தமிழகத்தில் முதன் முறையாக எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் பொதுப்பிரிவினருக்கு கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்குகிறது: பிப்.3ம் தேதி மாலை 5 மணி வரை கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்யலாம்

சென்னை: தமிழகத்தில் முதன் முறையாக எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறுகிறது. இதையடுத்து பிப்ரவரி 3ம் தேதி மாலை 5 மணி வரை கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்யலாம் என்று மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த 27ம் தேதி சென்னை, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்றது. முதல் நாள் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் 73 பேர் கல்லூரிகளில் சேருவதற்கான அனுமதி ஆணையை பெற்றனர். அதைத் தொடர்ந்து 28ம் தேதி நடந்த இரண்டாவது நாளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வில் 541 பேருக்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டது.பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வில் அதிக அளவில் மாணவர்கள் பங்கேற்பார்கள் என்பதால் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வை ஆன்லைனில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி பொதுப் பிரிவு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு https://www.tnhealth.tn.gov.in/, https://tnmedicalselection.net/ ஆகிய சுகாதாரத்துறை இணையதளங்கள் மூலம் இன்று நடைபெறுகிறது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 24,949 பேர் இடம் பெற்றுள்ள நிலையில், பொதுப்பிரிவு கலந்தாய்வில் பங்கேற்க தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 1 முதல் 10,456 பேருக்கு, நீட் மதிப்பெண் 710 முதல் 410 வரை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இன்று காலை 10 மணி முதல் பிப்ரவரி 3ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்யலாம். அதைத்தொடர்ந்து வரும் 6ம் தேதி சான்றிதழ் சரிப்பார்ப்புக்கு அழைப்பு விடுக்கப்படும். 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். 12ம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்படும். 13ம் தேதி கல்லூரிகளில் சேருவதற்கான ஆணையை இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். மேலும் 14ம் தேதி முதல் 17ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு கல்லூரிகளில் சேர்ந்துவிட வேண்டும். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு இணையதளங்களை பார்த்து தெரிந்துக் கொள்ளலாம். தமிழகத்தில் முதல் முறையாக எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறுகிறது. இதையடுத்து தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இது தொடர்பாக மருத்துவ மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு செயலாளர் வசந்தாமணி கூறுகையில், ‘‘எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீடு கலந்தாய்வு கடந்த 19ம் தேதி தொடங்கியது. இந்த கலந்தாய்வின் முடிவுகள் நேற்று அல்லது இன்று காலை வெளியாகும். அந்த முடிவுகள் வெளியானதும் நாங்கள் பொதுப் பிரிவு கலந்தாய்வை திட்டமிட்டபடி ஆன்லைனில் தொடங்கி விடுவோம். அப்படி அகில இந்திய கலந்தாய்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டால், இங்கும் கலந்தாய்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது’’ என்றார். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை