூறுகையில், திண்டுக்கல் வரும் பிரதமர் மோடியை நேரில் சந்திக்க  ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முயற்சி செய்தனர். ஆனால், இருவரும் மீண்டும் ஒன்று சேர்வதாக இருந்தால் மட்டுமே தன்னை நேரில் பார்க்க வர வேண்டும் என மோடி கண்டிப்புடன் கூறி விட்டார். இந்த தகவல் இருவரிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடியை சந்திக்க முடியாவிட்டாலும், வரும் 12ம் தேதி சென்னை வரும் அமித்ஷாவை, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக சந்திக்க திட்டமிட்டுள்ளனர் என்றார்….

Related posts

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை போட்டு பாமகவினர் வீதி வீதியாக பிரசாரம்: கலாய்க்கும் நெட்டிசன்கள்

கோவை, நெல்லை மேயர்கள் திடீர் ராஜினாமா