தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தெருக்களில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும்: விசிக எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தெருக்களில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ பேரவையில் வலியுறுத்தினார். சட்டப்பேரவையில் நேற்று, 2021-22ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீது நடைபெற்ற பொது விவாதத்தில் காட்டுமன்னார்கோவில் சிந்தனைசெல்வன் (விடுதலை சிறுத்தைகள்) பேசியதாவது: கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிப்பதுபோன்று பதவி உயர்விலும் இடஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும். இஸ்லாமியர்கள் கேட்டு வரும் 3.5 சதவீத இடஒதுக்கீட்டு கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும். கிறிஸ்தவ ஆதி திராவிடர்கள் பிசி பட்டியலில் இருக்கிறார்கள். அவர்களை பட்டியலினத்தில் சேர்க்க ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும்.முதியோர்கள் மற்றும் முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் பயன்பெறுகிறவர்கள் பயன்படும் வகையில் `உடன்பிறப்பு உணவகம்’ அமைத்து, அவர்களின் பசியை போக்க வேண்டும். க்களை தேடி அரசு என்ற இந்த திட்டத்தை கோட்டாட்சியர் அலுவலகத்திலும் செயல்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சாதி பெயர்கள் தெருக்களில் இன்றும் இருக்கிறது. இந்த அடையாளங்களை எல்லாம் நீக்க வேண்டும். ஆதிதிராவிடர்களுக்காக நடத்தப்படும் பள்ளிகள் பின்தங்கி உள்ளது. அவற்றை மாதிரி பள்ளிகளாக தரம் உயர்த்தி நடத்த வேண்டும். நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடும் இந்த நேரத்தில் கூட, அம்பேத்கர், காந்தி, பெரியார் போன்ற தலைவர்களின் சிலைகள் இரும்பு கூண்டுக்குள் தான் இருக்கிறது. இந்த இரும்பு கூண்டுகளை அகற்ற வேண்டும். இந்த சிலைகளை அரசு வளாகங்களில் நிறுவ வேண்டும். வீராணம் ஏரியை தூர்வாரி, விவசாயத்தின் பாசன பரப்பை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்: கடந்த 10 ஆண்டுகளாக வீராணம் ஏரி தூர்வாரப்படவில்லை. தளபதி ஆட்சியில் வீராணம் ஏறி தூர்வாரப்படும். இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்