தமிழகத்தில் 2ம் கட்ட தளர்வில்லா ஊரடங்கு எதிரொலி; வீடு வீடாக மளிகை பொருள் வினியோகம் துவங்கியது: கடைகள் முன் கூடினால் நடவடிக்கை என எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் காய், பழங்களை போன்று நடமாடும் வாகனங்கள் மூலம் மளிகை பொருட்களை விற்பனை செய்ய இன்று முதல் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆர்டர் கொடுத்த மக்களுக்கு வீடு தேடி வந்து பொருட்களை மளிகைக்கடைக்காரர்கள் டெலிவரி செய்து வருகின்றனர். கடைகளுக்கு நேரில் சென்று பொருட்கள் வாங்க அனுமதி இல்லாததால் கடைகள் முன்பு மக்கள் கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது. ஆனாலும் தொற்றின் வேகம் தீவிரமாக இருந்ததால், அதை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 24ம் தேதி முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதையடுத்து தொற்று பரவலை மேலும் கட்டுப்படுத்தும் வகையில் 2ம்கட்ட தளர்வுகளற்ற ஊரடங்கு வரும் ஜூன் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது காய்கறி, பழங்கள் மக்களின் வீடு தேடி சென்று விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், மளிகை பொருட்களும் வீடு தேடி சென்று விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இதன்மூலம் அந்தந்தப் பகுதிகளில் உள்ள மளிகை கடை வியாபாரிகள் தங்களது வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகள் மூலம் இன்று முதல் தெருத்தெருவாக சென்று மளிகை பொருள்களை விற்பனை செய்யலாம். இதற்கு சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அனுமதி பெற வேண்டும். மளிகை பொருட்களை மக்களின் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்ய, ஏற்கனவே லைசென்ஸ் பெற்று மளிகை கடை நடத்துபவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த உத்தரவு இன்று காலை அமலுக்கு வந்தது. இதையடுத்து, மளிகை பொருட்கள் வாங்குவதற்கு அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகே உள்ள கடைகளுக்கு சென்று தங்களுக்கு தேவையான பொருட்கள் குறித்து சீட்டு எழுதி கொடுத்து விட்டு வந்தனர். பலர் கடைக்காரர்களின் செல்போன் எண்ணை பெற்றுக் கொண்டு, அதன் மூலம் மளிகைப் பொருட்கள் குறித்த ஆர்டர் கொடுத்தனர். கடைக்காரர்கள் மளிகை பொருட்களை சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கே சென்று டோர் டெலிவரி செய்தனர். குறிப்பாக, சூப்பர் மார்க்கெட்டுகளில் ஏராளமான ஆர்டர் குவிந்தது. அவர்களும் ஒவ்வொரு ஆர்டருக்கான பொருட்களை சரிபார்த்து ஆட்கள்  மூலம் டெலிவரி செய்தனர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மளிகைப் பொருட்களை விநியோகிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதால், கடைகளுக்கு யாரும் நேரில் வர வேண்டாம் என்று கடைக்காரர்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் கேட்டுக் கொண்டனர். முதல் நாள் என்பதால் பொதுமக்களில் சிலர் கடைகளுக்கு நேரில் சென்று வாங்க முயன்றனர். அவர்களிடம், தேவையான பொருட்களை ஆர்டர் கொடுத்தால் உடனடியாக வீடுகளுக்கு நேரில் கொண்டு வந்து விடுவோம் என்றும், தங்களை செல்போன் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று அவர்கள் செல்போன் எண்களை கொடுத்தனர். கடைகளுக்கு நேரில் வந்தவர்களிடம் மளிகை பொருட்களுக்கு சீட்டை பெற்றுக் கொண்டு அனுப்பி வைத்தனர். இதனால் மளிகை பொருட்கள் காலை முதல் தங்களுக்கு தங்க தடையின்றி கிடைத்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.  தமிழகம் முழுவதும் மளிகை பொருட்கள் டோர் டெலிவரி கிடைத்து வருவதால் மக்கள் வெளியில் தேவையில்லாமல் நடமாடக்கூடாது என்றும், கடைகள் முன்பு கூட்டம் கூடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் நடமாடும் வாகனங்கள் மூலமும் மளிகை பொருட்கள் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால், வீடுகளுக்கு முன்பு அவர்கள் விற்பனையில் ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சி பகுதிகளில் 7,500க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மாநகராட்சியில் லைசென்ஸ் பெற்று கடை நடத்தி வருகின்றனர். இந்த கடைக்காரர்களுக்கு மட்டும் இருசக்கர வாகனங்களில் சென்று பொருட்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உரிய அனுமதி இல்லாமல் மளிகை பொருட்கள் விற்பனையில் ஈடுபடக்கூடாது என்றும், அதேபோன்று தெருக்களில் வைத்து விற்பனையில் ஈடுபட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மக்களை கூட்டமாக கூட்டி விற்பனையில் ஈடுபட்டாலும் நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.கூடுதல் தடுப்பூசிகளை பாஜ தலைவர்கள் பெற்றுத் தரவேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்; தமிழகத்துக்கு மொத்தம் 96 லட்சம் தடுப்பூசி வந்துள்ளது. இதில் 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு 13 லட்சம் தடுப்பூசி வந்துள்ளது. இன்னும் 12 லட்சம் தடுப்பூசி வரவேண்டும். 87 லட்சம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 5 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. தமிழகத்துக்கு தேவையான கூடுதல் தடுப்பூசிகளை மத்திய அரசிடம் இருந்து தமிழக பாஜ தலைவர்கள் கேட்டு பெற்றுதரவேண்டும். கொரோனா தடுப்பு பணியில் கோவை மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக வானதி சீனிவாசன் கூறியுள்ளார். இது உண்மைக்கு மாறானது. கோவையில் மட்டும் 6 லட்சம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழக மக்கள் மீது வானதி சீனிவாசனுக்கு உண்மையில் அக்கறை இருந்தால் மத்திய அரசிடம் இருந்து கூடுதல் தடுப்பூசிகளை பெற்றுதரவேண்டும். மளிகை பொருட்கள் விற்பனையாளர்கள் இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் மாநகராட்சி இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்’ என்றார்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை