தமிழகத்தில் தடுப்பூசி செலுத்த தொடங்கிய பின் ஏற்பட்ட கொரோனா உயிரிழப்புகளில் 84% பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள்: மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய பின் ஏற்பட்ட கொரோனா உயிரிழப்புகளில் 84 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகளள் தெரிவித்தனர். ஒமிக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் நிலையில் வைரஸ் தொற்றில் இருந்து மக்களின் உயிரை காக்கும் அரணாக தடுப்பூசி செயல்பட்டு வருகிறது. இதையடுத்து தொற்றில் இருந்து மக்களை காக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு வாரமும் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள், வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தி பணிகளில் ஈடுபட்டு வருகிறது.அதேபோன்று 13 மெகா தடுப்பூசி முகாம் மூலம் 3  லட்சத்து 32 ஆயிரத்து 442 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.இந்த 13 முகாம்களில் மட்டும் 2 கோடியே 43 லட்சத்து 24 ஆயிரத்து 138 பேருக்கு தடுப்பூசி  போடப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 85 சதவீதம் பேர் முதல் தவணையும், 60 சதவீதம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். இந்த 13 முகாம்கள் மூலம் சென்னையில் மட்டும் 20,800 இடங்களில் முகாம்கள்  நடத்தப்பட்டு 19 லட்சத்து 71 ஆயிரத்து 950 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் அரணாக தடுப்பூசி செயல்படுகிறது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய பின் ஏற்பட்ட கொரோனாவால் உயிரிழந்தவர்கள் 84 சதவீதம் பேர்  தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து  தமிழகத்தில் 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற இலக்குடன் சுகாதாரத்துறை செயல்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் இதுவரை  7.54 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் 81 சதவீதம் பேர்  முதல் தவணையும், 49 சதவீதம் பேர் இரண்டாவது தவணையும் செலுத்தியுள்ளனர். அதன்படி 60 வயதுக்கு மேல் முதல் தவணையாக 56 சதவீதம் பேர், இரண்டாம் தவணையாக 37 சதவீதம் பேரும் செலுத்தியுள்ளர். 45 வயது முதல் 60 வயதினரில் முதல் தவணையாக 90 சதவீதம் பேரும், இரண்டாவது தவணையாக 61 சதவீதம்  பேரும், 18 வயது முதல் 45 வயதினரில் முதல் தவணையாக 76 சதவீதம் பேரும், இரண்டாவது தவணையாக 42 சதவீதம் பேரும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 94 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்பது  தெரியவந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அதிக பட்சமாக 78.61 சதவீதம்  பேரும், மயிலாடுதுறையில் குறைந்தபட்சமாக 33.89 சதவீதம் பேரும்,  சென்னையில் 60 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் கர்ப்பிணிகள், வயதானவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் ஒமிக்ரானில் இருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசி அவசியம் என்பதால் தடுப்பூசி செலுத்தாதவர்கள் அனைவரும் கண்டிப்பாக  தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் அதிக பட்சமாக 78.61% பேரும், மயிலாடுதுறையில் குறைந்தபட்சமாக 33.89% பேரும், சென்னையில் 60% பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை