தமிழகத்தில் 40 ஆயிரம் காவலர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும்

திண்டிவனம், ஜூலை 12: தமிழகத்தில் 40 ஆயிரம் காவலர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார். இது குறித்து அவர் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் கூறியதாவது: சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை, கடலூர் மற்றும் சேலத்தில் அதிமுக நிர்வாகிகள் இருவர் படுகொலை செய்யப்பட்டது, கடலூரில் பாமக நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல் ஆகியவற்றால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். தமிழ்நாடு காவல்துறைக்கு 40 ஆயிரம் கூடுதல் காவலர்கள் நியமிக்க வேண்டும். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுவதற்கு போதிய காவலர்கள் இல்லாததும் ஒரு முக்கிய காரணமாகும். தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் இரண்டாம் நிலை காவலர்கள் தொடங்கி காவல்துறை தலைமை இயக்குனர் வரை ஒரு லட்சத்து 10 ஆயிரம் காவலர்கள் மட்டும் தான் உள்ளனர்.

ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 150 காவலர்கள் இருப்பது போதாது. இதை ஒரு லட்சம் மக்களுக்கு 200 காவலர்கள் என்ற விகிதத்தில் உயர்த்த வேண்டும். 40 ஆயிரம் காவலர்களை புதிதாக நியமிக்க வேண்டும். டி.என்.பி.எஸ்சிக்கு உடனடியாக தலைவரை நியமிக்க வேண்டும். 25 மாதங்களாக தலைவர் இல்லாமல் இயங்கும் டி.என்.பி எஸ்.சியில் 16 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆனால், 9 உறுப்பினர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள். அதிலும் மூத்த உறுப்பினர் ஜோதி சிவஞானம் செப்டம்பர் 23 அன்று ஓய்வு பெறுவதால் ஆணையம் முடங்கிவிடும்.மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால், சிங்காநல்லூரில், கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற உயிரிழப்புகளுக்கு மதுவிலக்கு தான் ஒரே தீர்வு. இதற்கு தமிழக அரசு உடனடியாக மதுவிலக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் புதிய பாலப்பணியை அதிகாரிகள் ஆய்வு

போதை மாத்திரை விற்ற ரவுடி மீது குண்டாஸ்

கர்நாடகா தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை நிலுவையின்றி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை